இயக்குநர் செல்வக்கண்ணன் 
திரை நேர்காணல்

இது எங்க கதை !

இரா. கௌதமன்

தமிழ் சினிமாவிற்கு இது புதுசு.  ஏற்கெனவே இப்படியான முயற்சிகள் ஒன்று பாதியிலேயே நின்றிருக்கிறது அல்லது உப்புமாவாக முடிந்திருக்கிறது. முதன்முறையாக ஐம்பது நண்பர்கள் சேர்ந்து படம் தயாரித்து வெற்றிகரமாக  வெளிவந்திருப்பது நெடுநல்வாடை படம் தான்.

மார்ச் மாதம் வெயில் குறைந்த மாலைப் பொழுதொன்றில் அந்திமழை அலுவலகத்தில் இப்படத்தின் இயக்குநர் செல்வக்கண்ணனுடன் உரையாடியதிலிருந்து...

‘படித்தது மெக்கானிக்கல் இன்ஜினியரிங். சொந்த ஊர் திருநெல்வேலி சங்கரன்கோவில் பக்கத்தில் தெற்கு அச்சபட்டி. ஏழு எட்டு வருடம் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருந்தேன். என்னுடைய உறவினர் ஒருவர் சினிமாவில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தார். விடுமுறை நாட்களில் அவருடன் சினிமா தொடர்பான வேலைகளுக்கு செல்வதுண்டு.

சினிமாவுக்குத்தான் வர வேண்டும் என்று சென்னைக்கு வரவில்லை. வாய்ப்பு கிடைத்தது அதன் மூலம் உள்ளே நுழைந்துவிட்டேன். உறவினர் மூலமாக தூங்காவனம் இயக்குநர் ராஜேஷிடம் அவருடைய முதல் படமான காலைப்பனியில் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அந்த படத்திற்கு பிறகு சிறிது காலம் கழித்து இயக்குநர் சாமி மிருகம் படம் முடித்த பிறகு சரித்திரம் என்ற ஒரு படம் செய்வதாக இருந்தார். அந்த படத்தில் நெல்லை தமிழ் சொல்லித் தருவதற்கு உதவி இயக்குநர் தேவை என்று சொன்னார்கள். அந்த படத்தில் முழுவதுமாக வேலை செய்தேன். ஏறக்குறைய 90 நாள் ஷூட்டிங் நடைபெற்ற பிறகு படம் நின்று விட்டது. அதற்கு அடுத்து சிந்துசமவெளி படத்தை அவர் தொடங்கினார் அதிலும் வேலை செய்தேன். அந்த படத்தின் பாதியில் இயக்குநருடன் சில கருத்து வேறுபாடு வந்தது. அதனால் பாதியிலேயே வெளியே வந்து விட்டேன். அதன் பிறகு காந்தி கிருஷ்ணாவிடம் சேர்ந்தேன். அவர் செல்லமே, ஆனந்த தாண்டவம் ஆகிய படங்களை தொடர்ந்து கரிகாலன் என்ற படத்திற்கு கதை வசனம் எழுதிக் கொடுத்தார். விக்ரம் நடிப்பில் வேறு ஒருவர் இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேர மாறுதலில் காந்தி கிருஷ்ணாவே அந்த படத்தை இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது. அந்த படம் வரலாற்று சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட உண்மையான கரிகாலனின் கதை. பெரிய பொருட்செலவு தேவைப்பட்ட படம். அந்த படத்திற்கு முன் தயாரிப்பு வேலையே ஒரு வருடம் நடந்தது.  இதற்கு முன்பாக மூன்று படத்தில் வேலை செய்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் சினிமாவை நான் முழுவதுமாக கற்றுக் கொண்டேன். ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இதன் பிறகுதான் தனியாக படம் செய்ய முயற்சி செய்தேன். நான் வேலை செய்த படங்கள் எல்லாம் ஒன்று பெயர் தெரியாத படமாக இருக்கும் அல்லது ரிலீஸ் ஆகி இருக்காது. அதனால் எனக்கு படம் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

இயக்குநர் செல்வக்கண்ண்

ஒரு தயாரிப்பாளரிடமோ ஹீரோவிடமோ கதை சொல்லப் போகும் போது நமக்கு ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. வெற்றிகரமான படத்தில் வேலை செய்திருக்க வேண்டும் அல்லது வெற்றிகரமான இயக்குநரிடம் வேலை செய்திருக்கவேண்டும். இது இரண்டுமே என்னிடம் இல்லை. கதை தயாரானவுடன் இரண்டு மூன்று தயாரிப்பாளர்களை மட்டுமே சந்தித்தேன். நெடுநல்வாடை கதையை படமாக்க அவர்கள் தயாராக இல்லை. வியாபார நோக்கம் கொண்ட தயாரிப்பாளர்கள் யாரும் இந்த மாதிரி கதையை தொட மாட்டார்கள் என்று எனக்கு தெரிந்து விட்டது அதனால் இன்னொரு பக்கம் வியாபார ரீதியாக வெற்றி பெறக்கூடிய கதையையும் தயார் செய்து வைத்திருந்தேன்.

