திரை நேர்காணல்

ஆபாவாணனும் ஐந்துரூபாயும்!

அ.தமிழன்பன்

2006 ஆம் ஆண்டில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். ஆறாண்டுகளுக்குப் பிறகு இப்போது கோலிசோடா படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பும் அவர்தான்.  பட வெளியீட்டுக்குப் பின்  அவரிடம் பேசினோம். ஆபாவாணன், பாண்டிராஜ், லிங்குசாமி, சுசீந்திரன் உட்பட  பல நண்பர்கள் தனக்கு அளவுக்கதிகமாக உதவினார்கள் என்று நெகிழ்கிறார் அவர்.

“ஆபாவாணனின் ஊமைவிழிகள் படத்துக்குப் பின்புதான் பிலிம்இன்ஸ்டிடியூட் என்று ஒன்றிருப்பதே எல்லோருக்கும் தெரியும். எனக்கும் அப்படித்தான். அந்தப்படம் வரும்போது ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். அதன்பின் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தேன். அப்போது ஒரு படப்பிடிப்பில் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றினேன். முதல்நாள் எனக்கு ஐம்பதுரூபாய் பணம்கொடுத்தார்கள். அதிலிருந்து ஒரு ஐந்துரூபாயை எடுத்து, ஆபாவாணனுக்கு மணியார்டர் செய்தேன். நீங்கள் துரோணர், நான் ஏகலைவன். என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களால்தான் நான் இந்த இடத்துக்கு வந்தேன். என் முதல் வருவாயின் பத்து       சதவீதத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன் என்றெழுதி மணியார்டர் செய்திருந்தேன்.  அதை நான் யாருக்கும் சொல்லியிருக்கவில்லை.  கோலிசோடா படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது பிலிம்இன்ஸ்டிடியூட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் எங்கள் இருவரையும் சிறப்புவிருந்தினர்களாக அழைத்திருந்தார்கள். அந்த மேடையில்தான் முதன்முதலில் இந்த விஷயத்தைச் சொன்னேன். உடனே அவர் எழுந்து என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.  ‘அந்த ஐந்துரூபாய் இன்னும் என் பூஜையறையில் இருக்கிறது. இவ்வளவு நாட்கள் அதை அனுப்பியது யாரென்று தெரியாமல் இருந்தேன். இப்போது மிக சந்தோஷமாக இருக்கிறது’ என்று சொன்னார்.

இப்படம் எடுக்கவும் அவர்  எனக்குப் பெரியஉதவி செய்தார்.  இந்தப்படத்தின் கதையைக் கேட்டு விட்டு இந்தப்படத்தை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்தான் எடுக்கமுடியும் என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரைச் சந்தித்து படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்க உதவினார். அதனால் அங்கிருந்தவர்களின் முழு ஒத்துழைப்போடு படத்தை நினைத்தபடி எடுக்க முடிந்தது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐம்பத்துஐந்து நாட்களில் முடிந்துவிட்டது. இந்த 55 நாட்கள் படப்பிடிப்பு நடக்க மொத்தம் ஒன்றேகால் வருடங்கள் ஆகின. அதற்குக் காரணம், படத்தில் நடித்த பையன்கள் மற்றும் பெண்கள் ஆகிய எல்லோருமே படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே சனி,ஞாயிறு விடுமுறைகளில் மட்டுமே படப்பிடிப்பு. எனவே இரண்டுநாட்கள் படப்பிடிப்புக்கான பணத்தைத் தயார் செய்ய ஐந்துநாட்கள் கிடைத்தன. நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்ததால் அந்தப்பணத்தைத் தயார் செய்வது சிரமமாக இருக்கவில்லை. எனவே படப்பிடிப்பு நாட்கள் ஜாலியாகவே இருந்தன.

    இந்தப்படம் உருவாக மிகமுக்கிய காரணம்  இயக்குநர் பாண்டிராஜ்தான் என்பேன். அவர் மெரினா படமெடுத்தது வெற்றி பெற்றதால் பல பேர் துணிந்து படத்தயாரிப்பில் இறங்கினார்கள். அப்படி இறங்கியவர்களில் நானும் ஒருவன். பாண்டிராஜே இந்தப்படத்தைத் தயாரித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தேன். அது நடக்கவில்லை. நான் வசனங்களை எழுதித்தருகிறேன் என்று அவர் முன்வந்தார்.” மென்மையாகச் சொல்கிறார் விஜய் மில்டன்.

பிப்ரவரி, 2014.