விஜயகுமார் 
திரை நேர்காணல்

'எல்லாத்தையும் விற்றுப் படம் எடுத்தேன்!'

உண்மைத்தமிழன்

சமீபத்தில் வெளியாகி, அது தொட்ட பிரச்னைக்காகக் கவனிக்கப்பட்ட படம் உறியடி. அப்படத்தை இயக்கியவரான விஜயகுமார் யதார்த்தமாகவும் கலகலப்பாகவும் நம்மிடம் பேசினார்.

“நான் படிச்சது மெட்டலர்ஜி இஞ்சினியரிங், எல்லாரும் எஞ்சினியரிங் படிக்கிறாங்கன்னு நானும் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்சி முடிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வட இந்தியாவில் தான் இப்படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம்ன்னு, எனக்கு வட இந்தியால்லாம் போக விருப்பம் இல்ல. அதுக்கப்புறம் சாப்ட்வேர் கத்துக்கிட்டு, சாப்ட்வேர் கம்பெனிகளில் எட்டு ஆண்டுகள் வேலை செய்தேன்.

 2004ல் இருந்தே சினிமா ஆர்வம்தான். என்னை அதிகமாக பாதித்த படம் மில்லியன் டாலர் பேபி. நான் படம் எடுக்க இந்தப்படம் முக்கிய காரணம். தமிழில் இயக்குநர் பாலாஜிசக்திவேல், மணிரத்தினம் படங்கள் பிடிக்கும். இன்று வரை மறக்க முடியாத படம் உதிரிப்பூக்கள். அப்புறம் 16 வயதினிலே, வேதம்புதிது போன்ற நிறைய படங்களை சொல்லலாம். 2006ல் படம் பண்ணனும்னு முடிவு பண்ணினேன். ஆனால் வேலை விசயமா படம் பண்ண முடியல. 2008ல் ஒரு குறும்படம் எடுத்தேன், ஒன்றரை லட்சம் செலவில். குறும்படம் எடுத்து யார் கிட்டேயும் காட்ல, சும்மா வச்சிருந்தேன். அப்புறம் நான்கு மாதம் கழித்து  நாளைய இயக்குநர் விளம்பரம் வந்தது. நாளைய இயக்குநருக்கு அனுப்பினேன். தேர்வாகிவிட்டது. இரண்டாவது எபிசோட் பண்ணும்போது நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களுடன் பண்ணினேன். அப்புறம் விபத்து ஏற்பட்டு அதை தொடர்ந்து பண்ணமுடியவில்லை. இப்படத்திற்காக ஸ்கிரிப்ட் எழுத ஒரு வருடம் எடுத்துக்கொண்டேன், திரைக்கதையும், ஒவ்வொரு சீனும் தனித்தனியே எழுதினேன். ரப்பர், குண்டூசி முதற்கொண்டு விடவில்லை.  எந்த விசயத்தைப் பண்ணினாலும் ஆழமாக சிந்தித்து தான் பண்ணுவேன். சும்மா வந்தோம்; பணம் சம்பாதிச்சோம்னு போகாம, சமுதாய பிரச்சனை பிரதிபலிக்கிற மாதிரி படம் எடுக்கணும்னு முடிவு பண்ணினேன்.

இந்தப்படத்தில் சாதியை எடுத்துகொண்டாலும்,சாதிக்கு பதிலாக மதமாகவோ, மொழியையோ, மாநிலமாக வைத்தாலும் இப்படம் பொருந்தும். நான் பெரிய பணக்காரன் கிடையாது, எல்லாத்தையும் விற்று தான் படம் எடுத்தேன்.

இப்படத்தில் வரும் பசங்க அடிப்படையில் ரொம்ப நல்லவங்க, ஆனால் அவங்ககிட்ட இருக்கிற சிகரெட், குடிப்பழக்கத்தால் தான் ஒவ்வொரு பிரச்சனையிலும் சிக்கிக்கொள்கிறார்கள். நமது சமூக அமைப்பு புரியாமல் பிரச்சனைக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.

ஏப்ரல்’2013 ல் படம் எடுக்கத் தொடங்கி, ஜூலை’2014ல் சென்சார் முடிந்தது. நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜுடன் வந்து படத்தை பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு ரொம்ப நல்லா இருக்குதுங்கன்னு சொல்லிட்டு படத்தை வெளியிட ரெண்டு கம்பெனிகளுக்கு ரெகமண்ட் பண்ணாங்க. அவங்களுக்கு தொடர்ந்து படங்கள் இருந்ததனால வெளியிட முடியல. நலன் சொந்தமாக கம்பெனி ஆரம்பித்து படத்தை எடுத்து வெளியிடும் போது தான் இந்த படத்திற்கு ஒரு ரீச் கிடைத்தது. எல்லோரும் பாராட்டி எழுதினாங்க.  ஆனால் சில நாள் கழித்து  படம் பார்க்க போனவர்களுக்கு திரையரங்கில் படம் ஓடவில்லை. இது எனக்கும் பார்வையாளர்களுக்கும் பெரிய ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் இன்னும் எங்கியோ இந்த படத்தைப் பார்த்துட்டு அழைச்சு பாராட்டிட்டுதான் இருக்காங்க”.

ஆகஸ்ட், 2016.