திரை நேர்காணல்

“இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிப்போம்!” - புஷ்கர் காயத்ரி தம்பதி

Prakash

‘நாங்கள் கல்லூரி காலத்திலிருந்தே கதைகளை இணைந்து எழுதிவருகிறோம். அதனால், நாங்களே கதைகளை சரிபார்த்து திருத்திக் கொள்வோம். ஒரே மாதிரி இருவரும் யோசிப்பதால், யாரிடமும் கதையைச் சொல்வதுமில்லை, விவாதிப்பதுமில்லை. கருத்தும் கேட்கமாட்டோம். எங்களிடமே கதை முழுமையாகிவிடும்.

எங்களுடைய எழுத்தில் என்ன இருக்கிறதோ அதுவே திரையில் வரும். அந்தளவிற்கு தெளிவாகக் கதையை எழுதிவிடுவோம்,' என்கிறார், பிரித்துப் பார்க்க முடியாத புஷ்கர் - காயத்ரி இயக்குநர் தம்பதியில் ஒருவரான  காயத்ரி. ‘ஓரம்போ‘, ‘வா குவாட்டர் கட்டிங்', ‘விக்ரம்  வேதா' என  ஹியூமர் - ஆக்‌ஷனில் கலக்கியவர்கள், ‘சுழல்' வெப் சீரிஸ் மூலம் முக்கியமான சமூகப் பிரச்னையைப் பேசி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அந்திமழைக்காக சந்தித்தோம். விக்ரம் &வேதா இந்தி ரீமேக்கின் இறுதிக்கட்டப் பணியில் மும்முரமாக இருந்ததால் காயத்ரி மட்டும் பேசினார்.

‘சென்னையில் தான் பிறந்த வளர்ந்தது எல்லாம். எல்.கே.ஜி-யிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அண்ணா நகரிலிருந்த பெயின் பள்ளியிலும், ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியிலும் படித்தேன்.

ஸ்கூல் படிக்கும் போதே கலைகள் மீது ஆர்வம் இருந்தது. நிறைய ஓவியம் வரைவேன். அதை அம்மாவும்  உற்சாகப்படுத்தினார். ஒன்றாம் வகுப்பில் படிக்கும் போது ஓவியப் போட்டி ஒன்றில்  கலந்து கொண்டு, முதல் பரிசு பெற்றதற்காக அப்பா கண்கலங்கி அழுதுவிட்டார். இன்றும் அவரின் அழுகை என் நினைவுகளில் அப்படியே இருக்கிறது,' என தனது பால்ய நினைவுகளை அசைபோட்டவர், பள்ளியில் நடந்த கண்காட்சி ஒன்றுக்கு வந்திருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் கூறினார்.

‘இயல்பாகவே நான் நல்லா படிக்கக் கூடியவள் என்பதால், வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்பது தான் அப்பாவின் விருப்பம். ஆனால் அதை, அவர் என் மீது திணித்ததே கிடையாது. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே அம்மா இறந்துவிட்டார். அது பெரிய மனச்சோர் வை கொடுத்தாலும் அப்பாவின் அரவணைப்பும், பெரியம்மாவின் அன்பும் எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.

பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு ஆர்கிடெக்சர், ஃபேஷன் டெக்னாலஜி, நுண்கலை, விஸ்காம் போன்ற எதாவது ஒரு கலை சார்ந்த படிப்பை படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. அதனால், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ‘நுண்கலை' படிப்பில் சேர்ந்தேன். மீடியா பக்கம் வரவேண்டும் என்ற ஆசை இருந்ததால், ஒரே வருடத்தில் அந்த படிப்பை விட்டுவிட்டு லயோலா கல்லூரியில் விஸ்காம் சேர்ந்துவிட்டேன். அங்கு தான் புஷ்கரை சந்தித்தேன்,' என்றவர், இருவருக்குமான உறவு எப்படி வலுவடைந்தது என்பதை அழகாக விவரிக்க ஆரம்பித்தார்.

‘கல்லூரி முதலாம் ஆண்டில், கிராமங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக பள்ளியகரம் என்ற கிராமத்திற்கு அழைத்துச்  சென்றார்கள். அப்படி செல்கையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தான் புஷ்கரை முதல்முறையாகச் சந்தித்தேன். அந்த சமயத்திலிருந்தே, இருவரும் நிறைய பேசிக்கொள்வோம், சுவாரஸ்யமானதை விவாதிப்போம். கல்லூரியிலிருந்து வெளிவந்த, ‘கேட்லிஸ்ட்' என்ற நியூஸ் பேப்பருக்கு நாங்கள் இருவரும் தான் ஆசிரியர்கள். கட்டுரை எழுதுவது, எடிட் செய்வது என எல்லா வேலைகளையும் இணைந்தே செய்தோம். அப்போது, நான் அவர் வீட்டுக்கு செல்வதும், அவர் என் வீட்டுக்கு வருவதும் என  இருந்தோம். ஒன்றாக நிறைய நேரத்தை செலவழித்தோம். இருவருக்குமான உறவு அப்படியே வளர்ந்தது. இன்னமும் அது அப்படியே சென்றுக் கொண்டிருக்கிறது,' என்றவர் சிறிய புன்னகையுடன் அடுத்துப் பேச ஆரம்பித்தார்.

