திரை நேர்காணல்

சினிமாவுக்கு வந்தாலும் பட்டிமன்றத்தை விடமாட்டேன்!

தா.பிரகாஷ்

திருமணத்திற்குப் பிறகு பட்டிமன்றத்தில் பேசத்தொடங்கிய அன்ன பாரதி இன்று வந்து நிற்கும் இடம் மிகப் பெரியது. சன் டிவி காமெடி ஜங்ஷன் மூலமாக ஸ்டேண்ட் அப் காமெடியனாக புதிய பாதையில் நடக்கத் தொடங்கி பட்டிதொட்டியெங்கும் புகழ். அவரிடம் பேசியபோது, ‘‘நான் திருநெல்வேலி பொண்ணுங்க. வீரம் விளைந்த மண் என்றால் அது திருநெல்வேலி தான்'' என ஆரம்பத்திலேயே பட்டாசு போல வெடிக்க ஆரம்பித்தார்.

‘திருநெல்வேலியில் உள்ள அய்யாசாமி நினைவு நடுநிலைப்பள்ளியில் தான் ஆறாம் வகுப்பு வரை படித்தேன். அதற்குப் பிறகு பாளையங்கோட்டையில் படித்தேன். சிறிய வயதில் சுட்டித்தனம் அதிகம். பயங்கரமான சேட்டைகள் செய்வேன். இதெல்லாம் இருந்தாலும் கூட எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டியில் ரொம்ப ஆர்வமாக இருப்பேன். இதற்கு முக்கிய காரணம் அம்மா தான். அவங்களுக்கு தமிழ் மீதான பற்று அதிகம். அதனால் தான் எனக்கு அன்ன பாரதி என்று பெயர் வைத்தார். அம்மாவிற்கு டீச்சராக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. அதனால், என்னைப் பெரிய அளவிற்குக் கொண்டு வரவேண்டுமென நினைத்தார். அதையே நானும் நினைத்ததால் அம்மாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி.

பள்ளிக்கூடம் படிக்கும் போதே போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பிடிக்கும். எந்தப் போட்டியாக இருந்தாலும் ஆசிரியர் ராமபூதத்தன் சார், என்னைக் கேட்காமலேயே என்னுடைய பெயரைக் கொடுத்திடுவார். எல்லாப் போட்டிகளுக்கும் அம்மா தான் எந்த தயக்கமும் இன்றி என்னை கூட்டிச் செல்வார். அப்பா எப்படி என்றால், போட்டிக்கெல்லாம் என்னை அழைத்து செல்லமாட்டார். ஆனால் பரிசை மட்டும் அவர் கையில் கொடுக்க வேண்டும் என நினைப்பார்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த உடனேயே எனக்குத் திருமணமாகிவிட்டது. தாய் மாமாவை திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்ததற்கு பள்ளிக்கூட ஆசிரியர்கள் எல்லாம் வருத்தப்பட்டார்கள். ஆனால் அம்மா மட்டும் திருமணத்திற்கு பிறகும் என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

திருமணம் முடித்த பிறகு தான் யூஜி, பிஜி, எம்.பில் என எல்லாவற்றையும் படித்தேன். மூன்று பட்டப்படிப்பையும் காலேஜுக்கு ரெகுலராக சென்றுதான் படித்தேன். என்னுடைய கணவர் தான் இதற்கு முக்கிய காரணம். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்வதற்குக் கடமைப்பட்டுள்ளேன். யூஜி&யில் எலக்ட்ரானிக்ஸ் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். கணவரும் அதே துறையில் பட்டம் பெற்றிருந்தார் என்பதால்.

கல்லூரி நூலகத்தில் ஒரு மாணவர் மூன்று புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம். நான் எடுக்கும் மூன்று புத்தகங்களில் இரண்டு தமிழ் புத்தகங்களாகத் தான் இருக்கும்.

நீயெல்லாம் எதுக்கும்மா இந்த துறையை எடுத்த, பேசாம தமிழ் துறையில் போய் படிச்சிருக்கலாம் என்பார்கள் பேராசிரியர்கள். தமிழ் மீதான ஆர்வம் இயல்பாக இருந்த காரணத்தால் தமிழ் புத்தகங்களை தேடி தேடிப் படித்தேன்.

திருமணமாகிக் கருவுற்றிருக்கும் போது, ராமபூதத்தன் சார் வீட்டுக்கு வந்து, நீ பட்டிமன்றத்தில் கலந்துக் கொண்டால் என்னம்மா? எவ்வளவு நல்லா பேசக் கூடிய பெண் நீ! என்றார். அப்போது அவர் பட்டிமன்றங்களில் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன். பட்டிமன்றம் என்ற ஒன்று இருப்பதே அவர் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன்.

ராமபூதத்தன் சார் சொல்வதை கேட்டு அம்மாவும், நானும் யோசித்து பார்த்தோம்.

‘நீ மொத அந்த குழந்தையை பெத்து முடிம்மா. அப்புறம் உன்னை பட்டிமன்றங்களுக்கு கூட்டிப்போகிறேன்' என்றார், ராமபூதத்தன் சார்.

