திரை நேர்காணல்

கமல் முதல் ரஜினி வரை...

சரோ லாமா

பி சி. ஸ்ரீராமின் சிறந்த மாணவர்களில் ஒருவர் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு. மகளிர் மட்டும், ஹேராம், ஆளவந்தான், காஞ்சிவரம் போன்ற ஆகச் சிறந்த தமிழ்ப் படங்களின் ஒளிப்பதிவாளர். இந்தித்திரை உலகில் அதிகம் விரும்பப்படும் ஒளிப்பதிவாளர். சூர்யா நடித்த 24 படத்தின் ஒளிப்பதிவுக்காக தேசிய விருது வாங்கியவர். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் அடுத்த ரஜினி படத்தின் ஒளிப்பதிவாளர். இன்னும் சொல்ல  நிறைய இருக்கிறது.. திரையுலக பயணத்தில் ஒளிப்பதிவாளராக 25ஆம் ஆண்டை நெருங்கும் திருவுடன் ஒரு நீண்ட உரையாடல்...   

என் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான்மட்டும்தான். எங்களுடைய குடும்பத்தில் எல்லோரும் அதிகம் படித்தவர்கள். ஆசிரியர்கள். நன்றாகப் படித்து ஒரு பெரிய தாவரவிய-லாளனாக ஆகவேண்டும் என்பதுதான் என்னுடைய பெரும் கனவு. மேல்நிலை படிப்பில் தாவரவியல் பாடம் தவிர்த்து மற்ற எல்லாப் பாடங்களிலும் ஜஸ்ட் பாஸானேன், அவ்வளவுதான். மதிப்பெண் பட்டியலைப் பார்த்த என் தலைமை ஆசிரியர் ‘பாட்டணியைத் தவிர எல்லாத்திலேயும் மார்க் கம்மி. உங்க குடும்பத்திலே எல்லாரும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள். உங்க பெரியப்பாகிட்டதான் நான் படிச்சேன்' என்று முகம் சுளித்தார்.  பி.எஸ்.சி தாவரவியல் படிப்பில் கல்லூரியில் இடம் கிடைத்தது. பிடித்த பிரிவு என்பதால் மிகவும் சந்தோஷமாகப் படித்தேன். கல்லூரிப் பேராசிரியர்களின் விசாலமான அறிவும், சூழலியல் தொடர்பான நிறைய விஷயங்களும், சுற்றுச்சூழலை நாம் எப்படி பாழ்படுத்தி வருகிறோம் என்ற சுரணை உணர்வும் எனக்கு கல்லூரியில் இருந்து கிடைத்ததுதான். படித்து முடித்து ஒரு காட்டிலாகா அதிகாரியாகவோ அல்லது காடு சார்ந்த ஆராய்ச்சியாளனாகவோ ஆக வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இயற்கையும் இயற்கைச் சூழலும் என்னை மகிழ்ச்சியான மனிதனாக மாற்றும் மாயாஜாலம் கொண்டவை என்பதை நான் அப்போதே உணர்ந்திருந்தேன்.   

கல்லூரியில் படிக்கும்போதே என் நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டில்தான் நான் தங்கிப்படித்தேன். பல் மருத்துவரான அவர் பெயர் மயில்வாகனன். அவருக்குப் புகைப்படக்கலையில் ஈடுபாடு உண்டு. புகைப்படக் கலையின் மீதான ஆர்வம் அவரிடம் இருந்துதான் எனக்குத் தொற்றிக்கொண்டது. வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் அவர் மேற்குத்தொடர்ச்சி மலை, சேர்வராயன் மலை என நிறைய பயணம் போய்வருவார். காடுகளில் பூச்சிகள், செடிகள், மலர்கள் என அனைத்தையும் அவர் புகைப்படம் எடுப்பார். ஒரு நாள் அவர் காடுகளுக்கு என்னையும் அழைத்துக்கொண்டு போனார். அவருடன் சேர்ந்து நானும் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல புகைப்படக் கலை என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மூன்று வருட கல்லூரிப் படிப்பு முடிந்தது. பி.எஸ்.சி,யில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அந்தக் கல்லூரியில் எனக்கு எம்.எஸ்.சி படிக்க இடம் கிடைத்தது. என்னுடைய உறவினர் அவருடைய மேற்படிப்புக்காக சென்னைக்குப் போய்விட்டார். அவர் போகும்போது எனக்கு நிகான் கேமரா ஒன்றைத் தந்துவிட்டு போனார். மிகப் பழைய கேமரா அது. அதில்நான் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். இதனிடையே நான் எம்.எஸ்.சி சேர்ந்தேன். மூன்று மாதங்கள் சென்றது. 

