திரை நேர்காணல்

சண்டைக்காட்சி வைக்கச் சொன்ன ஹீரோக்கள்!

வசந்தன்

என் படம் ஒரு குடும்பத்தை இணைத்திருக்கிறது தெரியுமா? அதைப் பார்த்த இளைஞர் ஒருவர் நெகிழ்ந்துபோய், ‘எனது பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை. உங்களது படம் பார்த்தபிறகு என் தாத்தா பாட்டியை தேடி செல்கிறேன் என்றார்,'' என்று உணர்வோடு சொல்கிறார் மதுமிதா.

சமீபத்தில் வெளியான கேடி படத்தின் இயக்குநர். முன்னதாக வல்லமை தாராயோ, 'கொலை கொலையா முந்திரிக்கா', தமிழ் மற்றும் தெலுங்கில் ‘மூணே மூணு வார்த்தை' ஆகிய படங்களை இயக்கியவர்.

 ‘‘ஒரு நாளிதழில் தலைக்கூத்தல் சம்பவம் தொடர்பான செய்தியை படித்தேன். அந்த சம்பவம் விருதுநகரில் நடந்தது.  வயதானவர்களை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிர்வாக்கி இறக்கச் செய்வார்கள். அப்போதுதான் இப்படி ஒன்று இருப்பதே எனக்கு தெரியும். அதிலிருந்து உருவானதுதான் கேடி கதை. தொடர்ந்து அதைப்பற்றிய பல்வேறு விஷயங்களை தேடி ஆய்வு செய்தேன். திரைக்கதை, வசனம் போன்றவற்றில் கதைக்களத்தின் நிலவியல் தன்மையை இழைக்க சபரிவாசன் எனக்கு பெரிதும் உதவினார். அவர்தான் கேடி படத்திற்கு திரைக்கதை எழுதினார். படத்துக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. இப்போது ஒரு பெரிய நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியில் படம் இயக்கப்போகிறேன்,'' என்று மகிழ்வோடு சொல்கிறார்.

‘‘நான் பிறந்தது சென்னையில், நான்காம் வகுப்பு வரை அங்கு தான் படித்தேன். பிறகு அப்பாவின் வேலை நிமித்தமாக குடும்பத்தோடு இந்தோனேஷியாவுக்கு குடிபெயர்ந்தோம். பள்ளி கல்வியை அங்குதான் படித்தேன். இளங்கலை படிப்பை சிங்கப்பூரிலும், முதுகலையை அமெரிக்காவிலும் படித்தேன். நாங்கள் இந்தோனேஷியா சென்றிருந்தாலும் அப்பாவின் தமிழ் உணர்வு கொஞ்சமும் மாறவே இல்லை. தமிழ்ச் சங்கம், தமிழ் விழாக்களை அங்கு அப்பா நடத்தியிருக்கிறார்.

அங்கே தொலைக்காட்சி, மற்ற பொழுதுபோக்கு தளங்கள் எல்லாம் அந்நாட்டு மொழியில் இருக்கும். தமிழ் மொழியை கேட்கவே வாய்ப்பிருக்காது. எனவே தமிழகம் வந்து செல்லும்போதெல்லாம் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், பாடல் கேசட்டுகளை அம்மா வாங்கி செல்வார்கள். அவ்வாறு விடுமுறை நாட்களில் கே. பாலச்சந்தர், மணிரத்னம் படங்களை குடும்பத்தோடு ரசித்து பார்த்து அதைப்பற்றி நிறைய பேசிக்கொள்வோம். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை அதிகமாக கேட்போம். வெளிநாட்டில் இருந்தாலும் அதிகமாக படங்கள் பார்த்ததும், பாடல்கள் கேட்டதும் தமிழில் தான். இதுவே எனக்கு சினிமா மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது.

2007-ல் அமெரிக்காவில் முதுகலை படிப்பை முடித்தவுடன் சென்னைக்கு திரும்பினேன். எந்த நாட்டுக்கு சென்றாலும் இந்தியா தான் நம் நாடு, அங்குதான் திரும்பி செல்ல வேண்டுமென என் அப்பா உறுதியாக சொல்லியிருந்தார். நாங்கள் சென்ற நாடுகள் அந்நாட்டு பாஸ்போர்ட்டை வழங்க முன்வந்தும் நாங்கள் இந்திய பாஸ்போர்ட்டை மாற்றவே இல்லை.

சிங்கப்பூர், அமெரிக்காவில் இருக்கும்போது சில குறும்படங்களை இயக்கினேன். சிங்கப்பூரில் இயக்கிய குறும்படத்திற்காக எனக்கு அந்நாட்டு விருது கிடைத்தது. சென்னை வந்தபிறகு சினிமா துறையில் இயங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஒருகட்ட படப்பிடிப்பில் மட்டும் உதவி இயக்குநராக பணியாற்றினேன். சுமார் மூன்று மாதங்கள் கிடைத்த அந்த அனுபவமே எனக்கு தமிழ் சினிமாவின் பல்வேறு போக்குகளை புரியவைத்தது. பெண் உதவி இயக்குநர் என்றாலே அவரை காஸ்ட்யூம் சார்ந்த வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் நிலை இருந்தது. அவருக்கு எந்த பிரிவில் பணியாற்ற ஆர்வமிருக்கிறது என்பதையெல்லாம் கேட்பதில்லை.