நண்பர்களை சந்திக்கும் போது அவர்கள் கேட்டதால் இந்த கதையை சொன்னேன். நண்பர்களுக்கு சினிமா தெரியாது. அதனால் அவர்கள் புரிந்து கொள்வதற்காக பைலட் ஃபிலிம் அதாவது  குறும்படம் போன்று செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதை தொடங்குவதற்கே என்னிடம் பணம் இல்லை. அந்த ஒரு லட்ச ரூபாயை நண்பர்கள் கொடுத்தார்கள். நான் பைலட் ஃபிலிம் எடுத்துக் கொடுத்தேன். நண்பர்களுக்கு திருப்தியா இருந்தது. அப்பொழுதுதான் அவர்கள் இந்த படத்தை நாமே செய்தால் என்ன என்று கேட்டார்கள். எல்லோருமே வாழ்க்கையில் ஓரளவிற்கு செட்டில் ஆனவர்கள். எல்லோரும் சேர்ந்து ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பணம் கொடுத்தால் போதும் கண்ணன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை நண்பர்களுக்கு இருந்தது. ஆனால் எனக்குள் ஒரு சின்ன பயம் இருந்தது. 20 லட்சம் 30 லட்சம் கண்டிப்பாக சேரும் என்ற நம்பிக்கை இருந்தது. பத்து நண்பர்கள் கண்டிப்பாக கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்களை எப்படி சம்மதிக்க வைப்பது என்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் கல்லூரி முடித்த பிறகு குறைவான நண்பர்களுடன் மட்டுமே நான் தொடர்பில் இருந்தேன். ஆனால் நண்பர்கள், முதலில் நாங்கள் பணம் கொடுக்கிறோம் அதை வைத்து தொடங்கிவிடு. அதற்குள் மற்றவர்களை சம்மதிக்க வைத்து விடலாம், அப்படி முடியாவிட்டாலும் படம் எடுத்த வரைக்கும் வேறொரு தயாரிப்பாளரிடம் காட்டி தயாரிப்பாளர்களை பிடித்து விடலாம். நாங்கள் கொடுத்த பணத்தை எங்களுக்கு திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை என்றார்கள். அப்படி தொடங்கி கடைசியில் எங்களுடைய படமாகவே முடிந்துவிட்டது நெடுநல்வாடை.

முதல் படத்தில் இவ்வளவு அழுத்தமான கதையை எடுத்துக் கொண்டதற்கு காரணம் இது என்னுடைய வாழ்க்கையுடன் தொடர்புடைய கதை. கதையாக உட்கார்ந்து யோசித்து இப்படி ஒரு கதையை செய்யவே முடியாது. இந்த படத்தில் குடும்பத்தில் நடக்கும் பெரும்பாலான சம்பவங்கள் என்னுடைய குடும்பத்திலும் எங்களுடைய உறவினர்கள் குடும்பத்திலும் நடந்த கதை. இந்தக் கதையை எழுதும்போது பெரும்பாலான காட்சிகளுக்கு யாரிடமும் நான் விவாதிக்கவே இல்லை.  நாவல் எழுதுவது போன்று முழுமூச்சாக உட்கார்ந்து எழுதிவிட்டேன். இதேபோல் இன்னொரு கதை செய்ய முடியுமா என்றால் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. வணிக ரீதியாக வெற்றி அடைவதற்கு குறைவான சாத்தியக்கூறுகள் கொண்ட கதை, ஆனால் அழுத்தமான கதை. கதையின் மீது கொண்ட நம்பிக்கையால் மட்டுமே நான் முன் நகர்ந்தேன்.

