திரை நேர்காணல்

அவர்கள் ஒரிஜினல்கள் அல்ல நிழல்கள்

அசோகன்

இயக்குநர் மணிவண்ணன்

இயக்குநர் மணிவண்ணனின் ஐம்பதாவது படத் தயாரிப்பு வேலைகள் நடந்தபோது அவரது ஐம்பது படங்கள் தொடர்பான அவரது அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு வருவது என்ற நோக்கில் அவரிடம் பேசி எழுதத் தொடங்கினோம். ஒரு சில சந்திப்புகளுக்குத் தான் அப்போது நேரம் இருந்தது. அவர் நாகராஜசோழன் படத்தின் வேலைகளில் மூழ்கி விட்டார். படம் வெளியான பின்னும் சந்திக்கும் வாய்ப்பு தள்ளிச் சென்றுகொண்டே இருந்தது. ஆனால் இப்போது அவரை நிரந்தரமாகவே சந்திக்க இயலாது போய்விட்டது. நூல் எழுதுவதற்காக அவரிடம் பேசித் தொகுத்தவற்றில் இருந்து சிலபகுதிகள்  இங்கே:

என் சொந்த ஊரில்  இருந்தது  ஒரே ஒரு தியேட்டர்.  அதில் எப்போதும்  சிவாஜி நடிச்சது, எம்.ஜி.ஆர் நடிச்சது, ஜெயசங்கர், ரவிசந்திரன் நடிச்சது, அப்புறம் மாடன் தியட்டர்ஸ் படம், விடாக்கண்டன் கொடாக் கண்டன் மாதிரியான தெலுங்கு  படங்கள் தான் ரீலிஸ் ஆகிக்கொண்டிருந்தன. தமிழ்ப் படங்களை பார்க்கிற போது ஒரே மாதிரியான அம்சங்களைக் கொண்ட படங்கள்தான் திரும்ப திரும்ப வருவதாக பத்தாம் வகுப்புப் படிக்கும் போதே தோன்றியது.  அந்த சமயத்தில் ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான், பாலசந்தருடைய  அரங்கேற்றம் போன்ற படங்கள் வெளிவரும்போது  வழக்கமாக வந்துகொண்டிருந்த அந்த படங்களுக்கு மத்தியில் இந்த படங்களின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பாலசந்தருடைய ரசிகராக மாறினேன்.   கல்லூரிப் படிப்புக்குக் கோவைக்கு போகும் சூழ்நிலையில் அடிக்கடி வகுப்பைக்  கட்டடித்துவிட்டு ரெயின்போ,சண்முகா தியேட்டர்களில் போய் சினிமா பார்க்க ஆரம்பித்தேன்.

 ரெயின்போ தியேட்டர்ல ஆங்கில படங்கள் போடுவார்கள். சண்முகா, தியேட்டர்களில் மலையாள படங்கள் காலைக்காட்சி போடுவார்கள். சினிமா பற்றிய அறிவு விசாலமானது. மலையாள படங்களில்  கிராம மக்களின்  வாழ்க்கையையும் கடற்கரை ஓர வாழ்க்கையையும் அப்படியே எதார்த்தமாக அழகாகக் காட்டியிருப்பார்கள்.  அது போன்ற படங்கள் ஏன் தமிழ்நாட்டில், தமிழ்மொழியில் வரவில்லை என்று  மனதில் பட்டது. செம்மீன், மழை,  நிங்களென்ன கம்னீஸ்டாக்கி போன்ற படங்கள் நான் ரொம்ப ரசித்து திரும்ப திரும்ப பார்த்த படங்கள். அதேமாதிரி ஆங்கில படங்களைப் பார்க்கும் போது அதன் கதாபாத்திர அமைப்பு, செட் அமைப்பு.. இதெல்லாம் என்னைக் கவர்ந்தன. ஒரு மனிதன் ரோட்டில் நடந்து போவதை இயல்பாக எடுத்திருப்பார்கள்.

அந்த சமயத்தில் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படம் ரீலிஸ் ஆனது. அதைப் பார்த்தவுடனே  என்ன மாதிரியான படங்கள் தமிழில் வரணும், என்ன மாதிரி வளரனும் என்று நினைத்தோமோ அதேமாதிரியான படமாக இருக்கிறதே என்று நினைத்து பாரதிராஜாவின் தீவிர ரசிகனாக, வெறியனாக மாறிவிட்டேன்.  அவரோட இரண்டாவது படம் கிழக்கே போகும் ரயில் வெளிவந்தது. அந்த படத்தை நான்கைந்து முறை பார்த்திருப்பேன். அதில் நடித்த அனைவரும் புதுமுகங்கள். அவர்களை வைத்து இப்படி ஒரு படம் எடுத்திருக்கிறாரே என்று எனக்கு பிரமிப்பாக இருந்தது. அந்த படத்தில் நுட்பமாக, இயக்குநராக அவர் செய்த நல்ல நல்ல விஷயங்களைத் தொகுத்து, அவரிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும்  விளக்கமா ஒரு கடிதமா எழுதத் தொடங்கினேன். அது எண்பது பக்கம் கொண்ட கடிதமாக இருந்தது. அதை படித்த உடனே சென்னையில் வந்து  தன்னைப் பார்க்குமாறு பாரதிராஜா எழுதியிருந்தார்.

