கவிஞர் ஃபிரான்சிஸ் கிருபாவை என் படத்தில் நடிக்கவைத்தபோது, அவர் இன்னாரென்று எனக்குத் தெரியாது. இவர் நன்றாக பாட்டு எழுதுவார் என்று பட நாயகன் சையத் அழைத்து வந்து அறிமுகப் படுத்தினான்' என்கிறார் ஜான் கிளாடி. அண்மையில் ரிலீஸாகி விமர்சகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டுவரும் ‘பைரி' பட இயக்குநர்.
தியேட்டர் விசிட்களில் பிசியாக இருந்தவரை ‘அந்திமழை'க்காக சந்தித்தோம்.
‘பைரி கதைக்களம் அமைந்துள்ள நாகர்கோவில்தான் என் சொந்த ஊர். தேங்காய் வியாபாரம் செய்கிற எளிமையான குடும்பம். தந்தை இல்லை. அம்மாவும் சகோதரியும் மட்டுமே உள்ள சிறிய குடும்பம். சின்ன வயதிலேயே எனக்கு சினிமா ஆசை துளிர் விட்டிருந்தாலும் உண்மையில் சினிமா எனக்கு, ‘ஏழு கடல் ஏழு மலை தாண்டி' என்பார்களே அப்படிப்பட்ட தூரத்தில் இருந்தது.
திரைத்துறையில் எவரையும் எனக்குத் தெரியாது.
துவக்கத்தில் எனக்கு பாடலாசிரியர் ஆகவேண்டும் என்கிற ஆசை மட்டுமே இருந்தது. எனவே தினத்தந்தி சிறுவர் மலருக்கு கவிதைகள் எழுதி அனுப்ப ஆரம்பித்தேன். அவற்றில் சில பிரசுரமாகத் துவங்கியவுடன், சென்னைக்குச் சென்றால் ஜெயித்து விடலாம் என்கிற நம்பிக்கை துளிர்த்தது.
ஆனால் வந்துசேர்ந்தபோது அது அவ்வளவு சுலபம் இல்லை என்று வெகு சீக்கிரமே புரிந்துகொண்டேன். இந்த சமயத்தில் பாடலாசிரியர் ஆகும் எண்ணத்தை மாற்றி இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையை வளர்த்துக்கொண்டேன். ஆனால் உதவி இயக்குநராக சேர்வது அவ்வளவு சுலபமாக இல்லை. பல இயக்குநர்களின் வீட்டு, அலுவலகக் கதவுகளைத் தட்டி டயர்டான நிலையில் பெண்களுக்கான சிறப்பிதழாக வந்த ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தேன்.
இந்த வேலையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் பத்திரிகையாளராக இருந்தால் சினிமாக்காரர்களை சுலபமாக அணுகமுடியும் என்று அறிந்திருந்தேன். அது உண்மைதான். ‘தேவதை' பத்திரிகைக்கு ரெகுலராக சினிமா செய்திகள் தந்துகொண்டிருந்த பன்னீர்செ ல்வம் என்பவர் மூலமாக என் முதல் சினிமா வாசல் திறந்தது. என் சினிமா ஆசையைத் தெரிந்துகொண்ட பன்னீர் செல்வம் தாமஸ் என்கிற இயக்குநரிடம் என்னை உதவி இயக்குநராகச் சேர்த்துவிட்டார்.
அந்த தாமஸ் இயக்கிய ‘பிரம்மபுத்திரா'தான் நான் வேலைபார்த்த முதல் படம்.
இந்த சமயத்தில் இயக்குநர் வெற்றிமாறன் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்ற ஆசைப்பட்டேன். வெற்றிமாறனின் துணைவியார் எங்கள் நாகர்கோவில்காரர். என் நண்பன் ஒருவனுக்கு அவர் அக்கா முறை உறவினர். அவன் மூலமாக தொடர்ந்து முயற்சித்து ஒருநாள் அவர் வீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொள்ளச் சொல்லி கேட்டபொழுது, நான் அதற்காக மூன்று வருடங்களாக முயன்று வருவதை அறிந்து சேர்த்துக் கொண்டார்.
அது ‘ஆடுகளம்' படம் முடிந்திருந்து அடுத்து அவர் ‘வடசென்னை' இயக்கத் தயாராகிக்கொண்டிருந்த சமயம்.