இந்த இடத்தில் நான் புகைப்படக்கலைஞர் ராமு சாரைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் என் உறவினர் மயில்வாகனனுக்கு நல்ல நண்பர். கல்லூரி நேரங்கள் தவிர்த்து நான் அவரது ஸ்டுடியோவில்தான் இருப்பேன். ராமு சாரின் சுதா போட்டோ ஸ்டுடியோவுக்குப் பக்கத்தில்தான் நான் தங்கி இருந்தேன். திறமையும் மேதமையும் ஒருங்கே கொண்டவர் அவர். உலகின் மிகச் சிறந்த போட்டோகிராபர்களில் ஒருவர் என்று அவரைச் சொல்வேன். அவருக்கு கல்வி அறிவு இல்லை. ஸ்டூடியோவில் எடுபிடி வேலைக்குச் சேர்ந்து மெல்ல மெல்ல புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டு உருவானவர் அவர். எங்கள் சுற்றுவட்டாரத்தில் அவர் புகைப்படம் எடுக்கவேண்டி கல்யாணத்தை தள்ளி வைத்தவர்கள் உண்டு. அவர் கல்யாணம் முடிந்து ஆறு மாதம் கழித்து அல்லது குழந்தை பிறந்தபிறகு கூட புகைப்படங்களை பிரிண்ட் போட்டு தருவார். ஆனாலும் மக்கள் சலிக்காமல் காத்திருப்பார்கள்.  

எம்.எஸ்.சி படிப்பில் சேர்ந்தாலும் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக படிப்பில் ஆர்வம் குறைந்துகொண்டே வந்தது. கடமைக்கு வகுப்புக்கு சென்று வந்துகொண்டிருந்தேன். ஒருநாள் வகுப்பில் எனக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது. நோட்டுப்புத்தகத்தில் ஒரு வெள்ளைக்காகிதத்தை கிழித்து கல்லூரியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை எழுதினேன். என் துறைத்தலைவர் ப்ரடெரிக் சாரிடம் கடிதத்தைக் கொடுத்தேன். அவர் என்னைக் கல்லூரி முதல்வரிடம் அனுப்பினார். படிப்பைத் தொடராமல் என்ன செய்யப் போகிறாய் என்று என்னிடம் கேட்டார்கள். நான் புகைப்படக் கலைதான் என் எதிர்காலம் என்று சொன்னேன். அவர் கிடைத்த நல்ல வாய்ப்பை வீணடிக்கிறாய் என்று என்னைக் கடுமையாகத் திட்டினார். நான் முடிவு செய்துவிட்டேன், மாற்றமில்லை என்று தீர்மானத்துடன் சொன்னேன். எனக்கு ஏதோ மனநலம் கெட்டுவிட்டது என்று நினைத்துக் கொண்டு கல்லூரியில் இருந்து என்னை விடுவித்தார்கள். 

கல்லூரியில் இருந்து வெளியேறியதும் நான் நேராக ராமு சாரின் ஸ்டியோவிற்குச் சென்றேன். உங்களிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்று சொன்னேன். அவர் அதற்கு அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்ளவில்லை. ‘‘தெரிந்த பையன் என்பதாலெல்லாம் உன்னை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள முடியாது. என்னிடம் வேலைக்குச் சேர்ந்தால் நீ தேநீர் வாங்கிக்கொடுப்பதில் இருந்துதான் உன் வேலையை ஆரம்பிக்க வேண்டும். எனக்கு என் மகன், என் தம்பி, உறவினர் நண்பர் என்பதெல்லாம் முக்கியமில்லை. புகைப்படக் கலைதான் எனக்கு எப்போதும் முக்கியம்'' என்றார். நான் எதுவும் பேசாமல் கடைக்குப் போய் தேநீர் வாங்கிக்கொண்டு வந்தேன். அப்படித்தான் அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். நிகான் கேமராவில் புகைப்படங்கள் எடுப்பேன். ஏற்கனவே போட்டோகிராபியில் கொஞ்சம் முன் அனுபவம் இருந்ததால் சீக்கிரம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடிந்தது.  சரி அடுத்த கட்டத்துக்கு போகவேண்டும், என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சென்னையில் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து ஒளிப்பதிவு படிக்கவேண்டும் என ஆர்வம் வந்தது. அந்த வருடமே ஒளிப்பதிவு துறையில் சேர விண்ணப்பித்திருந்தேன். ஆனால் சீட் கிடைக்கவில்லை. யாராவது பரிந்துரை செய்தால் கல்லூரியில் சேரலாம் என்று சொன்னர்கள். ஆனால் சென்னையில் எனக்கு யாரையும் தெரியாது. அடுத்த வருடமும் விண்ணப்பித்தேன். கிடைக்கவில்லை.  

