திரை நேர்காணல்

"எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுங்கள் “

ஆர்.ஆர்.தயாநிதி

ஆரண்ய காண்டம் படத்தில் சண்டைக்காட்சிகளை அமைத்தவர் திலீப் சுப்பராயன். பெயர் சொன்னால் விளங்கிவிடும். மூத்த சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயனின் மகன். வெறும் சண்டைப்பயிற்சி மட்டுமல்ல திலீப்புக்கு திரைப்பட தயாரிப்பு, இயக்கம் மீதும் ஆர்வம் இருக்கிறது. அவரிடம் வெற்றிகரமான ஸ்டண்ட்மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் மகன் என்பதாலேயே, சினிமா ஆசை உங்களுக்குள் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டு பேச்சைத் தொடங்கினோம்.

“ஆரம்பத்தில் எனக்கு சினிமா ஆசை அறவே கிடையாது. +2 முடித்த பின் துளிர்த்த சினிமா ஆசையை அப்பாவிடம் சொன்னபோது எடுத்த எடுப்பிலேயே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்பா என்பதை தாண்டி, மாஸ்டர் என்னும் பயமும் மரியாதையும் அவர் மீது எப்போதும் இருக்கும். அதனால் அவர் சொன்னபடி சினிமா ஆசையை ஒத்தி வைத்துவிட்டு கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். அந்த கல்லூரியில் பேராசிரியாக இருந்த ஓரம்போ இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி, தான் எடுக்கப்போகும் குறும் படத்திற்கு ஆக்‌ஷன் காட்சிகளை செய்து தர சொல்லி கேட்டனர். அது அவர்களுக்கு பிடித்துபோக, ‘ஓரம்போ’ திரைப்படம் அவர்களுக்கு கமிட் ஆனதும், என்னை ஸ்டண்ட்மாஸ்டராக சொல்லி கேட்டனர். அதற்கு யூனியன் விதிமுறைகள் ஒத்து வராமல் போகவே அந்த படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றினேன். அதோடு சேர்த்து சண்டை காட்சிகளை டிசைன் செய்தேன். அதன் பின்பு நானாகவே ஒரு ஆக்ஷன் குறும்படம் எடுத்து அதில் சவுண்ட் எடிட்டிங் செய்து அப்பாவிடம் பயந்து கொண்டே காட்டினேன். அந்த குறும்படம் என் மீது ஒரு நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனால் தான் இயக்குநர் வசந்தபாலனின் வெயில் திரைப்படத்தில் சில ஆக்ஷன் காட்சிகளை செய்ய வாய்ப்புக் கொடுத்தார். இந்த வாய்ப்பு கொடுத்த ஆர்வம் என்னை கல்லூரி படிப்பு முடிந்த உடனேயே சினிமாவுக்குள் இழுத்து வந்து விட்டது. அதன் பிறகு இது சம்பந்தப்பட்ட உபகரணங்களை பற்றி நெட்டில் தேடி படிக்க ஆரம்பித்தேன். சில நண்பர்கள் மூலமாக வெளிநாட்டில் இருந்து அவற்றை வரவழைத்தேன். இந்த நடவடிக்கைகளை எல்லாம் கவனித்து கொண்டிருந்த ஓரம்போ படத்தின் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர் தியாகராஜன் குமாரராஜா தான் எடுக்கபோகும் படத்திலும் என்னை அசோசியேட் டைரக்டராக பணியாற்றும் படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு   “ஆரண்யகாண்டம்” படத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் திடீரென  ‘நீ தான் இந்த படத்திற்கு ஆக்ஷன் பண்ற’ என்று சொன்னார். யூனியன் விதிமுறைகளும் ஒத்துபோக அந்த வாய்ப்பை நல்ல விதமாக பயன்படுத்தி வித்தியாசமான சண்டைகாட்சிகளை அமைத்து சினிமாவுக்குள் எனக்கென ஒரு இடத்தையும் பிடித்துவிட்டேன்.