‘இப்போது எந்த படத்தை வேண்டுமானாலும் உடனே பார்த்துவிடலாம், ஆனால், இருபது வருடங்களுக்கு முன்பு அப்படி இல்லை. அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் மதியம் ஒரு மணிக்கு விருது வாங்கிய அசாமி, பெங்காலி, மராட்டி போன்ற பிற மொழிப் படங்களை போடுவார்கள். அந்தப் படங்களைத் தவறாமல் பார்த்துவிடுவேன். அப்படி நான் பார்த்து வியந்த படம், மீரா நாயர் இயக்கிய ‘சலாம் பாம்பே'. அதுவரைக்கும் நான் பார்த்த பாடங்களிலிருந்து, அது முற்றிலும் வேறு ஒரு படமாக இருந்தது. பிறகு வேறு ஒரு சமயத்தில் மீரா நாயரின் இமெயில் ஐடியை தேடிப் பிடித்து, அவருக்கு மெசேஜ் எல்லாம் அனுப்பியிருக்கிறேன், அவர் ஒரு பெண் இயக்குநர் என்பதால்.

கல்லூரியில் நிறையப் படங்களைப் பார்த்தேன். இருள் சூழ்ந்த அரங்கில் பார்வையாளர்களுக்குக் கதை சொல்லும் முறை என்னை வெகுவாக ஈர்த்தது. அதேபோல், படங்கள் குறித்தும் அதிகமாகப் படிப்பேன். இதுவே எனக்கு சினிமா மீதான ஆர்வத்தை அதிகரித்தது எனலாம்.

மூன்று வருட படிப்பை முடித்துவிட்டு, ஒருவருடம் விளம்பரத்துறையில் வேலை பார்த்தேன்.

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், யாரிடமாவது உதவி இயக்குநராக சேரலமா? அல்லது திரைப்பட இயக்கம் தொடர்பாக படிக்கலாமா? என்ற யோசனை இருந்தது. படிக்கலாம் என முடிவெடுத்தோம், நானும் புஷ்கரும். இருவரும் தனித்தனியாக நிறைய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தோம். எங்களுடைய ஃபோர்ட்போலியோவிற்காக ‘தி எண்ட்', ‘தி மாஸ்க்' என்ற இரண்டு குறும்படங்களை இயக்கினோம். எனக்கு சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. புஷ்கருக்கு நியூ ஆர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. எனக்கு எதாவது ப்ராஜெக்ட் ஒர்க் என்றால் அவர் வந்துவிடுவார், அவருக்கு எதாவது ப்ராஜெக்ட் ஒர்க் என்றால் நான் சென்றுவிடுவேன். அங்கு படித்த மூன்று வருடமும் சினிமா பார்ப்பதும், அது குறித்துப் படிப்பதும் தான் முழு வேலையே.

கடைசி வருடம் படிக்கும் போது  ஆய்வறிக்கை ஒன்று எழுதினோம். இந்தியா வந்ததும் அதைத் திரைப்படமாக இயக்குவதற்குத் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை அணுகினோம். அவர்கள் படம் எடுப்பதற்கு நாற்பது லட்சம் ரூபாயை ஒதுக்கினார்கள். அந்தநேரம் பார்த்து, அரசாங்கத்தின் திட்டம் மாறிவிட்டது. அரசு பாதி பணம் கொடுத்தால், படம் எடுப்பவர்கள் பாதி பணம் கொடுக்க வேண்டும் என புதிய சட்டம் வந்ததால், அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது. நாங்கள் எழுதி வைத்திருந்த அந்தக் கதை மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

அதே ஸ்கிரிப்டை மற்ற தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்ற போது, கதையில் கமர்ஷியல் விஷயங்கள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அடுத்து என்ன? என்ற கேள்வி  தான் எங்கள் மூளையில் ஓடிக்கொண்டே இருந்தது. ஒருநாள் புஷ்கரின் பைக் ரிப்பேராகிவிட்டதால், ஆட்டோவில் சென்றோம், வண்டியை ஓட்டியவர் தாறுமாறாக ஓட்டினார்.

“என்னப்பா ரேஸர் போல் ஓட்டுறியே' என்றோம்.

“ஆமா, நான் ரேஸர் தான்' என்றார்.

மெட்ராசில் இப்படி ஒரு கலாச்சாரம் இருப்பது அப்போது தான் தெரிந்தது. பிறகு புதுப்பேட்டைக்குச் சென்று சுற்றிக் கொண்டிருந்தோம். நிறைய ஆய்வு செய்தோம். அதை வைத்து  குறும்படம் ஒன்று எடுத்தோம். அதை ஆர்யாவிடம் காட்டினோம். அவருக்குப் பிடித்திருந்தது. அப்படித்தான் எங்களுடைய  முதல் திரைப்படமான ‘ஓரம்போ' உருவாகியது.

