திரை நேர்காணல்

“ஆபிஸ் பையனாகத்தான் சினிமாவில் நுழைந்தேன்!’ - வெங்காயம்’ ராஜ் குமார்.

முத்துராமலிங்கம்

சில சந்தர்ப்பங்களில் கிடைக்கும் அடைமொழி வாழ்நாள் முழுக்க அவர்களோடு ஒட்டி உறவாடிக்கொண்டே இருக்கும். அப்படி ஆகிக்கொண்டவர்தான் ‘வெங்காயம்'ராஜ்குமார். அதற்கு முன்னர் சங்ககிரி ராஜ்குமாராக இருந்தவர், மிக எளிமையான படமான வெங்காயம்‘ மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்தவர். தயாரிப்பாளர் என்று ஒருவர் இல்லாமலே படம் எடுக்க முடியும் என்று என் வழி தனி வழியாக நடைபோட்டுக்கொண்டிருப்பவர், அதே பாணியில் அடுத்து இரண்டு படங்களை தயாரித்து இயக்கி வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார். ‘அந்திமழை'க்காக சென்னை மழைக்கால மாலை ஒன்றில் அவருடன் நடந்த சந்திப்பு...

 ‘என்னுடைய தாத்தா முழுநேரத் தெருக்கூத்துக் கலைஞர். என்னுடைய அப்பா தறித் தொழிலாளியாக இருந்தாலும் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தெருக்கூத்து என்ற நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும் என்று நினைத்தே என் அப்பா மேடை நாடகங்களுக்கு வந்தார். இதுபோலவே, நானும் அடுத்த நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு சினிமாவுக்குவந்தேன்.
 தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்து என்னுடைய சித்தப்பா ஒரு ஜோதிடரிடம் சென்றார். அவர் ஜாதகத்தைப் பார்த்து விட்டு, உங்களுக்குத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை நீங்கள் பரதேசம் செல்வதற்கான வாய்ப்புதான் இருக்கிறது என்று சொல்ல அதைக் கேட்ட வேதனையில் அவர் குடிக்க ஆரம்பித்து, அது அவர் உடல்நலனைக்
கெடுத்து கடைசியில் தற்கொலை செய்து இறந்து விட்டார். தொழில் தொடங்க முடியாது, அவர் பரதேசம் போவார் என்றெல்லாம் சொல்லத் தெரிந்த ஒரு ஜோதிடரால் என் சித்தப்பா இன்னும் மூன்று மாதத்தில் இறந்து போவார் என்று கணிக்க முடியாமல் போனது ஏன்? என இந்த நிகழ்வைச் சுற்றி எனக்குப் பல கேள்விகள் எழுந்தது. இதைத் தொடர்ந்து எழுந்த தேடல்களில் சாதி, மதம் போன்ற சிந்தனைகள் இந்தக் களத்தில் இருந்தது என்ற விஷயம் எனக்கு அறிமுகமானது.
இது போன்ற கருத்துகளை மக்களிடம் சொல்ல வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்த போது, திரைத்துறைக்குப் போகலாம் என்று முடிவெடுத்தேன்.  எங்கள் ஊரில் இருந்து ஒருவர்  சென்னையில் லாரி ஆஃபிஸ் ஒன்று வைத்திருந்தார். எனக்கு தூரத்து சொந்தமும் கூட. அங்கு யார் போனாலும் தங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. அங்கு தங்கிக் கொண்டு மெல்ல வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. என்னைப் போல லட்சக்கணக்கானோர் திரைத் துறைக்குள் நுழையக் காத்திருக்கிறார்கள் எனத் தெரிய ஆரம்பித்தது,' என்றவர் சினிமாவுக்குள் நுழைந்த கதையை சொன்னார்.