ஆரண்யகாண்டம் படத்தில் எனக்கும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்தது. அந்த படத்தில் நான் அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றியதால் திரைக்கதை அனைத்தும் எனக்கு அத்துப்படி. அவர் எல்லாவற்றையும் எக்ஸ்ட்ரீமாக யோசிக்க சொல்வார். சொல்லப்போனால் பட்ஜெட் மற்றும் நேரமின்மை காரணமாக நாங்கள் யோசித்ததில் 30% - 40% தான் எங்களால் செய்ய முடிந்தது. நாங்கள் யோசித்த பலவற்றை இனிவரும் படங்களில் செய்து காட்டுவோம்.

ஆரண்டயகாண்டத்திற்கு பிறகு அட்டகத்தி, துரோகி, போராளி, ஈசன், சுந்தரபாண்டியன் என பல படங்கள். எனக்கு பெயரை வாங்கிக்கொடுத்தது Nஏ4 உதயம், விசாரணை ஆகிய படங்களில் ஆக்ஷன் வெகுவாக பேசப்பட்டது.

விஜய் சாரின் வேலாயுதம் படத்திற்கே என்னை அணுகினார்கள். நேரமின்மை மற்றும் இளவயது காரணமாக என்னால் அதை ஒத்துக்கொள்ள முடியாமல் போனது. இஎ எல்லாம் படித்து தெரிந்து வைத்திருக்கின்ற காரணத்தால் ஜில்லா படத்தின் பாம் காட்சிகளை செய்து தரவேண்டிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது பிடித்துப்போக இஎ அதிகமாக தேவைப்பட்ட புலி படத்திலும் நானே பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து தெறி வாய்ப்பும் இயல்பாகவே என் வசம் வந்து சேர்ந்தது. காரணம் அட்லியோடு ஏற்கனவே ராஜாராணியில் பணியாற்றி இருந்தேன்.

நண்பர்களோடு சேர்ந்து 2013ல் தயாரிக்க துவங்கிய படம் அஞ்சல. எல்லோரும் பாதியிலேயே விலக நான் அதை கையில் எடுத்து 2016ல் ரிலீஸ் செய்தேன். கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. நடிப்பை பொருத்தவரை நானும் ரவுடி தான் படத்தில் ஒரு காட்சியில் தலை காட்டினேன். அதன் பிறகு எனது நண்பர் இயக்கும் சங்குசக்கரம் படத்திலும் திருடன் போலீஸ் இயக்குநரின் அடுத்த படமான உள்குத்து படத்திலும் வில்லன் கதாபாத்திரம் செய்திருக்கிறேன். இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதாபாத்திரங்கள். நன்றாக வந்திருப்பதாக நம்புகிறேன்” என்று சொன்னவரிடம் “என்னென்ன தற்காப்பு கலைகள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?” என்றோம்.

“பள்ளி காலத்திலேயே கராத்தே பழகிகொண்டேன். பிறகு அப்பாவிடம் ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொண்டேன். சிறுவயதில் இருந்து அப்பா பணியாற்றும் இடத்திற்கெல்லாம் நானாக சென்று அவர் சண்டை கற்று கொடுக்கும் விதம், காட்சிகளை அமைக்கும் விதம், சவுண்ட் எடிட்டிங் செய்யும் விதம் எல்லாவற்றையும் ஆர்வமாக கற்றுக்கொண்டேன். சுய ஆர்வம் காரணமாக சிஜி கற்றுக்கொண்டேன். இண்டர்னெட் மூலமாக சமகாலத்தில் உலகில் நடக்கும் ஆக்ஷன் சம்பந்தபட்ட அத்தனை விசயங்களையும் ஆர்வமாக கற்று கொண்டு இருக்கிறேன்.