கவிப்பேரரசு வைரமுத்து சினிமாவுக்கு மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கைக்கே முன்னுதாரணம். எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த அடித்தட்டு வாழ்க்கை என்னுடையது. இந்த வாழ்க்கையில் இங்கிருந்து இவ்வளவு தூரம் தான் போக முடியும் என்று எனக்குள்ளே ஒரு வரையறையும் இருந்தது கவிஞரின் புத்தகத்தைப் படிக்கும் வரை. கவிஞரின் சுயசரிதை நூலான 'இதுவரை நான்' என்ற புத்தகத்தை என்னுடைய இளவயதில் படிக்க நேர்ந்தது.  அந்தப் புத்தகத்தில் கவிஞர் பாடலாசிரியர் ஆக மாறிய தருணம் வரை அவருடைய கதை இருந்தது. அவருடைய வாழ்க்கையும் என்னுடைய எளிய வாழ்க்கையை போலவே இருந்தது. இங்கிருந்துதான் இந்த கவிஞரும் அந்த உயரத்திற்கு சென்று இருக்கிறார் என்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டேன். அத்துடன் நாமும் இதேபோல் செல்ல முடியும் என்ற உத்வேகமும் கொண்டேன். கல்லூரி காலத்தில் மீண்டும் கவிஞரின் அடுத்தடுத்த புத்தகங்களை தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். இவரிடம் தொடங்கி தான் மற்ற எழுத்துகளைப் படிக்க தொடங்கினேன். வாழ்க்கையில் ஒருமுறையாவது அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய லட்சியமாகவே இருந்தது. சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தபோது என்னுடைய உறவினர் ஒளிப்பதிவாளர் செல்லதுரை மூலமாக கவிஞரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.  

அடுத்த சில மாதங்களில் ஒளிப்பதிவாளர் செல்லதுரை கவிஞர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இரண்டு மூன்று மாதங்கள் வேலை இருக்கிறது செய்கிறாயா என்று கேட்டார். கருவாச்சி காவியம் புத்தக வெளியீடு சமயம் அது. விழா தொடர்பான வேலைகளுக்கு குறுகிய காலத்தில் நிறைய நபர்கள் வேலைக்கு தேவைப்பட்டார்கள். கவிஞர் வீட்டில் வேலை செய்வது என்பது கனவு நிறைவேறியது போன்று. அவரை சந்திக்க மாட்டோமா என்று ஏங்கிய எனக்கு அவருடைய அலுவலகத்திலேயே வேலை என்பது கசக்குமா என்ன? உடனடியாக போய் சேர்ந்து விட்டேன்.

கவிஞர் எல்லா விஷயத்திலும்  ஒழுங்கை எதிர்பார்ப்பவர். அப்பொழுது கருவாச்சி காவியம் புத்தக வெளியீட்டிற்காக வைத்திருக்கும் அழைப்பிதழ்களை தயார் செய்ய வேண்டி இருந்தது. அதில் நான் தயார் செய்த அழைப்பிதழ்கள் தனியாக தெரிந்ததனால், யார் இதைச் செய்தது என்று கேட்டு இருக்கிறார் கவிஞர். பிறகு என்னை அழைத்துக் கொண்டு போய் அவர் முன்னால் நிறுத்தினார்கள்.உன்னிடம் ஒரு செய்நேர்த்தியும் ஒழுங்கும் உள்ளது. எதற்காக சென்னைக்கு வந்து இருக்கிறாய் என்று கேட்டார். சினிமாதான் என்னுடைய கனவு என்று சொன்னதும் நீ சினிமாவில் கண்டிப்பாக வெற்றி பெறுவாய் என்று வாழ்த்தினார். அவருடைய வரிகளிலேயே என்னுடைய படப் பாடல்களை எழுதப்பெற்றது பெரும் பாக்கியம்.

2016 இல் ஆரம்பிக்கப்பட்ட படம் இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் எனக்கும் இது முதல் படம் தயாரிப்பாளர்களுக்கும் முதல் படம். பெரும்பாலான டெக்னிஷியன்களுக்கும் இது முதல் படம். ஒவ்வொருமுறையும் விழுந்து எழ வேண்டியிருந்தது. பணம் கிடைக்கும்போது படப்பிடிப்பு நடத்த வேண்டும். இதனாலேயே நிறைய பிரச்னைகள் வந்தது.  ஆனால் படமே கிடைக்காமல் சினிமாவில் நிறைய பேர் கஷ்டப்படும் போது இதை பெரிய விஷயமாக சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்,'' என்கிற செல்வக்கண்ணன், ‘அனைத்து தரப்பினருக்குமான படம் செய்வதே தன்னுடைய விருப்பம்,‘‘ என்று தெரிவித்து விடைபெற்றார்.

ஏப்ரல், 2019.