ஒரு கதைக்குத் தருகிற முக்கியத்துவத்தை, கவனத்தை பாடல்களுக்கும் செலுத்துகிறேன். நான்காயிரம் அடிக்கு ஒரு பாட்டு வரும் என்று கணக்குப் போடுகிற ஆள் இல்லை நான்” மெல்லிய புன்னகையுடன் அழுத்தமாக பேசுகிறார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். நூறு திரைப்படங்கள், அவற்றில் என்றென்றைக்குமாய் மறக்கமுடியாத வெவ்வேறு களங்களைக் கொண்ட ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் என இன்று வரை யாரும் முறியடிக்காத சாதனைகளை செய்த இயக்குநர் தன்னுடன் பணியாற்றிய இசையமைப்பாளர்களைப் பற்றி பகிர்ந்துகொண்டதிலிருந்து..
‘சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இசையமைப்பாளர் வி.குமார் எனக்கு பழக்கம். என்னுடைய
‘சர்வர் சுந்தரம், ‘நீர்க்குமிழி’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘மெழுகுவர்த்தி’, ‘நவக்கிரகம்’ படங்களாக வருவதற்கு முன்பு அந்த நாடகங்களுக்கு பின்னணி இசை அமைத்தது வி.குமார்தான். ஆரம்ப காலங்களில் நிறைய படங்கள் நாங்கள் ஒன்றாக வேலைப் பார்த்திருக்கிறோம். ஏ.வி.எம் நிறுவனம் ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க என்னை அழைத்திருந்தது. அப்போது எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னணி இசையமைப்பாளராக இருந்தார். பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தார். மெய்யப்ப செட்டியார் அவர்கள் ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்திற்கு எம்.எஸ்.வியை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யலாம் என்றார். நான் தயங்கினேன் ‘என்னுடன் நாடக காலத்திலிருந்தே உடன் இருப்பவர் வி.குமார். அவரை விட்டு விட்டு இந்தக் கதைக்கு எப்படி திடீரென்று எம்.எஸ்.வியுடன் வேலை செய்யமுடியும்?’ எனக் கேட்டேன். செட்டியார் அவர்களும் புரிந்து கொண்டார். ஒரு காலகட்டத்தில் எனக்கும் வி. குமாருக்கும் சின்ன மனத்தாங்கல் வந்தது. நாங்கள் நண்பர்களாக பிரிந்தோம்.
அதன் பிறகு எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல வெற்றிப் படங்கள் அமைந்தன. எனக்கு எம்.எஸ்.வியுடன் வேலைப் பார்ப்பதற்கு முன்பு சின்ன பயம் இருந்தது. ஏனென்றால் நான் அப்போது தான் வளர்ந்துவருகிற இளம் இயக்குனர். எம்.எஸ்.வி பெரிய ஜாம்பவான்களுக்கெல்லாம் இசை அமைத்தவர். அதனால் அணுகுவதில் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், ‘அபூர்வராகங்கள்’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘மன்மதலீலை’ என நாங்கள் கைகோர்த்தப் படங்களும் அதன் பாடல்களும் பேசப்பட்டன. ‘மன்மதலீலை’ படத்தில் ஒரு இசைக்கோர்வைக்கான காட்சியில் கிரிக்கெட்டை மையமாக வைத்து படம்பிடிக்க வேண்டுமென நினைத்தேன். படத்தின் நாயகன் கமலஹாசன் பந்து வீசுவது போலவும், பிட்ச்சின் இரண்டு பக்கமும் ஆறு, ஆறு பெண்கள் ஆடுவது போலவும் யோசித்து எம்.எஸ்.வியிடம் சொன்னேன். எப்போதுமே புதுமையான முயற்சி என்றால் எம்.எஸ்.வி ரொம்பவும் ஆர்வமாகிவிடுவார். ‘எனக்கு கிரிக்கெட் பத்தி ஒண்ணுமே தெரியாதே’ என்றார். உடனே வகுப்புத் தொடங்கிவிட்டது. கிரிக்கெட் விதிமுறைகள் தொடங்கி, பௌலிங், பேட்டிங், அங்கேயும், இங்கேயும் ஓடி ரன்கள் எடுப்பது என கிரிக்கெட் ஆட்டத்தையே நடத்திக் காட்டினேன். கிட்டத்தட்ட ஏழுநிமிடங்கள் வருகிற காட்சி அது. கமலஹாசன் பந்து சுழற்றும்போது ஒரு ‘பீட்’, அதை வீசும்போது மற்றொரு Variation, பந்து ‘பேட்’டில் படும்போது ஒரு இசை, ரன்கள் எடுக்க ஓடும்போது அதற்கேற்ற இசை என எம்.எஸ்.வி பிரமாதபடுத்தியிருந்தார். கமலுக்கு இந்த மாதிரி புதுமுயற்சிகள் செய்வதென்றால் ரொம்ப ஆர்வம். இசையமைக்கும்போது கமலும் கூடவே இருந்தது எனக்கு பெரிய பலமாய் இருந்தது.