‘உதவி இயக்குநராகும் முன்பு சினிமாவில் நுழைய ஏதேனும் வழி இருக்கிறதா எனத் தேட ஆரம்பித்தேன். அப்போது ஊர்ப்பாசம் எனக்கு அதிகம் இருந்தது. சென்னையில் எங்காவது எங்கள் ஊர் வண்டிப் பதிவு எண்ணைப் பார்த்தால் உற்று கவனிப்பேன். இப்படித்தான் வண்டி எண் பார்த்து  ஒருத்தரை நிறுத்தினேன். அவரிடம் நான் சங்ககிரி.. நீங்களும் நம்ம ஏரியாவா என்று கேட்டேன். இருவரும் அறிமுகமாகிக் கொண்டோம்.  அவர் நடிகர்
சரவணனின் தம்பி. தெரிந்த இடத்தில் ஆஃபிஸ் பாய்தான் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். எதாவது ஒரு வாய்ப்பு கிடைத்து நாம் உள்ளே நுழைந்தால் அடுத்தடுத்து கதவுகள் திறக்கும் என்ற நம்பிக்கையில் ‘ஜங்சன்' என்ற படத்தில் ஆஃபிஸ் பாயாக உள்ளே நுழைந்தேன். அந்த சமயத்தில் இயக்குநர் வேலு பிரபாகரன் படம் ஆரம்பிப்பதாகக் கேள்விப்பட்டேன். அவரது படங்களை எல்லாம் கல்லூரிக் காலங்களிலேயே பார்த்திருக்கிறேன். என் சிந்தனைகளுக்கு அவர் ஒத்துப்போவார் என்று தோன்றியது. அவரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றேன். அவரிடம் உதவி இயக்குநராக மகிழ்ச்சியுடன்சேர்ந்தேன்.
என் அறைக்குப் பக்கத்தில் பிரசாத் லேப்பில் வேலை செய்து கொண்டிருந்த அனிமேட்டர் ஒருவர் இருந்தார். அவரிடம் எனக்குக் கற்றுத் தரச் சொல்லிக் கேட்டு, காலையில் சினிமா வேலை, இரவு இந்த அனிமேஷன் விஷயங்களும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். கற்றுக் கொண்ட இந்த விஷயத்தை எங்காவது செயல்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற சூழல் வந்தபோது தமிழன் தொலைக்காட்சியில் எனக்கு பணிபுரிய வாய்ப்பு வந்தது. கிராஃபிக்ஸ் டிசைனராக உள்ளே பணிபுரிந்தாலும் என் கவனம் முழுக்க இயக்கத்திலேயேஇருந்தது.

மூன்று மாதங்கள் வேலை பார்த்து விட்டு, தொடர் இயக்குவதற்கான வாய்ப்பைக் கேட்டேன். கடவுளின் நம்பிக்கையால் மக்களை ஏமாற்றுவது, அதைச் சுற்றி இருக்கக்கூடிய மூட நம்பிக்கைகள் போன்றவற்றைப் பற்றியத் தொடர் இயக்கப் போவதாகச் சொன்னதும்  நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் என்னை வெகுவாகஊக்குவித்தார்.
மண்ணின் மைந்தர்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணி நான் என் ஊரில் உள்ளவர்களையே என் தொடரில் கொண்டு வந்து பிரச்னைகளைப் பதிவு செய்தேன். அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. அதனால், இன்னும் கவனத்தில் வராத சின்ன பிரச்னைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும் என பல முன்னணித் தொலைக்காட்சி நிறுவனங்களையும் தொடர்பு கொண்டேன். அப்போது புதிதாக ஆரம்பித்த மக்கள் தொலைக்காட்சியில் எனக்கு வாய்ப்பு கிடைத்து மக்கள் குரலைப் பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

அந்த ஒரு வருடம் என் வாழ்க்கையில் மிக முக்கிய  திருப்புமுனையாக அமைந்தது. ஒரு வாரத்தில் அரைமணி நேரத்திற்கான எபிசோட்டில் மக்கள் எப்படி அதை எதிர்கொள்கிறார்கள், என்ன மாதிரியான விமர்சனம் வருகிறது என்பதை எல்லாம் தெரிந்து கொண்டேன். கிட்டத்தட்ட பத்துப் படங்களில் பணிபுரிந்தஅனுபவம்எனக்குகிடைத்தது.
அடுத்து இதுபோன்ற விஷயங்களை முழு நீளத் திரைப்படமாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. நான் எடுத்த தொடரில் உள்ள நான்கு எபிசோட்களை ஆந்தாலஜி வடிவில் ஒரு லீட் கொடுத்து திரைப்படமாக எடுக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான கதையை உருவாக்க ஆரம்பித்தேன். பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல அலைந்தபோது, பெரும்பாலான மக்களுடைய நம்பிக்கைக்கு எதிராக இந்தக் கதை இருக்கும்போது அது எப்படி  வெற்றிபெறும் என்று கேட்டு தவிர்த்தார்கள்.

