இயக்குநர் ராம்பாலா 
திரை நேர்காணல்

”கடன் வைத்து காணாமல்போன தயாரிப்பாளர்”

நேர்காணல் : இயக்குநர் ராம்பாலா

சபீதா ஜோசப்

நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக இருந்து நாயகன் ஆனபோது அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் முதல் வெற்றிப்படமாக அமைந்தது தில்லுக்குத் துட்டு.

 அதன் இயக்குநர் ராம்பாலா தான் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற தில்லுக்கு துட்டு பாகம் இரண்டையும் இயக்கியவர். இதன் மூன்றாம் பாகம் கூட வரும் என்கிறார்கள். இயக்குநர்கள் இராமநாராயணன், கே.பாக்யராஜ் ஆகியோரிடம் சினிமாவை கற்றவர் ராம்பாலா. விஜய் டிவி லொள்ளுசபா வின் வாத்தியார், இப்போது டாவு படப்பிடிப்பில் இருக்கிறார். அவரிடம் பேசினோம்;

 'எனக்கு சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம், கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு சினிமா பார்க்கிறது , அதைப்பற்றி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது ரொம்ப பிடிக்கும். அதனாலே சினிமா, கதை, பாட்டு வசனம், டான்ஸ் எல்லாம் பேசுவதைப் பார்த்து நீ சினிமாவுக்கு போயிடு என்று நண்பர்களின் வாழ்த்தையும் , ‘நீ உருப்படவே மாட்டே‘ என்று புரஃபசர்களின் அர்ச்சனையையும் பெற்றவன்.

என் அண்ணன் வெள்ளியங்கிரி இசையமைப்பாளர்  சங்கர் கணேஷிடம் உதவியாளராக இருந்தார். அவர் ஊருக்கு வந்திருந்த போது சம்பவத்தைச் சொன்னார்.  விதி படத்திற்கு ரீரிக்கார்டிங் பண்ணும்போது ஒரு சீனை நாங்கள் எல்லாரும் பார்த்துக் கைதட்டி ரசித்தோம். அது போஸ்ட்மேனாக ஒரு காட்சியில் பாக்யராஜ் வரும் காட்சி. அப்போ பஞ்சாயத்துல இருக்கிற பெரிசுங்க கிட்ட ஒரு பத்தினிபேரைச் சொல்லுங்க என்பார் அவங்க கண்ணகி, சீதை என்பார்கள், ஆனால் பாக்யராஜ் என்ன சொன்னார் தெரியுமா? என்று நிறுத்தினார். 'ஏன் உங்க அம்மா பத்தினி இல்லையா? அக்கா பத்தினியில்லையா 'என்றுதானே அவர் கேட்டிருப்பார் என்றேன் நான். அவர் அசந்துவிட்டார்.  ஆமா இத தான் அவரும் சொல்வாரு, டேய் உனக்கு சினிமா நல்லா வருது மெட்ராசுக்கு வா.  சினிமாவுல சேர்த்துவிடுறேன்' என்றார் அண்ணன். எனக்கு சிறகு முளைச்சது மாதிரி மகிழ்ந்தேன்.

அப்போ அம்மா குறுக்கிட்டு 'நீ ஒருத்தன் சினிமாவுல இருக்கறது போதும், அவனாவது வேற வேலைக்கு போகட்டும்‘ என்று சொல்லி விட்டார். அப்போதைக்கு நான் அமைதியாக இருந்தாலும், பிறகு அண்ணனை துரத்திக்கிட்டே இருந்தேன்,  என்னை  யாராவது டைரக்டரிடம் சேர்த்து விடும்படி சங்கர் கணேஷ் சாரிடம் சொல்லு என்று நச்சரிக்க ஆரம்பித்தேன்.

சென்னைக்கு வா பார்க்கலாம் என்றார், வந்தேன். எந்த டைரக்டரிடமும் உடனே வேலை கிடைக்கவில்லை. 'கொஞ்ச நாள் சங்கர்கணேஷ் சாரிடம் இரு, யாரிடமாவது, சேர்த்து விட சொல்றேன்னு அண்ணன் சொல்ல, சங்கர்கணேஷ் வீட்டில் கொஞ்சநாள் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்தேன்.

'இப்போதைக்கு ஒரு ஒளிப்பதிவாளர்கிட்ட சேர்த்து விடுறேன். ஒளிப்பதிவைக் கத்துக்கோ பிறகு ஏதாவது டைரக்டரிடம் சொல்றேன்' என்று சங்கர் கணேஷ் சார் சொல்ல, அப்படியே ஜே பி செல்வம் என்கிற கேமிராமேனிடம் மூன்று படம் ஓர்க் பண்ணினேன் .

அப்புறம் அவரே என்னை இயக்குநர் இராம நாராயணனிடம் சேர்த்து விட்டார். அவரிடம் சேர்ந்த முதல் நாள் ‘தம்பி நீங்க போய் எடிட்டிங் பாருங்க என்று சொல்ல டெக்னிக்கல்  பயிற்சியுடன் என் வேலைதொடங்கியது. எங்க டைரக்டர் அசிஸ்டெண்ட்களிடம் சீன் சொல்லி எழுதி வரச்சொல்வார்,ஒரு நாள் தியாகராஜன் என்ற கோ டைரக்டர் 'சார் பாலா நல்லா எழுதுறான் சார்' என்று சொன்னது முதல் இராம நாராயணன் சாரின் டிஸ்கஷனில் உட்காரும் எஸ் எஸ் சந்திரன்,தினகர் ஆகிய முக்கியமானவர்களில் நானும் ஒருவன் என்ற அளவில் உயர்ந்தேன் ,

