திரை நேர்காணல்

ஊரே சேர்ந்து ஒரு கொலையை மறைச்சா என்ன நடக்கும்?

இலக்குவன்

சமீபத்தில் வெளியாகி அனைவர் மத்தியிலும் பாராட்டுகளைக் குவித்து வரும் படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. எளிமையான கதை. எளிய மனிதர்கள். ஆனால், அதை அழுத்தமாகப் பதிவு செய்து எல்லோரையும் கவனிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா. ஓர் உயிரின் முக்கியத்துவத்தை உயிர்ப்புடன் சொல்லிய விதத்திற்கு ஒரு ‘ஓ’ போடலாம். கதையைப் போலவே எளிமையாக இருக்கும் சுரேஷ் சங்கையாவை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.                      

“சினிமாவிற்கு வந்ததே ஒரு கதைதான் பாஸ். அதையே ஒரு திரைக்கதை பண்ணலாம்” என விளையாட்டாகக் குறிப்பிடும் சுரேஷ்   பால்யத்திலிருந்து பேச ஆரம்பித்தார்.

“வேறொண்ணுமில்ல. பிளஸ் ஒன்ல பெயிலாகிட்டேன். அந்த வருத்தத்துல வீட்டுல இருந்து ஆயிரம் ரூபாய் எடுத்திட்டு சென்னைக்கு ஓடி வந்துட்டேன். ஒண்ணுமே புரியல. பிறகு, அன்னைக்கு சாயங்காலமே மதுரை பஸ் ஏறி ஊருக்கு போயிட்டேன். இதுக்கிடையில என்னை ஊர் பூராவும் தேடியிருக்காங்க. இரண்டு நாள் கழிச்சு ராஜபாளையம் பஸ் ஸ்டாண்ட்டுக்கு வந்து சேர்ந்தேன். அங்க என்னைப் பார்த்த எங்க ஊர்க்காரர், ‘உன்னை ஊரே தேடுது. எங்கடா போனே?’னு கேட்டார். உடனே, வீட்டுக்குப் போனேன். அங்க ஒரு கூட்டமே கூடி நின்னுச்சு. அவ்வளவுதான். நம்மை வெளுக்க போறாங்கனு பயந்து நின்னேன். ஆனா, எல்லாரும் சாப்பிட்டியா வைச்சியானு கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

பிறகு, அந்த வருஷமே பிளஸ் ஒன்ல ஃபெயிலான அந்த சப்ஜெக்ட்டை மட்டும் மறுபடி எழுதி பாஸாகி பிளஸ் டூ போனேன். அடுத்து,  கலசலிங்கம் ஆர்ட்ஸ் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். அங்க செகண்ட் இயர்ல 18 அரியர்ஸ். எதிலும் நான் பாஸாகலை. சரி, இனி படிக்க வேண்டாம்னு துறைத் தலைவர்கிட்ட சொல்லிட்டு வெளியே வந்துட்டேன். அப்புறம் அப்பாதான் என்னைக் காலேஜ் கூட்டிவந்து துறைத் தலைவர்கிட்ட பேசினார். ‘இவனை என்ன செய்யலாம்னு’ கேட்டார். அதற்கு எங்க துறைத் தலைவர், ‘உனக்கு பாடப் புத்தகத்துல விருப்பம் இல்லைன்னா வாரப் பத்திரிகைகள், கதை புத்தகங்கள்னு எடுத்துப்படி. ஏதாவது ஒண்ணுல இன்ட்ரஸ்ட்டா வா’ன்னு சொன்னார். அப்படித்தான் எனக்கு கி.ரா அறிமுகமானார். அவரோட கதைகள்தான், ‘படிச்சா வாழ்க்கை நல்லாயிருக்கும்’னு நினைக்க வைச்சது. அந்த வருஷமே எல்லா அரியர்ஸையும் தூக்கினேன். பிறகு, என்னோட மாமா ராம்குமார் வழியா சென்னைக்கு  மறுபடியும் வேலைக்கு வந்தேன். ஆனா, சினிமா பத்தி யோசிக்கவே இல்ல” என்கிறவரை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர் உடனிருந்த பாடலாசிரியர் வேல்முருகனும், நடிகர் சங்கரும்.

“இங்க ஒரு தனியார் வங்கியில டைப்பிங் வேலை கிடைச்சது.  இதை பேக் ஆபீஸ்னு சொல்வாங்க. அங்க நல்ல பதவிக்கு வந்தேன். இதுக்கிடையே ஒரு பொண்ணைக் காதலிச்சிட்டு இருந்தேன். அவங்கதான் ‘உனக்கு எதுல விருப்பமோ அதைப் பார்க்க வேண்டியதுதானே.  அப்போதான் நல்லா வர முடியும்னு’ எங்க துறைத் தலைவர் மாதிரி அட்வைஸ் பண்ணின்னாங்க. அந்த நொடிதான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்துச்சு. அவங்க இப்போ எங்க இருக்காங்கனு தெரியாது. ஆனா, அவங்க சொன்ன பிறகு நான் சினிமா பார்க்கிறதே விட்டுட்டேன். ஏன்னா, ஒரு தனித்துவமான ஆளா  வரணும்னு நான் படங்கள் பார்க்கிறதை தவிர்த்தேன். தியேட்டர் போய் படம் பார்த்து ஏழு வருஷமாகுது” என்கிறவர் சினிமாவிற்குள் நுழைந்த கதையை விவரிக்கிறார்.