இடைப்பட்ட காலங்களில் அக்காவின் கணவர் ஊரான நாமகிரிப்பேட்டையில் அவருக்குச் சொந்தமான தியேட்டரில் கொஞ்சகாலம் போனது. தினமும் படங்கள் பார்ப்பேன். அப்பா நான் ஏழாவது படிக்கும் போது இறந்துபோனார். கல்லூரி முடிக்கும் வரை உறவினர் வீட்டில்தான் தங்கிப் படித்தேன். அக்காவின் கணவர்தான் எனக்கு தேவையான உதவிகள் செய்வார். சென்னைக்கு அடிக்கடி வந்துபோகும் செலவுகள் உட்பட எல்லாவற்றையும் அவர்தான் பார்த்துக்கொண்டார். 

என்னுடைய உறவினர் ஒருத்தர் சென்னையில் சினிமா வினியோகஸ்தராக இருந்தார். அவரைப்போய் சந்தித்தேன். அவர் எடிட்டர் ஒருவரிடம் என்னை உதவியாளராகச் சேர்த்துவிட்டார். அவர் பெயர் கௌதமன். அவருடைய எடிட்டிங் பணிகள் ஆர்.கே.ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருக்கும்.  அவர் வேலை செய்யும் படத்தில் என்னை உதவி ஒளிப்பதிவாளனாக சேர்த்துவிடச்சொல்லி அவரை நச்சரித்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர் ‘என் கணவர்' என்று ஒரு படம் தொடங்கினார். அந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் தனபால். அவரிடம் சேர முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. 

சென்னை கொஞ்சம் பழகிவிட்டது. ஆனால் சினிமா பார்க்கக் கையில் காசு இருக்காது. வேறு என்ன செய்வது. படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. அப்போதெல்லாம் நான் தினமும் பிரிட்டிஷ் நூலகம், அமெரிக்க தூதரக நூலகம் சென்றுவிடுவேன். அங்கு ஒளிப்பதிவு, இயக்கம் சம்பந்தமான நூல்களை படிப்பேன். 

பி.சி.ஸ்ரீராம் சாரை அவரது உறவினர் ஒருவரின் மூலமாக சந்தித்தேன். அது 1985ஆம் வருடம். என்னைக் கூர்மையாக கவனித்த அவர் என்ன விஷயம் என்றார். உங்களிடம் உதவியாளனாகச் சேரவேண்டும் என்றேன். ஏற்கனவே நிறைய பேர் பணியாற்றுகிறார்கள். ரெண்டு வருஷம் கழித்து வாங்க என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். நான் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன். மறுபடியும் பிரிட்டிஷ் நூலகம், அமெரிக்க நூலகம். புத்தகங்கள், படிப்பு சினிமா என இரண்டு வருடங்கள் நகர்ந்தது. 