அதே போல ரொம்ப கஷ்டப்பட்டுப் போட்ட பாட்டு, ‘அவர்கள்’ படத்திற்காக பொம்மை பாடுவது போலவே அமைந்த பாடல். ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் ஜேசுதாஸ் பாடிய பாடலை மறக்கமுடியுமா? ‘தெய்வம் தந்த வீடு’ அவருக்கு இரண்டாவது பாடல். அப்போது தொடங்கியது ஜேசுதாஸின் வளர்ச்சி. ஒவ்வொரு பாடல்களையும் நினைத்துப் பார்க்கும்போதும் அதற்காக நான் உழைத்த உழைப்புத் தான் நினைவுக்கு வருகிறது. ஒரு பாடலின் ‘சிச்சுவேஷன்’ போல மற்றொன்று அமைந்துவிடக் கூடாது என்பதில் எனக்கிருந்த கவனம் சாதாரணமானது அல்ல. நாங்கள் நினைத்தபடி பாடல் வருவதற்கு எவ்வளவோ சிரமங்கள் எடுத்துக் கொள்வோம்.
மெட்டும், வரிகளும் கிடைத்துவிட்டால் கிடைக்கிற ஆனந்தம் கொண்டாட்டமாக இருக்கும். “பாலு படமா? எனக்கு சரியான வேலை வைத்திருப்பான். காலைல பத்து மணிக்கு வந்துர்றேன்’ என சொன்னபடி ஆர்வத்துடன் வந்து நிற்பார் கவிஞர் கண்ணதாசன். இதை பெருமைக்காக நான் சொல்ல வில்லை. இது கவிஞரே என்னிடம் சொல்லியிருக்கிறார். எனக்கு கதாநாயகனும், நாயகியும் கட்டிப்பிடித்துக் கொண்டே பாடும் டூயட்டுகளில் எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. ஒரு படத்திற்கு டூயட் போட வேண்டும். நாயகனும், நாயகியும் புத்திசாலிகள் என்கிற ‘Characterisation’ பாடலில் வெளிப்பட வேண்டும், ‘மெலடி’யாக இருக்க வேண்டும், காதலைப் பகிர்ந்து கொள்வதற்கான சூழல் பாட்டிலேயே இருக்க வேண்டும், பாடல் எழுதுகிறவரின் திறமை அதில் வெளிப்பட வேண்டும், பாந்தமாய் இசையமைக்க வேண்டும், இதோடு இயக்குநரின் வன்மையும் தெரிய வேண்டும். இப்படியெல்லாம் யோசித்துப் போடப்பட்டது தான் மெட்டுக்கு வரிகள் போட்டு இன்று வரை மனதைக் கரைய வைக்கிற ‘சிப்பி இருக்குது..முத்தும் இருக்குது..’ பாடல். ஒரு பாடலின் ஆரம்ப ட்யூன் ஈர்த்தது என்றால், அந்தப் பாடல் நிச்சயம் ‘ஹிட்’.
அடுத்து நானும் இளையராஜாவும் இணைந்தோம்.
‘சிந்து பைரவி’, ‘புன்னகை மன்னன்’ என அடுத்தடுத்து புது முயற்சிகள். ‘மரி மரி நின்னே’ பாடலை இசையமைத்துவிடலாம். ‘பாடறியேன், படிப்பறியேன்’ பாட்டையும் மெட்டமைக்கலாம். ஆனால் இரண்டையும் ஒன்று சேர்த்தேயாகவேண்டும் என நான் சொன்னேன். அவர் அப்படி இரண்டு பாடல்களையும் ஒன்று சேர்த்தது அத்தனை சாதாரணமான விஷயம் இல்லை.
இயற்கையின் பிரமாண்டத்தை உணர்கிற ஒரு இடத்தில் காதலனும், காதலியும் சேர்ந்து இருக்கிறார்கள், அந்த நேரத்தில் பாடப்படுகிற பாட்டு எப்படி இருக்க வேண்டும்? காதலை வெளிப்படுத்துவதாகத் தானே? ஆனால் இந்தப் பாட்டில் மென்சோகம் இருக்கும். பார்வையாளர்களுக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பது தெரியும்? ஆனால் யாரும் எதிர்பாராதது அவர்கள் அடுத்த காட்சியில் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது. இப்போது மீண்டும் ‘என்ன
சத்தம் அந்த நேரம்’ பாடலைக் கேட்டுப் பார்த்தால் அந்த மென்சோகத்தின் அர்த்தம் புரியும். இப்படியான புதுமையான சூழல்களுக்கு ராஜா பிரமாதமான இசையையும், வைரமுத்து அழகான வரிகளையும் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
ஒருநாள் எஸ்.பி. பாலசுப்ரமணியனிடம், ‘யாராவது புது இசையமைப்பாளர்கள் தெலுங்கில் இருந்தால் சொல்லுங்களேன்’ எனக் கேட்டேன். அவர் கீரவாணியை அறிமுகப்படுத்தினார். தமிழுக்காக அவர் பெயரை மரகதமணி என மாற்றம் செய்தேன். அவர் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய முதல் படம் ‘வானமே எல்லை’. அந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்கும் முன் மம்மூட்டியின் ‘டேட்ஸ்’ கிடைத் ததால் உடனே ‘அழகன்’ தொடங்கிவிட்டோம். ஒரு காதல் பாடல், சோகப் பாடல், தத்துவப்பாடல் என எழுதி இசையமைத்துவிடலாம். ஆனால் நடுத்தர வயது காதலனும், அவன் காதலியும் இரவு முழுக்க பேசிக் கொள்கிறார்கள். சரி என்ன தான் பேசுகிறார்கள்? ஒன்றுமில்லை எல்லாமே ‘ஸ்வீட் நத்திங்க்ஸ்’. இப்போதும் அந்த ‘ஸ்வீட் நத்திங்’ ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாடல் எங்கயாவது பார்க்க நேருகிறபோது அப்படியே உட்கார்ந்து கடைசி ஷாட் முடியும் வரைப் பார்த்துவிட்டுத் தான் எழுந்துபோவேன். பார்க்கிற ஒவ்வொருமுறையும் என்னையுமறியாமல் அந்தப் பாடலின் இனிமையால் கண்ணீர் வந்துவிடும்.