ஒருபக்கம் வட சென்னை படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் ‘ஆடுகளம்' படத்தின் ஃபெஸ்டிவல் வெர்சன் பணிகளில் மூழ்கியிருந்தார் வெற்றி சார். இந்த ஃபெஸ்டிவல் வெர்சன் பணிகளின்போது சுமார் எட்டுமாதங்கள் அவருடன் பணியாற்றினேன். அவருடனான பயணம் அத்தோடு முடிந்தது.
அடுத்து சில இயக்குநர்களுடன் பணியாற்ற முயற்சி எடுப்பதும் தனியாக கதை சொல்ல அலைவது மாக நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் நகர்ந்துகொண்டிருந்தன. சோதனையான நாள்கள். அந்த நாள்களிலெல்லாம் ‘உங்கம்மா எங்கம்மா இல்லடா... சினிமா' என்ற விவேக் சாரின் தத்துவ வரிகள்தான் நினைவுக்கு வரும்.
இந்த நேரத்தில்தான் கலைஞர் டிவியின் ‘நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி பல புதிய இயக்குநர்களுக்கு வாசலைத் திறந்துவிட்டுக்கொண்டிருந்தது. நமக்கும் இதுதான் சரியான ரூட் என்று முடிவு செய்து இதே ‘பைரி' கதையை குறும்படமாக இயக்கி செமி ஃபைனல் வரை வந்து கவனம் பெற்றேன்.
இங்கேதான் இயக்குநராக என் முதல் புள்ளி துவங்கியது. பைரி குறும்படத்தைப் பார்த்த நாகர்கோவில் நண்பர்கள் அதையே படமாகத் தயாரிக்க முன்வந்தார்கள். முதன்முதலாக 2016இல் படத்தைத் துவங்கினோம். பொருளாதார நெருக்கடிகளால் தொடரமுடியவில்லை. அடுத்து 2018இல் தான் தற்போதைய தயாரிப்பாளர் துரைராஜ் உள்ளே வந்தார்.
படத்தை சிறிய பட்ஜெட்டில்தான் துவங்கினோம். ஆனால் கொரோனா துவங்கி, ஏகப்பட்ட பிரச்சினைகள். தயாரிப்பாளர் கைக்கு பணம் வரும்போது படப்பிடிப்பு நடக்கும். அடுத்து ஒரு ஆறு மாதங்களுக்கு சும்மா இருப்போம். மீண்டும் தயாரிப்பளர் கைக்கு பணம் வந்த்தும் அழைப்பார். படப்பிடிப்பு தொடங்கும். இப்படியே இது ஒரு ஆறு ஆண்டுகாலப் போராட்டம்.
படத்தின் இரு நாயகிகள் தவிர அத்தனை பேரும் முதல் முறை சினிமா கலைஞர்கள். மறைந்த கவிஞரும் எழுத்தாளருமான ஃபிரான்சிஸ் கிருபா ஒரு நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவரைத் திரையில் பார்த்த அனைவரும் ஆச்சர்யமாகி விசாரிக்கிறார்கள். நிஜமாக அவர் இன்னார் என்று எனக்குத் தெரியாது. படத்தின் நாயகன் சையத் தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தினார். படத்துக்குப் பாடல் எழுத வந்தவரை, நான் தான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து, அந்த சிறிய பாத்திரத்தில் நடிக்கவைத்தேன்.
படம் ரிலீஸான முதல் இரண்டு நாள்கள் ஜனங்கள் யாருமே தியேட்டர் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. பத்திரிகை விமர்சனங்களும், சோஷியல் மீடியாவில் வந்த பதிவுகளும், சக திரைக்கலைஞர்களின் பாராட் டுகளும் மூன்றாவது நாள் துவங்கி, இப்போது படத்துக்கு தோள் கொடுத்து நிற்க ஆரம்பித்துள்ளன. இனியும் ஆறு ஆண்டுகாலப் போராட்டமெல்லாம் தாங்காது. அடுத்த ஆறே மாதங்களில் இன்னுமொரு நல்ல படத்தோடு திரைக்கு வந்துவிடக் காத்திருக்கிறேன்'. வாங்க!