மிகச் சரியாக இரண்டு வருடம் கழித்து மீண்டும் பி.சி. சாரைச் சென்று சந்தித்தேன். என்ன விஷயம் என்று கேட்டார். உங்களிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்றேன். அதே பதில். என்னிடம் நிறைய பேர் உதவியாளராக பணியாற்றுகிறார்கள் என்றார். இதே பதிலைத்தான் இரண்டு வருடம் முன்பு என்னிடம் சொன்னீர்கள் என்றேன். அப்படியா என்று கேட்டவர், சரி ஒரு வருடம் கழித்து வாருங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். நான் மீண்டும் விடாக்கண்டனாக மிகச் சரியாக ஒரு வருடம் கழித்து அவரிடம் சென்று வாய்ப்பு கேட்டேன். இந்த முறையும் பி.சி.சார் அதே பதிலைத்தான் சொன்னார். நான் மூன்று வருடமாக அவரிடம் உதவியாளனாகச் சேர முயற்சி செய்வதைச் சொன்னேன். கண்களைச் சுருக்கி அப்படியா என்று கேட்டவர், சரி மூன்று மாதம் கழித்து வாருங்கள் என்று சொல்லிவிட்டார். மறுபடியும்  மூன்று மாதம் கழித்து அவரைச் சந்தித்தேன். இந்த முறை என்னைப்பற்றிய தகவல்களைக் கேட்டவர் என்னை உட்காரச் சொன்னார். சரி உங்களுக்கு என்ன தெரியும் என்று என்னிடம் கேட்டார். புகைப்படம் எடுக்கத் தெரியும் என்று சொன்னேன். புகைப்படத்திற்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்டார். நான் புகைப்படம் அசையாத சிங்கிள் ஃப்ரேம். திரைப்படம் 24 ஃப்ரேம், அசையும் பிம்பங்கள் என்று பதில் சொன்னேன். அரை நிமிடம் யோசித்தவர் உள்ளே இருந்த உதவியாளர் ஜீவாவை அழைத்தார். ஜீவாவிடம் இவர் இனி நம்முடன் பணியாற்றப்போகிறார் என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். 

அதன் பின்னர் பி.சி.சாரின் விளம்பரத் தயாரிப்பு நிறுவனமான ஜேயெஸ் அசோசியேட்ஸ் அலுவலகத்துக்கு மூன்று மாதம் தினமும் செல்வேன். அங்கு எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடந்துகொண்டிருக்கும். அங்கு வேலை செய்பவர்களிடம் ஒளிப்பதிவு பற்றி, எடிட்டிங் பற்றி ஓயாமல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பேன். அங்கிருப்பவர்கள் என் தொல்லை தாங்க முடியாமல் பி.சி. சாரிடம் புகார் சொன்னார்கள். மூன்று மாதத்திற்குப் பிறகு என்னுடைய தீவிர ஆர்வத்தைப் பார்த்தவர் தன் குழுவில் இணைந்து வேலை செய்ய அனுமதித்தார். இரண்டே வருடங்களில் அவரது விளம்பரப் பட நிறுவனத்தில் எனக்கு ஒளிப்பதிவு செய்ய வாய்ப்பு தரும் அளவுக்கு நான் கற்றுத்தேர்ந்தேன். 

1990 களின் தொடக்கத்தில் தேவர் மகன் படத்தின் முதன்மை உதவி ஒளிப்பதிவாளராக நான் பணியாற்றினேன். அந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு அரிய வாய்ப்பு என்றுதான் சொல்லவேண்டும். பரதன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், பி.சி.ஸ்ரீராம், இளையராஜா என பல மேதைகளின் கூட்டணியில் உருவான படம் அது. படப்பிடிப்பின்போது நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. மகளிர் மட்டும் படத்துக்கு கமல் சார் முதலில் பி.சி. சாரைத்தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அழைத்தார். அவர் என்னைப் பரிந்துரை செய்து, வாய்ப்பு வாங்கித் தந்தார். என் பயணம் தொடங்கியது. 

அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் கமல் சாரின் காதலா காதலா படத்தில் வேலை செய்தேன்.