ஒரே டைரக்டரிடம் இருந்தால் அவர் பாணியே வரும் என்பதால் இராம நாராயணன் சாரிடம் சொல்லிவிட்டு பாக்யராஜ் சாரிடம் சேரந்தேன் இதுவும் சங்கர்கணேஷ் உதவியுடன் தான். இது நம்ம ஆளு முதல் ஆராரோ ஆரிரரோ வரை வேலைபார்த்து கொண்டிருந்த போது தனியாகப் படம் பண்ணவாய்ப்பு வந்தது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் க்கு போய் பாக்யராஜ் சார் ஸ்டைலில் ஒரு பேமிலி ஸ்டோரிசொன்னேன் ஏதோகாரணத்தால் அது அப்படியே நின்றுபோக,  சுப்ரமணி என்ற ஒரு இளநீர் வியாபாரி வந்தார். பாரதிராஜா வுக்கு ஒரு தேங்காய் வியாபாரி ராஜ்கண்ணு போல எனக்கு இளநீர் வியாபாரி என நினைத்தேன். சத்யஜோதியில் சொன்னகதையையே சொல்லி ஓகேயானது.  பாண்டிபஜாருக்கு பின்புறம் ஓட்டலில் ரூம் போட்டு கதை விவாதம், நடந்தது. முதல் பெரிய ஓட்டல் சாப்பாடு. மாதகடைசியில் கையேந்தி பவன் உணவு அப்புறம் திடீரென்று தயாரிப்பாளரை காணவில்லை. ஓட்டலில் அவர் வைத்து சென்ற கடன் பில் நீட்டினார்கள். நான் கதை சொல்ல வந்தவன் என்று தப்பி வெளியே வந்தேன் .

திரும்பவும் பாக்யராஜ் சாரிடம்போய் சேர முடியவில்லை, அங்குவேறுவேறு ஆட்கள் வந்திருந்தார்கள். வேறெந்த டைரக்டரிட மும் வேலை கிடைக்காமல் கிடைத்தை சாப்பிட்டு பிளாட்பாரத்தில் தூங்கி பட்டினி கிடந்து அவஸ்தை பட்டேன். அப்போதும் சினிமாவை விட மனம் வரவில்லை.

அம்மாவின் அழைப்பால்  ஊருக்குப்போனேன். அவர் கலங்கினார். உனக்குசினிமா வேண்டாம். இங்கேயே வேலை பாரென்று டிவிஎஸ் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கசெய்தார்கள் . அப்போது மதி என்ற அசிஸ்டெண்ட் டைரக்டர் வந்து பேசியதும், நான் சினிமாவுக்குபோகிறேன் என்றேன். வீட்டில் செம டோஸ். நீயென்ன லூசா என்று அர்ச்சனை. அவன்ஆசைப்படுறான் ஜெயிப்பான் போகட்டும் விடுங்கனு  அண்ணன் சொல்லியதும் மறுபடியும் சென்னை வந்து தேடல் தொடர்ந்தது.

 அப்புறம் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் அசிஸ்டெண்ட் போல வேலை பார்த்தேன். வெட்டு ஓண்ணு துண்டுரெண்டு 'சீரியலில் வேலை. அப்போது விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.  அவங்ககிட்ட லொள்ளுசபா கான்சப்ட் சொன்னேன் ஓகேயானது .

அதன் ஹீரோவாக பாலாஜி வந்தார். அவருடன் ஒரு பையன் வந்தான், யாருன்னு கேட்டேன் என் தம்பிமாதிரி இவன். நடிக்க ஆர்வமாய் இருக்கிறான் இவனுக்கு வாய்ப்பு கொடுங்க என்றார் பாலாஜி. அந்தப் பையன் சந்தானம்.

சந்தானத்தின் பாடிலாங்வேஜ், பஞ்ச் டயலாக் செமயா இருந்ததால் அவருக்காக கொஞ்சம் ஓர்க் பண்ணினேன். அப்போது பாலாஜி சன் டிவிக்கு போய்விட சந்தானம் லொள்ளுசபா ஹீரோவானார். அவருக்கு அது ஏறுமுகமாக அமைந்தது. அப்போது மன்மதன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது, சந்தானம் என்னிடம் கேட்டார். 'போய் நடி; சினிமா கனவுடன் தானே வந்தே... நேரம்கிடைக்கும் போது லொள்ளு சபாவில் வந்து பண்ணு‘ என்றேன்.

லொள்ளுசபா கான்செப்டை வைத்து ஒரு சினிமா கதை சொன்னேன். எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. பிறகு வேறோருவரை வைத்து  அவர்கள் ஒரு படம் எடுத்தார்கள். படம் பார்த்தபோதுதான் தெரிந்தது. அது என் கதையே தான். என்ன செய்வது? போனால் போகிறது என்று விட்டுவிட்டேன்.

சந்தானம் ரொம்ப நல்லவர். நன்றியுள்ளவர், பலேதிறமைசாலி. நான் ஒரு தயாரிப்பாளரிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைபட்டப்போது, என்னை தன் வக்கீல் மூலம் பிரச்சனையிலிருந்து விடுவித்ததும்,  தில்லுக்கு துட்டு படம் மூலம் என்னை இயக்குனர் ஆக்கியதும் நண்பர் சந்தானம்தான். இப்ப கைவசம் நாலு படம் இருக்கு எனபதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். நன்றி சந்தானம், நன்றி லொள்ளுசபா நண்பர்களே.'' என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி முடித்தார் ராம்பாலா.

மார்ச், 2019.