எங்களுடைய ‘கவிதாலயா’ நிறுவனத்தில் இயக்குநர் மணிரத்னம் ஒரு படம் இயக்கவேண்டுமென அவரும், நானும் விரும்பினோம். மணிரத்னத்தை அழைத்து அவர் இயக்கப் போகிற ‘ரோஜா’ படத்தைப் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘திலீப் என்ற ஒரு பையன் நன்றாக இசையமைக்கிறார்’ என விளம்பரங்களுக்கு திலீப் இசையமைத்த ‘ஜிங்கிள்ஸ்’ அடங்கிய கேசட் டைத் தந்தார். அதைக் கேட்டதுமே எனக்குப் பிடித்துப் போய்விட்டது. நானும் புது இசையமைப்பாளரே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு ‘வானமே எல்லை’ படப்பிடிப்புக்காக ஊட்டி சென்று விட்டேன். கொஞ்ச நாட்கள் கழித்து படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, ‘ரோஜா’ படத்திற்காக ஒரு பாடல் பதிவாகி இருக்கிறது. நீங்கள் கேட்க வேண்டும்’ என ஒரு கேசட்டைத் தந்தார்கள். படப்பிடிப்பு முடிந்து நான் தங்கி இருந்த இடத்திற்கு சில கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். அன்று அந்தப் பயணத்தில் கேசட்டில் இருந்த ‘சின்ன சின்ன ஆசை’ பாட்டை முதன்முதலாக கேட்டேன். தொடர்ந்து அன்று மட்டுமே இருபத்தைந்து முறை திரும்பத் திரும்பக் கேட்டிருப்பேன். மணிரத்னத்திடம் உடனே போனில் சொன்னேன், ‘மணி இன்னும் பத்து வருடங்களுக்கு இந்தப் பாடல் நிற்கப் போகிறது’ என்றேன். ஆனால் நூறு வருடங்கள் தாண்டும் என இப்போது தோன்றுகிறது.
எனது இயக்கத்தில் ரஹ்மான் இசையமைத்த ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் ரீரெக்கார்டிங் பணி தாமதமாகிக் கொண்டிருந்தது. ஒருநாள் அதுவரை போடப்பட்டிருந்த பின்னணி இசையைக் கேட்பதற்காக சென்றிருந்தேன். வெகுநேரமாகியும் ரஹ்மான் வரவில்லை. எனக்குக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. கிளம்பி வந்துவிட்டேன். மறுநாள் காலை, ‘எல்லாம் தயாராகிவிட்டது. வந்து பாருங்கள்’ என அழைப்பு வந்தது. போனேன். ஒரு காட்சிக்கு அவர் அமைத்திருந்த இசை என்னை சந்தோசப்படுத்திவிட்டது. உடனே ஒரு பேப்பர் எடுத்து அங்கேயே வைத்து ரஹ்மானுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘I am sorry. உன்னைத் தப்பாக நினைத்துக் கொண்டேன். நீ எனக்கு அருமையான பரிசைத் தந்திருக்கிறாய். இந்த காட்சியை நீ உயர்த்திவிட்டாய்’ என ஆங்கிலத்தில் எழுதி கொடுத்துவிட்டு வந்தேன். திலீப்பிலிருந்து ஏ.ஆர். ரஹ்மானாக அறிமுகமாகி இன்று வானளவு புகழைக் கொண்டிருக்கும் அவர் எங்கள் கவிதாலாயாவின் அறிமுகம் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமை உண்டு.
என்னுடன் பணி செய்த சக படைப்பாளிகளான பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் எல்லோருமே எந்த சவாலையும் என்னுடன் சேர்ந்து புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்கள். அதன் காரணமாகத் தான் நூறாண்டு கொண்டாடுகிற இந்திய சினிமாவின் பாடல்களில் என்னால் சரித்திரங்களைப் படைக்க முடிந்தது” சொல்லி முடிக்கிறார் கே.பி.
ஜனவரி, 2014.