அது 1999 ஆம் வருடம். காதலா காதலா படம் வெளியான பின்பு ஒருநாள் கமல் ஸார் என்னிடம் திரைக்கதைப் புத்தகத்தை தந்து படிக்கச் சொன்னார். அந்தத் திரைக்கதை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் அதுவரை அவ்வளவு நுண்ணிய தகவல்களுடன் எழுதப்பட்ட திரைக்கதையை படித்ததில்லை. ஹாலிவுட் திரைக்கதையைப்போல எல்லா விவரங்களுடனும் அந்தத் திரைக்கதை இருந்தது. கதாபாத்திரங்கள், காட்சிக் கோணங்கள், ஒளி அமைப்பு, உடை பற்றிய விவரங்கள் என எல்லாமும் அந்தத் திரைக்கதையில் இருந்தது. நான் படித்துவிட்டு நல்லா இருக்கு சார், ஹாலிவுட் ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கு என்று சொல்லி திருப்பித் தந்தேன். இந்தப் படத்தை தமிழில் எடுக்கப்போகிறீர்களா அல்லது ஆங்கிலத்தில் எடுக்கப் போகிறீர்களா என்று அவரிடம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே தமிழில்தான் எடுக்கணும் என்றார்.  பின்னர் அவர் ஸ்கிரிப்ட் பிடித்திருக்கிறதா என்று கேட்டார். நான் ஆம் என்று தலையாட்டினேன். அப்ப நீங்கதான் ஒளிப்பதிவாளர் என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சி!

ஹேராம் படத்தில் நிகழ்காலத்தைக் கருப்பு வெள்ளையிலும், கடந்தகாலத்தை வண்ணத்திலும் படம் பிடிக்க கமல் சார் விரும்பினார். ஆனால் கருப்பு வெள்ளை ஃப்லிம் ரோல்கள் கிடைப்பது கடினம். கமல் சாரிடம் இதைச் சொன்னபோது அவர் அதெல்லாம் எனக்குத் தெரியாது. படத்தின் நிகழ்காலக் காட்சிகளை கருப்பு வெள்ளையில்தான் படம்பிடிக்க வேண்டும் என்று கறாராகச் சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் கலர் ஃபிலிம் பயன்படுத்தி படத்தை எடுத்து முடித்தோம். பின்னர் கருப்பு வெள்ளைக்கு மாற்றினோம். திரைப்படக் கல்லூரி ஆசிரியர் ரமேஷ் அவர்களின் உதவியோடு கலர் நெகடிவ்வை கருப்பு வெள்ளைக்கு மாற்றுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்தோம். ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இயங்கிவந்த டீலக்ஸ் லெபாரட்டரி என்னும் பழைய கருப்பு வெள்ளை நெகடிவ் புராசசிங் லேப் - ஐ கண்டுபிடித்து கலர் பிலிம்மில் படம் பிடித்ததை கருப்பு வெள்ளைக்கு மாற்றினோம். படத்தின் ரஷ் பார்த்த கமல் சார் வியந்து போனார். எப்படி வண்ணத்தில் படம் பிடித்தத்தை கருப்பு வெள்ளையில் மாற்றினீர்கள் என்று கேட்டார். விவரத்தைச் சொன்னவுடன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் செய்வததைவிட இது பிரமாதமாக இருக்கிறது என்று சொன்னார்.  

ஹே ராம் படப்பிடிப்பு முடிந்ததும் ரஷ் பார்த்தவர்கள் எல்லாம் படத்தில் ஒளிப்பதிவு சரியாக வரவில்லை என்று சொன்னார்கள். இவ்வளவு பெரிய படத்தை ஏன் புது ஒளிப்பதிவாளர்கிட்ட கொடுத்தீங்க? யாராவது பெரிய ஒளிப்பதிவாளரை வைத்து வேலை செய்திருக்கலாமே என்று கமல் சாரிடம் சொன்னார்கள். ஆனால் கமல் சார் எல்லோரிடமும் இந்தப்படத்தில் திரு என்ன வேலை செய்திருக்கிறார் என்று திருவுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். படத்தோட டபுள் பாசிட்டிவ் எப்படி வரப்போகுதுன்னு பாருங்க என்று பதில் சொன்னார். என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைதான் அந்தப்படத்தின் ஒளிப்பதிவின் தரம் என்பதை படம் பார்ப்பவர்கள் உணரமுடியும். 