அவர் இப்படி சொன்னது வியப்பாக இருந்தாலும், அதை அன்றைக்கே மறந்துவிட்டேன். அதற்குப் பிறகு, குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ராமபூதத்தன் சாரிடமிருந்து போன் வந்தது. இன்னைக்கு ஒரு பட்டிமன்றம் இருக்குமா. ஒரு பேச்சாளர் வரவில்லை. முன்னாடியே நான் சொன்னேன்ல... நீ வந்து இன்னைக்கு பேசணும்' என்றார்.

சார் வேற இப்படி சொல்லிவிட்டாரே, கைக்குழந்தையை வைத்துக் கொண்டு எப்படிப் போய் பேச முடியும் எனக் குழம்பிப் போனேன். பிறகு பேசலாம் என்று முடிவெடுத்தேன். அன்னைக்குக் கிடைத்த மேடை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத மேடை. என்னுடைய முதல் மேடை அது. அந்த பட்டிமன்றத்தின் தலைப்பு ஒரு ஆணின் வெற்றிக்கு பெரும் காரணம் தாயா? தாரமா? என்பது தான். நான் தாய் என்ற தலைப்பில் பேசினேன். அப்போது, ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்' என்ற பாடலை பாடியதற்காக முதியவர் ஒருவர் நூறு ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த நூறு ரூபாயை இன்றும் பொக்கிஷமாக வைத்துக் கொண்டிருக்கிறேன். பட்டிமன்றத்தில் கலந்து கொண்டதற்காக எனக்கு கொடுத்த தொகை எவ்வளவு என்று பார்த்தால் ஐந்நூறு ரூபாய். என்னுடைய பேச்சைக் கேட்ட சக பேச்சாளர்கள் என்னைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், என்னுடைய தொலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டு, அடுத்தடுத்த பட்டிமன்றங்களில் பேச அழைத்தனர். நிறைய அழைப்புகள் வந்தன.

தொலைக்காட்சியில் மதுரை முத்து சாருடன் கலந்து கொண்ட எல்லா மேடைகளுக்கும் எனக்கு மறக்க முடியாத மேடைகள். எல்லோருக்கும் மதுரை முத்து சாரின் நகைச்சுவை பிடிக்கும். கையில் ஸ்கிரிப்ட் இல்லாமலேயே பேசுவார். அவரைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். நானும் மதுரை முத்து சாரும் சேர்ந்து நிகழ்த்திய நிறைய நகைச் சுவைகளை நிறைய பேர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

மதுரை முத்து சாரைப் பார்த்துத்தான் கையில் ஸ்கிரிப்ட் இல்லாமல் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். அப்படித்தான் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வந்தேன்.

டிக் டாக்கில் நிறைய வீடியோக்கள் பதிவேற்றுவேன். அப்படித்தான் டோல்கேட் பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோவை பதிவேற்றியிருந்தேன். அந்த வீடியோ பயங்கர வைரலாகியதால், அந்த டிக் டாக் கணக்கையே முடக்கிவிட்டார்கள். ஏனெனில், மத்திய அரசைப் பற்றிப் பேசியிருந்ததால். அதேபோல் ஆன்லைன் ஷாப்பிங் பற்றிப் பேசியிருந்ததால் மற்றொரு டிக் டாக் கணக்கும் முடக்கப்பட்டது.

சன் டிவியில் காமெடி ஜங்ஷன் நிகழ்ச்சி பண்ணும் போதே சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய வந்தது. ஆனால், அப்போது சினிமாவிற்கு வருவதற்குக் கொஞ்சம் பயம் இருந்தது. இப்போது சினிமாவிற்குள் வருவதற்கு முக்கிய காரணம் கொரோனா தான். கொரோனாவில் வேலைகள் எதுவும் இல்லாமல் இருந்தேன். அந்த நேரம் பார்த்து இயக்குநர் சுசீந்திரன் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் மதுரைப் பக்கத்தில் நடக்கும் என்றார்கள். வீட்டிலிருந்து படப்பிடிப்பிற்கு சென்று வருவதற்கு ஈசியாக இருக்கும் என்பதால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இப்போது சிவ சிவா, குற்றம் குற்றமே இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளேன். தற்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

சினிமாவில் எனக்குப் பெரிய ஆசை என்னவென்றால், சூர்யா சார் நடிப்பில் வெளிவந்த சிங்கம்&1, சிங்கம்&2, சிங்கம்&3 போல், நானும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். போலீஸ் கதாபாத்திரம் பயங்கரமாகப் பிடிக்கும். அதேபோல், படையப்பாவில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம், பாகுபலியில் வரும் சிவகாமி கதாபாத்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை.

இப்போது சினிமாவிற்குள் வந்தாலும் பட்டிமன்றத்தை விட மாட்டேன், தொடர்ந்து மக்களின் முன் பேசிக்- கொண்டே இருப்பேன்.'' என்கிறார் நம்பிக்கையுடன்.

செப்டம்பர், 2021