ஆண் தேவதை 
திரை நேர்காணல்

குழந்தை வளர்ப்பு என்கிற கடமையைத் தட்டிக் கழிக்கிறோம்!

சரோ லாமா

வளசரவாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இயக்குநர் தாமிராவின் மேசை மீது அசோகமித்திரன், மஹா ஸ்வேதா தேவி, மாண்ட்டோ, தோப்பில் முஹம்மது மீரான் என மகத்தான படைப்பாளிகளின் புத்தகங்கள் இறைந்து கிடக்கின்றன. தன் முதல் படமான ரெட்டைச்சுழியில் தமிழின் இரண்டு பெரும் இயக்குநர்களை இயக்கிய தாமிரா இப்போது ஆண் தேவதையுடன் வருகிறார்.

‘ஆண் தேவதை' என்ன மாதிரியான படம்?

படத்தைப் பற்றிப் பேசும் முன்பு படத்தின் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைப்பற்றிக் கொஞ்சம் பேசிவிடலாம்.  ஆண் தேவதை படத்தை நண்பர்களின் கூட்டு முயற்சியில் உருவான படம் என்று சொல்லலாம். சிகரம் சினிமாஸ், சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகிய என் நண்பர்களுடன் நானும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளேன். என் பிற நெருக்கமான திறமைசாலி நண்பர்களான இயக்குநர் சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன், கலை இயக்கம் ஜாக்சன்  என்று கைகோர்த்துக் கொண்டு முழு பலத்தோடுதான் இந்தப்படத்தை இயக்கியுள்ளேன். தமிழ் சினிமாவில் இன்னமும் நாம் நல்ல படம் என்றால் மகேந்திரனின் உதிரிப்பூக்களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை மீறிய படம் ஒன்றை தமிழில் உருவாக்க வேண்டும் என்பது என் நெடுநாள் கனவு. அதற்கான தொடக்கமாகத்தான் ஆண் தேவதை படம் இருக்கும்.

சரி, இப்ப படத்தைப்பற்றிச் சொல்லுங்கள்..

தமிழ் சினிமாவில் நாயக பிம்பங்களை உயர்த்திப் பிடிக்கும் சினிமாக்களே அதிகம் வெளி வருகின்றன. பி.யூ.சின்னப்பா, பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என இப்போது வரை, சினிமா நாயகர்களின் அதி சாகசத்தை திரையில் நிகழ்த்திக் காட்டுவதாகவே உள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் சினிமாவில் நடிப்பவர்களுக்கு அரசியல் ஆசையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகும் ஆசையும் வந்து விடுகிறது. இங்கு எடுக்கப்படும் எல்லா சினிமாக்களும் ஒரு கலைப்படைப்பாக இல்லாமல் மிக வேக வேகமாக நகரும், ஒரு பரபரப்பான நுகர்வுப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. அமைதியாக பொறுமையுடன் உட்கார்ந்து ஒரு சினிமாவைப் பார்த்தே பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. அப்படி இல்லாமல் சக மனிதர்களில் ஒருவரை படத்தின் மையக் கதாபாத்திரமாக்கி உருவாக்கப்பட்டதுதான் ஆண் தேவதை. தேவதை என்பதை அழகுடன் மட்டுமே சம்பந்தப்படுத்தி வைத்திருக்கிறது இந்தச் சமூகம். அப்படி இல்லாமல் தேவதைத் தன்மை என்பது ஆணுக்கும் உண்டு என்பதையும், அன்பு மட்டுமே இந்த வாழ்வின் ஆதாரமான அம்சம் என்பதையும் சொல்லும் படம் இது. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதானே வாழ்க்கை என்பது? இதில் ஆணாதிக்கமும் தவறு, பெண்ணாதிக்கமும் தவறு.  சேர்ந்து வாழ்தல், விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, கூட்டு வாழ்வின் மகிழ்ச்சி இதுதான் கணவன் மனைவி உறவுக்கான இடம். மோனிகா, கவின் பூபதி என இரண்டு குழந்தைகள் மிக அற்புதமாக நடித்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் தான் இந்தப்படத்தின் ஜீவன் என்று சொல்லலாம். கதாநாயகியாக ரம்யா பாண்டியன், ஜோக்கர் படத்திற்குப்பின் இதில் சிறப்பாக நடித்துள்ளார்.

ஆண் தேவதை படம் பேசும் பிரதான பிரச்னை என்ன?