படம் பிடிக்கும்போது நெகட்டிவ்வில் நிறைய பரிசோதனை முயற்சிகளைச் செய்தேன். படப்பிடிப்பில் நான் செய்த பரிசோதனை முயற்சிகள் அவுட்புட்டில் தெரிய வேண்டும் என்றால் ஸ்கிப் ப்ளீச் (குடுடிணீ ஆடூஞுச்ஞிட)என்ற புராசஸ் செய்ய வேண்டும். மேலும் நெகட்டிவில் பதிவாகியுள்ள நீல வண்ணத்தை நீக்க வேண்டும். ஆனால் லேப்&ல் அதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நான் அவ்வளவாக பிரபலமாகாத ஒளிப்பதிவாளர். நான் சொன்னதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.  என்ன செய்வது என்று யோசித்தேன். பி.சி.   சாருக்கு போன் செய்தேன். அவர் உடனே கிளம்பி லேப்&க்கு வந்தார். லேப்&ல் இருந்த சிவராமன் சாரை அழைத்து ஒரு ரீல் மட்டும் திரு சொல்றமாதிரி ப்ராசஸ் செய்து பிரிண்ட் செய்து கொடுங்கள் என்றார். வேலை முடிந்து அந்த ரீல் மட்டும் பி.சி.சாருக்கு போட்டுக்காட்டப்பட்டது. அவர் அந்த ரீலை முழுமையாகக்கூட பார்க்கவில்லை. நான்கைந்து ஷாட்டுகள் மட்டுமே பார்த்தார். சட்டென எழுந்து வெளியே வந்தார். சிவராமன் சாரிடம் சென்று திரு எப்படி வேணும்னு கேட்கிறாரோ அப்படியே புராசஸ் செய்து பிரிண்ட் ரெடி பண்ணிக்கொடுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவர் சொன்னால் வேலை நடக்கும். அவர் சொன்ன மாதிரியே மொத்த படமும் ப்ராசஸிங் செய்யப்பட்டு படத்தின் டபுள் பாசிட்டிவ் பிரிண்ட் கிடைத்தது. அந்த பிரிண்ட்தான் தேவி தியேட்டரில் ப்ரிவியூ காட்சியில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் ஒளிப்பதிவைப் பற்றி பிரமாதமாக சிலாகித்துப் பேசினார்கள். சர்வதேசத் தரம் என்று சேகர் கபூர் மாதிரியான இந்தித் திரையுலக ஜாம்பவான்கள் வியந்து பாராட்டினார்கள். நான் பிரிவியூவுக்குப் போகவில்லை. கமல் சார் போன் செய்து ஏன் பிரிவியூவுக்கு வரவில்லை என்று கேட்டார். படம் பார்த்தவர்கள் உங்கள் ஒளிப்பதிவைப் பற்றி வியந்து பாராட்டினார்கள் என்று சொன்னார். இந்தப் படம் இப்படி வரும்னு நான் கொஞ்சம்கூட எதிர் பார்க்கவில்லை என்று சொன்னவர் ஒரு வரலாற்றுப் படம் இப்படியான தரத்தில் வருவது பெரிய விஷயம் என்று மனம் திறந்து பாராட்டினார். படத்தை ஒளிப்பதிவு எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது என்றார் மகிழ்ச்சியுடன்.  

ஹேராம் படத்தில் வேலை செய்தது ஒரு கனவு போல இருக்கிறது. அந்தப்படத்தில் வேலை செய்யும்போது எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் கமல் சார் இயக்குநராக களமிறங்கிய படத்தில் நான் ஒளிப்பதிவாளராக வேலை செய்தது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பதை இப்போது நினைத்துக்கொள்கிறேன். கமல் சார் அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் பாராட்டிவிடமாட்டார். அவரது பாராட்டு மட்டுமில்லாமல் இந்திய அளவில் ஹே ராம் படம் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் பெற்றுத்தந்தது.   

இதன் பின்னர் கமல் சாருடன் ஆளவந்தான் படத்தில் பணிபுரிந்தேன். ஆளுமையான கமாண்டோ வீரன், தலைகீழ் ஆளுமையுள்ள மனநிலை பிசகிய நந்து என இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களின் மோதல்தான் ஆளவந்தான். அந்தப்படத்துக்காக Mணிtடிணிண இணிணtணூணிடூ கீஐஎ உணுதடிணீட்ஞுணt – ஐ இந்தியாவிலேயே முதன்முதலாக நாங்கள் பயன்படுத்தினோம். அப்போதைக்கு அதிகம் செலவு பிடித்த தொழில்நுட்பம் அது. மலேசியாவிலிருந்து ஸ்பெஷலாக வரவழைத்து நந்து சிறைக் காட்சிகள், கடவுள் பாதி மிருகம் பாதி பாடல், கட்டிடத்தின் உச்சியில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் உட்பட ஆளவந்தான் பல காட்சிகளை Motion Control தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான் படம் பிடித்தோம். இரண்டு கமல் கதாபாத்திரங்களுக்கு வெவ்வேறு லென்ஸ்கள் பயன்படுத்தினோம். ஆளவந்தான் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக ஒரு மாதம் ஆஸ்திரேலியாவில் தங்கிப் பணிபுரிந்தேன். 