நான் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்ததால் அந்த செல்வாக்கை கொண்டு எளிதாக சினிமாவில் நுழைந்துவிட்டேன், நாங்களெல்லாம் 10 வருடங்கள் காத்திருந்தோம் என்பது போன்ற மனநிலையோடு சிலர் என்னை அணுகுவார்கள். இவையெல்லாம் சவாலான விஷயங்களாக இருந்தன. முழுதாக ஒருபடத்தில் கூட பணியாற்றவில்லை என்றாலும் நான் சிந்திக்கும் ஒரு கதையை என்னால் படமாக உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. பிறந்த வீட்டில் எனக்கு எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தார்களோ கணவரும், புகுந்த வீட்டிலும்கூட அப்படித்தான் இருந்தார்கள். பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தில் பணியாற்றிய பிறகு திருமணமாகி அமெரிக்கா சென்றேன். அங்கு இருந்த காலத்தில் யோசித்தது தான் வல்லமை தாராயோ கதை. படத்தை இயக்க முடிவெடுத்து மீண்டும் சென்னைக்கு வந்தேன். பெண் மைய கதாபாத்திரம் கொண்ட படம், பெரிய ஹீரோ இல்லை, கமர்ஷியல் அம்சங்கள் இல்லை. இப்படி ஒரு படம் வசூல் அளவில் லாபம், நஷ்டம் எதை சந்தித்தாலும் அதனை நாமே ஏற்கவேண்டுமெனக் கூறி அப்பாவே தயாரிக்க முன்வந்தார். சில ஹீரோக்களிடம் கதை சொன்னபோது பாடல் வைக்க முடியுமா, சண்டைக் காட்சி வருமா என்றார்கள். அப்போதுதான் சாயா சிங் - பார்த்திபன் நடிக்க முடிவானது. முதல் படம் இயக்கும்போது அனைத்தையும் முன்பே திட்டமிட்டு படமாக்கினேன்.

எல்லா துறைகளிலும் இருப்பதுபோன்ற அதே பாகுபாடுதான் திரைத்துறையிலும் பெண்களுக்கு இருக்கிறது. சம்பளம், வேலை நேரம் அனைத்திலும் வேறுபாடு இருக்கும். ஒரு விருது நிகழ்ச்சிக்கு போகிறோம் என்றால்கூட கதாநாயகர்களுக்கு முதலிலேயே ஆரவாரத்துடன் விருது அளித்துவிட்டு, கதாநாயகிகளுக்கு கடைசியாக யாரும் இல்லாத நேரத்தில் விருதளிப்பார்கள். ஆண் இயக்குநர் என்றால் செட்டில் இருப்பவர்கள் எல்லோரும் முதல்நாளிலிருந்தே அவரது கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் தெரியும். ஆனால் ஒரு பெண் என்னதான் முறையாக திட்டமிட்டு, முதிர்ச்சியுடன் இயக்கினாலும் அவர்களை முதிர்ச்சியற்ற ஒருவராகவே பார்ப்பார்கள். பெண்ணாக இருக்கும்போது நம் மீது குழுவினருக்கு நம்பிக்கை ஏற்பட நம்மை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. சரியான திட்டமிடலால் 55 நாட்களில் படப்பிடிப்பை முடித்தேன்.

அதன் பிறகுதான் இவ்வளவு முதிர்ச்சியுடன் படப்பிடிப்பை ஒழுங்கமைப்பது கடினம், நீங்கள் அதனை சிறப்பாக செய்திருக்கிறீர்கள் என்று எனது ஒளிப்பதிவாளர் கூறினார். பெண் - ஆண் என்கிற விஷயம் தற்செயலானது. படத்தின் இயக்குநர் என்றால் அந்த வேலையை அவர் சரியாக செய்ய வேண்டும், அதில் இருவருக்கும் வேறுபாடில்லை. படம் வெளியாக அதிக அளவில் திரையரங்கம் கிடைக்கவில்லை. பிறகு படம் பார்த்த மக்களின் நேர்மறையான கருத்துகளின் மூலம் திரையரங்குகள் அதிகரித்தன. வல்லமை தாராயோ படத்துக்கு தமிழக அரசு விருது கிடைத்தது மகிழ்ச்சிதான் என்றாலும், அதைவிட வேறொன்று எனக்கு மனதிற்கு நெருக்கமாக அமைந்தது.

வல்லமை தாராயோ திரைப்படத்தின் சில காட்சிகளை தென்காசி அருகே இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் படமாக்கினோம். அதில் இருக்கும் குழந்தைகளுக்கு அப்பா ஒரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் படம் பார்த்த போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி, ''அக்கா கடவுள் ஏன் எங்கள இப்படி படச்சாருனு பல நேரங்கள்ல யோசிப்போம், ஆனா உங்க படத்துல கை கால் நல்லா இருக்க மனுஷங்க எங்கள மாதிரி இருக்கவங்கள பார்த்து இந்த வாழ்க்கைய எப்படி பயனுள்ளதா மாத்தணும்னு காமிச்சிருக்குறது எங்க எண்ணத்தை மாத்துது. எங்க வாழ்க்கைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குனு புரிஞ்சுது'' என்று கூறினார். அவரது அந்த வார்த்தைகளைவிட பெரிய அங்கீகாரம் எதுவுமில்லை என நினைக்கிறேன்!'' என்று உருக்கமாக முடிக்கிறார் மதுமிதா!

பிப்ரவரி, 2020.