அப்பா காலத்தில் அத்தனையும் நிஜத்தில் படம்பிடிக்க வேண்டியிருக்கும். வைக்கோல் படுக்கை மற்றும் கயிறு போன்ற சொற்பமான பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே இருக்கும். இப்போது முடிந்தால் நேரடியாக படம் பிடிக்கலாம், முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது சிஜி. அதோடு பாதுகாப்பு உபகரணங்களும் இப்போது அதிகம். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவ்வளவு முன்னேற்பாடுகளோடுதான் இப்போது படபிடிப்பிற்கே செல்கிறோம். அந்தக்காலத்தோடு ஒப்பிடுகையில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும்போது உயிரிழப்பு என்பதே இப்போது அறவே இல்லாமல் ஆகிவிட்டது. பைட்டர்ஸின் பாதுகாப்பிற்கு இப்போது அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

மருத்துவ செலவு முழுவதையும் யூனியனும், படத்தயாரிப்பு நிறுவனமும் ஏற்றுக்கொள்ளும். கைமீறி நடக்கும் உயிரிழப்புகளின் போது நிவாரணம் முழுவதும் குடும்பத்துக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும். கை கால் ஊனம் என்றாகும்போது எதிர்காலத்தை சமாளிக்க தேவையான பொருளுதவியை யூனியன் செய்து கொடுக்கும். யூனியன் உறுப்பினர்களது குழந்தைகளின் கல்வி தடையில்லாமல் தொடர வழிவகை செய்து கொடுக்கப்படும்.

தயாரிப்பு கவுன்சில் மூலமாக அவர்களுக்கு நாள் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது போக ரிஸ்க் காட்சிகளில் நடிப்பதற்கு அதற்கு தகுந்தாற் போல ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. மக்களின் கைத்தட்டலை தாண்டி வேற எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை. எல்லா துறைகளையும் கணக்கில் கொள்ளும் தேசிய விருது பட்டியலில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இடமில்லை. நாட்டின் உயரிய விருதான பத்மவிருதுகளில் எங்களுக்கு இடமில்லை. உலகில் கௌரவமான விருதான ஆஸ்கரிலும் எங்களுக்கு இடமில்லை.

ஆக நீங்கள் கைத்தட்டியாவது எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுங்கள். ஒரு கதையை திரைக்கதையாக மாற்றும் போது நீங்கள் ட்விஸ்ட் என்று சொல்லக்கூடிய எல்லா இடங்களிலும் ஆக்ஷனுக்கான பிளாட் இருக்கும். இப்படி எல்லா திரைக்கதையிலும் முக்கியத்துவம் பெறுகிற எமக்கு சரியான முக்கியத்துவம் இன்னும் தரப்படவில்லை. ஒவ்வொரு திரைக்கதையிலும் அதன் அதன் தன்மைக்கேற்ப கலாசார சிதைவை ஏற்படுத்தாமல் சண்டைக்காட்சிகளை அமைக்கிறோம். அப்படி இருந்தும் கவனிக்கப்படாமல் தான் இருக்கிறோம்” என்றவரிடம் உங்களுக்கு பிடித்த ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படங்களில் சிலவற்றை சொல்லுங்கள்?” என்ற கேள்வியை வீசினோம்.

“புரூஸ்லி, ஜாக்கிசான், ஜெட்லியின் எல்லா படங்களும் பிடிக்கும். டோனிஜாவின் படங்களையும் ரசிப்பேன். அதே போல இந்தோனேஷியாவில் இருந்து வெளியான ரைட் ரிடம்ப்ஷென் (Raid redemption)  உலகை உலுக்கியதே. அத்தனை ஆக்ஷன்  விருதுகளையும் அள்ளி சென்றது அது. இப்படி நிறைய இருக்கு” என்றவர் இறுதியாக,“ கொஞ்ச நாள் கழித்து நானே நிச்சயமாக திரைப்படம் இயக்குவேன். ஆனால் அது ஆக்ஷன் படமில்லை. உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும்” என்றார்.

ஜூலை, 2016.