படத்தில் நேரடியாக அல்லது வெளிப்படையாக நான் அரசியலைப் பேசவில்லை. ஆனால் நம் அன்றாட வாழ்வு என்பது கார்ப்பரேட் மயமாகிவிட்டது. நாம் பயன்படுத்தும் கேஸ், குடிக்கும் குடிநீர், உணவு என எல்லாமும் கார்ப்பரேட் வசமாகிவிட்டது. இந்தியா ஒரு விவசாய நாடு என்று இப்போது நம்மால் சொல்லிக்கொள்ள முடியாது. தொண்ணூ றுகளுக்குப் பின்பு மக்களின் பொருளாதாரம் மேம்பட்டிருப்பதாக அரசு சொல்லலாம். ஆனால் அதெல்லாம் ஒரு மாயை. கடன் என்னும் கார்ப்பரேட் எப்படி நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையின் கழுத்தை நெரிக்கிறது என்பதுதான் ஆண் தேவதை படத்தின் பிரதான மையம். ஆனால் வெறுமனே பிரச்சாரமாக இல்லாமல் அது சார்ந்த வாழ்க்கையைச் சொல்வதன் மூலமாக அது கலையாகவும் இந்தப் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது.  

இயக்குநர் தாமிரா

இரண்டு குழந்தைகள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் என்று சொன்னீர்கள்..

குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான உறவே மாறிப்போயிருக்கிறது. உயிரற்றதாக, ஒரு கொடுக்கல் வாங்கல் விஷயமாகத்தான் இந்த உறவு இருக்கிறது. குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் தரவேண்டிய தனிப்பட்ட கவனிப்பும் அக்கறையும் இல்லையென்றே சொல்லலாம்.  குழந்தைகளுக்கு அன்பைத் தருவதற்குப் பதிலாக வீடியோ கேம்ஸையும், மொபைல் ஃபோன்களையும் கொடுத்துவிட்டோம். குழந்தை வளர்ப்பு என்கிற அற்புதமான கடமையை எல்லாப் பெற்றோர்களும் சம்பாதிக்கிறேன் என்கிற பெயரில் தட்டிக்கழிக்கிறோம். இன்று நாம் நம் குழந்தைகளுக்கு என்ன தருகிறோமோ அதையேதான் அவர்கள் நமக்குத் திருப்பித் தருவார்கள். இன்று நாம் அவர்களை குழந்தைகள் காப்பகத்தில் விட்டோமெனில் நாளை நம்மை அவர்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்புவார்கள். புறக்கணிக்கப்பட்ட அன்பு உங்களைப் புறக்கணிக்கும். குழந்தைகள் மனநிலையை பெற்றோர்கள் பொருட்படுத்துவது இல்லை. குழந்தைகளின் மனநிலை சார்ந்து முடிவெடுப்பதும் இல்லை. பெரியவர்களின் முடிவுக்குத்தான் குழந்தைகளைக் கட்டுப்பட வைக்கிறோம். வீட்டில் எடுக்கும் முடிவுகளில் குழந்தைகளின் கருத்தையும் கட்டாயம் கேட்கவேண்டும். அதை இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறோம். 

தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்டை கவனிக்கிறீர்களா?

தமிழில் வருடத்துக்கு 120 படங்களுக்கு மேல் வெளியாகின்றன. அதில் நல்ல படங்கள் என்று ஐந்தாறு தேறலாம். அல்லது அதிகபட்சமாக பத்து படங்கள் அந்த வகைமைக்குள் வரலாம். மீதி படங்கள் ஏன் நல்ல படங்களாக இல்லை? நாம் படைப்பையோ அல்லது படைப்பாளியையோ பின் தொடருவதில்லை. மாறாக அப்போதைக்கு அப்போதைய ட்ரெண்ட் எனச் சொல்லப்படுகிற வணிக வெற்றியைத்தான் பின்தொடர்கிறோம்.  மகேந்திரன் சாரின் ‘முள்ளும் மலரும்,' ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்' போன்ற படங்களைத் தாண்டி நல்ல படங்கள் தமிழில் வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என்பது வருத்தத்திற்குரியதுதான்.

தமிழில் நல்ல படங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..

திரைக்கதையாசிரியர் என்ற ஒரு முக்கியமான வகைமையே தமிழில் இல்லை என்று சொல்லலாம். சினிமாவின் கேப்டன் இயக்குநர்கள் தான் என்றாலும் திரைக்கதையாசிரியர் என்பவர் எடிட்டரைப்போலவே படத்தின் முதுகெலும்பைப் போன்றவர். திரைக்கதை வசனத்தை வேறு ஒருவர் எழுதும் பட்சத்தில், இயக்குநர் படத்தை எப்படிக் காட்சிப்பூர்வமாக உருவாக்கலாம் என்று திட்டமிடலாம். எல்லாவற்றையும் ஒருவரே செய்வது என்பது போதை. இந்தப் போதையிலிருந்து தமிழ் சினிமா மீள வேண்டும். தமிழில் நல்ல படங்கள் உருவாக திரைக்கதையாசிரியர்கள் அதிகம் உருவாகி வரவேண்டும்.

பிப்ரவரி, 2018.