அதை அடுத்துதான் தயாரிப்பாளர் தேடி அலைவதால் எந்த பிரயோசனமும் இல்லை. உறவினர்கள், நண்பர்களிடம் சின்னச்சின்ன பொருளுதவிகள் பெற்று நாமே தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். அதனால், நடிகர்களாக எங்கள் ஊர் மக்களையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது. ஒரு பாடலுக்கு மட்டும் சத்யராஜ் சாரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்குப் பிறகு படத்தை வியாபாரம் செய்வது என்பது எனக்குச் சிக்கலாகவும் பிடிபடாத விஷயமாகவும் இருந்தது. படம் நன்றாக இருந்ததால் அலுவலகம், தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில்  நண்பர்கள் உதவ ஆரம்பித்தார்கள். ஆனால், பட ரிலீஸ் என்று வந்தபோது யாரும் முன்வராததால்,  நாங்களே வெளியிட்டோம். தியேட்டர் கிடைப்பது, விளம்பத்திற்கான பணம் போன்ற சிரமங்கள் இருந்தது. இதனால், படம் வெளியான இரண்டு மூன்று நாட்களில் திரையரங்குகளில்இருந்துதூக்கஆரம்பித்துவிட்டார்கள்.

அப்போது நடிகை ரோகிணி அவர்கள் இந்தப் படத்தை விமர்சனத்திற்காகப் பார்த்திருக்கிறார். அவருக்கு படம் பிடித்துப் போய் இயக்குநர் சேரனிடம் சொல்ல, வேறு மாதிரி இந்தப் படத்தை புரோமோட் செய்வோம் என்று அவர் படம் பார்த்துவிட்டு சொன்னார். அதற்குப் பிறகு நடந்ததுதான் என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது.

சேரன் அவருடைய வட்டத்தில் இருந்த முக்கிய  நபர்களை எல்லாம் அழைத்து விமர்சனம் சேட்டிலைட் உரிமம் போன்ற விஷயங்களில் உதவினார். சன் டிவியில் படம் ஒளிபரப்பாகி மக்களிடம் போய் சேர்ந்தது. அது எனக்கு மிகப் பெரிய அளவிலான உற்சாகத்தைக் கொடுத்தது. மக்களுக்கான கருத்தை எந்தவிதமான சமரசமும் இல்லாமல் அவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்று நினைத்து எடுத்த படம் மக்களைப் போய் சேர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சியாகஇருந்தது.

இந்த பிசினஸ் நன்றாக இருந்ததால் அடுத்த படம் ஆரம்பித்தேன். ஆனால், அப்போது டிஜிட்டல் காலக் கட்டமாக சினிமா மாறத் தொடங்கி இருந்ததால் என் பணிகளில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. தயாரிப்பு செலவும் அதிகம் தேவை என்பதால் சுயாதீனப் படங்களின் தேவையை நான் உணர ஆரம்பித்தேன். அதனால், ‘வெங்காயம்' போலவே தனியாக எடுக்கலாம் என வலுவானக் கதைக்களத்தை எடுத்தேன். பெரிய பட்ஜெட்டில் பெரிய பொருட்ச்செலவில் விளம்பரப்படுத்தும் படங்கள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளில் தனித்துவமாக வரும் படங்கள் என இரண்டு விதங்களில் மக்கள் படத்தைக் கவனிக்கிறார்கள் என்பதை யூகித்தேன்.

அதனால், சினிமா எடுப்பது கடினமான விஷயம் கிடையாது என்பதைச் சொல்வதற்காகத் தனி ஒருவன் எடுத்த படம் எனக் கொண்டு செல்ல நினைத்து ‘1' என்ற படம் ஆரம்பித்தேன். அது பெரிய வேலையாக இருந்தது. இதற்கிடையில் கொரோனா காலகட்டமும் வந்தது. இதில் போஸ்ட்புரொடக்ஷன் வேலைகளை முடித்தேன்.

‘வெங்காயம்' படத்தை நான் எடுத்த விதத்தைத் திரைக்கதையாக்கிய போது அழகான கதையாக வந்தது.  இதற்குப் பெரிய நடிகர்கள் தேவையில்லை என்று முடிவு செய்து  ‘பயோஸ்கோப்' என்ற பெயரில் எடுத்திருக்கிறேன்.  இப்போது ‘பயோஸ்கோப்', ‘1‘ என்ற இரண்டு  படங்களுமே  வெளியீட்டிற்குத் தயாராக இருக்கின்றன. ‘பயோஸ்கோப்  ஜனரஞ்சகமாக நகைச்சுவையாக இருக்கும். இதற்குப் பிறகு ‘1' படத்தின் வெளியீட்டு அறிவிப்பு வரும்.  தொடர்ந்து சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருக்கும் எளிய மக்களின் வாழ்வை படமாக்கவேண்டும் என்பதே என் விருப்பம்,' என்று முடித்தார் ராஜ்குமார்.

டிசம்பர், 2022