“சினிமானு முடிவான பிறகு அம்மாகிட்ட சொன்னேன். அவங்க, எங்க ஊர்ல இருந்த செல்வம் அண்ணன்கிட்ட சொல்லியிருக்காங்க. செல்வம் அண்ணன் ஒரு அமைப்பு வழியா ஊர்ல உலகத் திரைப்படங்கள போட்டுக் காட்டியிட்டு இருந்தவர். பிறகு, ‘பூ’ படத்துல சசி சார்கிட்ட உதவியாளரா பணியாற்றினார். அதுல மணிகண்டன் சார் அசோசியேட் கேமராமேன். செல்வம் அண்ணன் என்கிட்ட பேசி, மணிகண்டன் சாரைப் பார்க்கச் சொன்னார். அவர் ஒரு படத்தோட திரைக்கதையை டைப் பண்ணிக் கொடுக்கச் சொன்னார். அதை முடிச்சிக் கொடுத்ததும் எனக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். அப்போ விஜய் சேதுபதி சாரும் கூட இருந்தார். நான், ‘பணம் வேண்டாம் உங்க அசிஸ்டெண்ட்டா சேர்த்துக்கங்க’னு கேட்டேன். அவர் யோசிச்சிட்டு சரி வானு சொன்னார். இந்த நேரத்துல ‘தி ஏஞ்சல்’னு ஒரு குறும்படத்தை ‘பிரேமம்’ டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் பண்ணினார். மணிகண்டன் சார்தான் கேமரா. நான் உதவியாளரா வேலை பார்த்தேன். பிறகு, ‘காக்கா முட்டை’யில உதவி இயக்குநர் பணி. எங்க ஊர்ல குலதெய்வத்துக்குக் கிடா வெட்ட லாரி பிடிச்சு போவாங்க. அது ஒரு வைபோகமா நடக்கும். அதையே ஒரு திரைக்கதையா பண்ணலாம்னு ரெடி பண்ணினேன். அப்போ மணிகண்டன் சார் கூட சேர்ந்து ஒரு ஈரானிய சினிமாவைக் கம்ப்யூட்டர்ல பார்த்திருந்த ஞாபகம் வந்துச்சு. அந்தப் படத்துல நாலு பேர் சேர்ந்து ஒரு கொலையை மறைப்பாங்க. அந்தக் கான்செப்ட் பிடிச்சிருந்தது. அதை எங்கக் கிடா வெட்டு நிகழ்வோடு இணைச்சேன்.

ஊரே  சேர்ந்து ஒரு கொலையை மறைச்சா என்ன நடக்கும்? அதுதான் ஒன்லைன். இந்த நேரம் ‘மண்ணின் மைந்தர்கள்’னு ஒரு சிறுகதை தொகுப்பை படிச்சு முடிச்சிருந்தேன். அதை சங்கரன்கோவில் எழுத்தாளர் வே.குருநாதன் எழுதியிருந்தார். அவரோட எழுத்து வடிவம் நல்லா இருந்துச்சு. அதுல ஒரு சிறுகதைக்கு ‘கருணை மனு’னு பெயர் வச்சிருந்தார். அவரைப் போய்  பார்த்து என்னோட கதையைச் சொன்னேன். ஒரு கிடாயின் கருணை மனு திரைக்கதை ரெடியாச்சு.  அவரோட சேர்ந்து கதையைச் செதுக்கினேன். அவர் இந்தப் படத்துல கோர்ட் நீதிபதியா நடிச்சிருப்பார்” என்கிறவர் தொடர்ந்தார்.

“அப்புறம், இந்தத் திரைக்கதையை அப்படியே மணிகண்டன் சார்கிட்ட படிக்க அனுப்பினேன். அவர் படிச்சிட்டு  நானே இதை தயாரிக்கேன்னு சொன்னார். அடுத்து நடிகர் விதார்த்கிட்ட கதை சொல்லி ஓகே வாங்கினேன். ஆனா, சில காரணங்களால மணிகண் டன் சாரால தயாரிக்க முடியாமப் போச்சு.பிறகு, ஈராஸ் நிறுவனத்துக்கிட்ட அவரே அழைச்சிட்டுப் போய் கதை சொல்லச் சொன்னார். கதை ஓகே ஆனது. படத்தை 39 நாட்கள்ல  முடிச்சோம். போன வருஷம் மே மாசம் படம் ரெடியாச்சு” என்றவரிடம், ‘பிறகு ஏன் ஒரு வருஷ தாமதம்?’ என்றோம்.

“உலகத் திரைப்பட விழாக்கள்ல கலந்துக்கப் போனதால லேட்டாகிடுச்சு,‘ என்கிற சுரேஷ், அடுத்த திரைக்கதையைத் தயார் செய்துவிட்டராம்.

“அடுத்தபடமும்கிராமத்துக்கதைதான். இதுலஇருநூறுகேரக்டர்கள்வச்சிருக்கேன். எல்லாமேஅரசியல்பேசும். சீக்கிரமேவருவோம்” என்கிறார்நம்பிக்கைபொங்க!

ஜூலை, 2017.