‘ஓரம்போ' படத்தின் டிரெய்லர் முதலில் வெளிவந்திருந்தாலும் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. படம் ஓரளவுக்கு கமர்ஷியலாக வெற்றிபெற்றது எங்களுக்கு சந்தோசமாகவே இருந்தது. அடுத்ததாக ‘வா குவாட்டர் கட்டிங்' திரைப்படத்தை எழுதி இயக்கினோம். அதற்கும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. நானும் புஷ்கரும் சென்னை என்பதால் முதல் இரண்டு படங்களிலும் மெட்ராஸ் அப்படியே ஊறிப்போய் இருக்கும்.

அடுத்ததாக எழுதிய கதை ‘விக்ரம்& வேதா‘. மிகவும் பழமை வாய்ந்ததாகச் சொல்லப்படும் விக்ரமாதித்தன் - வேதாளம் கதைகளின் அமைப்பை இப்படத்துக்கு உபயோகப் படுத்தினோம். இந்த கதையை எழுதி முடிக்கவே நீண்ட நாட்கள் ஆனது. வேதா கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி உறுதியாகிவிட, விக்ரம் கதாபாத்திரத்திற்கு யார் என்பதில் குழப்பம் இருந்தது. அப்போது, ‘இறுதிச்சுற்று' படத்தில் மாதவன் நடித்துக் கொண்டிருந்தார். அவரை சந்தித்துப் பேசினோம். கதைக்கான நடிகர்கள் அனைவரிடமும் பேசி, சரியாக அமைய இரண்டு வருடங்களானது. இரண்டு பெரிய நடிகர்களின் தேதிகளும் ஒன்றாக அமையவேண்டும் உள்ளிட்ட சில விஷயங்களால் சில காலம் தாமதம் ஏற்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எங்களின் மூன்றாவது படைப்பு வெளிவந்தாலும், படம் பயங்கர ஹிட். விக்ரம் & வேதா இன்னும் சில மாதங்களில் இந்தி ரீமேக்கில் வெளிவர இருக்கிறது,' என்றவர்,  அமேசான் ப்ரைமில் வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும்  ‘சுழல்' வெப் சீரிஸ் உருவாகிய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

‘சுழல் படத்திற்கான கதை முதலில் முழுநீள திரைப்படத்திற்கான கதையாகத்தான் உருவாகியது. எழுத எழுத கதை  நீண்டு கொண்டே சென்றது. இரண்டு மணி நேரத்தில் மொத்த கதையையும்  சொல்ல முடியாது என்பதால், வெப் சீரிஸாக எடுக்கலாம் முடிவெடுத்தோம். அதற்கான வெயிட்டேஜ் கதையிலிருந்தது. ஆனால், அந்த சமயத்தில் ஓடிடி தளங்கள் இங்கு பிரபலமில்லை. பெரிய பெரிய ஓடிடி தளங்கள் வரும் வரை காத்திருக்கலாம் என முடிவெடுத்தோம்.

ஒருநாள், அமேசான் நிறுவனம் கதை எதாவது இருக்கிறதா என்று கேட்டார்கள். அவர்களிடம் இந்த கதையை சொன்னோம். அவர்களுக்கும் பிடித்திருந்தது. படத்தை நாங்களே இயக்கலாம் என்ற முடிவில், அதற்கான முன் தயாரிப்புகளோடும் இருந்தோம். சில வேலை பளு காரணமாக எங்களால் அது முடியாமல் போனது. இயக்குநர்கள் பிரம்மா, அனு சரண் இயக்கம் எங்களுக்குப் பிடிக்கும் என்பதால், அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அவர்கள் படத்திற்குள் வந்தது எதிர்பாராத ஒன்று. எந்த ஈகோவும் இல்லாமல் வெப் -சீரிஸை இயக்கி முடித்தார்கள்.

 ‘சுழல்' மக்களிடம் தாமதமாகத்தான் போய் சேரும் என்று நினைத்தோம். ஆனால், எதிர்பாராத அளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நிறைய பேர் குடும்பத்துடன் பார்க்கின்றனர்.

 சுழலின் வெற்றி எங்களின் திரை வாழ்வில் மறக்க முடியாத நினைவாக நிச்சயம் இருக்கும்,' என்றவர், புஷ்கருடன்  சேர்ந்து கதை எழுதும் அனுபவத்தையும் கூறினார்.

‘நாங்கள் கல்லூரி காலத்திலிருந்தே கதைகளை சேர்ந்து எழுதிவருகிறோம். திருத்தங்கள் உடபட எல்லாவற்றையும் நாங்களே செய்துவிட்டு படத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும் கதையைக் கொடுத்துவிடுவோம். அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்போம். அனைவரையும் உள்ளடக்கி வேலை செய்யும் போது எல்லோருடைய ஐடியாவும் படத்தில் இருக்கும். இப்போதைக்கு சில கதைகள் கைவசம் இருக்கிறன்றன. இந்தி ரீமேக்கில் உருவாகிவரும்  விக்ரம்&வேதா  வெளிவந்த பிறகு அடுத்தப் படத்திற்கான வேலையைத் தொடங்குவோம்,' என்றார்.

ஜூலை, 2022