பிரியதர்ஷன் சாருடன் இணைந்து லேசா லேசா, காஞ்சிவரம், இந்திப்படங்கள் என வரிசையாக வேலை செய்திருக்கிறேன். நான் இந்தியில் தொடர்ச்சியாக ஏழெட்டு வருடங்கள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்ததிற்கு அவர்தான் காரணம். சூர்யா நடித்த 24  திரைப்படம் என் கேரியரில் மிக முக்கியமான படம். அந்த மாதிரி பேண்டஸி, சயின்ஸ் பிக்‌ஷன் படம் எப்போதாவது ஒருமுறைதான் நமக்கு கிடைக்கும். Set Design, Lighting எல்லாமே புதுசா இருக்கணும். சயின்ஸ் பிக்‌ஷன் திரைக்கதையைப் பார்வையாளனுக்கு புரியிற மாதிரி சொல்லணும். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களைப் பிரதிபலிக்கும் மூன்று கதாபாத்திரங்கள். 24 படத்தின் கதையை என்னிடம் இயக்குநர் விக்ரம் குமார் சொன்னதும் சரியான தயாரிப்பாளர் கிடைக்கணும்னுதான் நான் நினைச்சேன். அப்புறம் சூர்யாவே தயாரிக்க முன்வந்தார். படத்தின் புரடெக்‌ஷன் டிசைன் டீமின் உழைப்பு அசாதாரமானது. அமித் ராய், சுப்ரதா சக்ரபர்த்தி, ஸ்ரேயாஸ் கேடேகர் மாதிரியான திறமையான கலை இயக்குநர்கள் கடுமையா உழைத்து படத்தை தாங்கிப் பிடிச்சாங்க. ஒளிப்பதிவில் தெரியும் பிரம்மாண்டம் என்பது கலை இயக்குநர்கள் உருவாக்கிய செட் டிசைனாலதான் சாத்தியமானது. 24 படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதும், கலை இயக்கத்துக்கான தேசிய விருதும் கிடைச்சது. சூர்யா சாருக்கு கிடைக்கலன்றது கொஞ்சம் வருத்தம்தான். 

ஹே ராம் படத்திலேயே தேசிய விருதை தவறவிட்டேன் நான். அப்புறம் காஞ்சிவரம் படத்துக்கு கிடைக்கும்ணு எதிர்பார்த்தேன். இப்ப 24 படத்துக்காக தேசிய விருது வாங்கினேன். ரொம்ப சந்தோஷமா உணர்ந்தேன். 

இது டிஜிட்டல் யுகம். கேமரா எல்லாருடைய கையிலும் வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் இப்போது ஒரு குறும்படம் எடுத்துவிட முடியும். சினிமா சுயமாக கற்றுக்கொள்ளும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படி குறும்படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்த கார்த்திக் சுப்பாராஜ் மாதிரியான இளம் இயக்குநர்களுடன் வேலை செய்வதும் ஒரு சவாலான விஷயம்தான். அவருடைய மெர்க்குரி படத்திற்கும், ஒளிப்பதிவாளராக என் முதல் படமான மகளிர் மட்டும் படத்திற்கும் 24 வருட இடைவெளி உண்டு. மகளிர் மட்டும் படத்தில் நான் ரொம்ப ஆர்தோடக்ஸாக இருந்தேன். கமல் சார்தான் நிறைய புதிய பரிசோதனை முயற்சிகளைச் செய்ய என்னைத் தூண்டினார். அந்த உற்சாகம் எனக்குப் பல கதவுகளைத் திறந்துவிட்டது என்பேன். என் பயணம் அங்கு ஆரம்பித்ததுதான். அடுத்த பயணம் ஆரம்பமாகிவிட்டது. அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி சாரின் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளேன். சவாலும் மகிழ்ச்சியும் நிரம்பியதாக எனது சினிமா பயணம் தொடர்கிறது.

ஜூன், 2018.