அந்த சமயத்தில் மகேந்திரன் அய்யாவின் உதிரிப்பூக்கள், பாலுமகேந்திராவோட படங்கள் வெளிவந்து அடுத்த பரிணாமத்துக்கு தமிழ்சினிமாவை கொண்டுச்சென்றன. சென்னைக்கு சென்று பாரதிராஜாவைப்  பார்த்தபோது புதியவார்ப்புகள் படப்பிடிப்பு. “நீங்க தானா அது? நான் லெட்டரை பார்த்தவுடனே யாரோ வயசானவர் என்று நினைத்தேன், சரி உதவி இயக்குனரா சேர்ந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.

தயாரிப்பாளர், கே.ஆர்.ஜி அவர்கள் தான் எத்தனை உதவி இயக்குனர் வைத்துகொள்வாய், ஏற்கெனவே ஏழு பேர் இருக்காங்க என்று சொல்லி என்னை புரடக்சன்ல போட்டார்.

புதியவார்ப்புகள் படபிடிப்பின்போது  பிலிம் வாங்கிக் கொடுப்பதற்காக வைகை டேம்க்கு போவேன், அப்பறம் அங்கு கொடுக்கும் எக்ஸ்போஸ் ஆன பிலிமை லேபுக்கு கொண்டுபோகணும், அந்த சமயத்தில் படபிடிப்புத் தளத்துக்கு  சாப்பாடு எடுத்துபோகும் வேனில் சென்று  படபிடிப்பை வேடிக்கை பார்ப்பேன், அதுவே எனக்கு பிரமிப்பாக இருக்கும். சிவப்பு ரோஜாக்கள் படத்தின் போதெல்லாம் நான் கம்பெனி சார்பா, வவுச்சர்ல கையெழுத்து வாங்குவது, பேட்டா கொடுப்பது,  அப்புறம் செட்டுக்குத்தேவையானத வாங்கிகுடுப்பது போன்றவேலைகளில்  கேஷியருக்கு ஒரு உதவியாளரா இருந்தேன். ஆனால் நம்ம மனசல்லாம் அவர் எப்படி சொல்லிக்கொடுக்கிறார், இன்றைக்கு என்ன கேரக்டர் எடுக்கிறார் என்பதிலேயே இருக்கும்.

பாரதி ராஜா ஆபீசுக்கு வருவார்;  டீ வாங்க சொன்னா வாங்கி தருவேன், சிகரெட் வாங்க சொன்னா வாங்கிட்டு வருவேன். அவர் நான் லெட்டர் போட்டதையும், உதவி இயக்குனராக சேரனும் என்று சொன்னதையும் மறந்தே விட்டார். இப்படியே இருந்தால் காலம் போய்விடும் என்று, இடையில் பாலுமகேந்திராவை, மீசை செல்லப்பாவை போய்ப் பார்த்தேன். அப்பறம் டைரக்டர் ருத்ரய்யாவை பார்த்தேன். அவர் ஸ்கிரிப்ட் சொல்ல சொன்னார், சிம்பிளா இரண்டு மூன்று சொன்னேன் . உங்க கதை நன்றாக இருக்கு   நான் ஆர்ட்டிஸ்டிக்கா  படம் எடுக்கிறவன், நல்ல புரடியூசர் கிடைத்தால் சொல்கிறேன் என்று இயல்பாக பேசினார்.

அப்ப டைரக்டர் பாரதிராஜா லோகாம்பாள் தெருவுக்கு வீடு மாத்தினார். அங்கு பார்த்தால் பெயின்டு அடித்துக் கொண்டிருப்பார்கள். எலெக்ட்ரீசியன் வேலையும் நடந்துகொண்டிருக்கும். டைரக்டர் காலையில் பார்க்கும் போது பெயிண்டு அடித்துகொண்டிருப்பேன். பார்த்துவிட்டு என்ன சாப்பிட்டிங்களா என்று கேட்டுவிட்டு போவார். சாயந்திரம் பார்த்தால் எலக்ட்ரீசியன் வேலை பார்த்துகொண்டிருப்பேன்.  இப்படி மாற்றிமாற்றி வேலை செய்வதைப் பார்த்து ‘என்னய்யா காலையில பெயிண்டுதானே அடிச்சிகிட்டிருந்தே..?’ என்று ஒரு நாள் கேட்டார்.

 சார் எனக்கு இரண்டு வேலையும் தெரியும் என்று சொன்னேன். பாருய்யா கோயமுத்தூர்காரனுக்கு எல்லா வேலையும் தெரியுது என்று சொன்னார்.

சார் நான் உங்களிடம் கதை சொல்லதான் வந்தேன்;

நீங்கள் புரடக்சனில் சேர்த்துவிட்டீர்கள் என்று சொன்னேன். அப்படியா எப்ப என்று கேட்டார்.  எண்பது பக்க லெட்டர் எழுதியதை விவரமாக சொன்னவுடன் அடுத்த நாளே என்னை உதவி இயக்குநரா வரச் சொல்லிவிட்டார். கல்லுக்குள் ஈரம் பட ஷூட்டிங்.

மைசூர் அருகில் உள்ள தலக்காடு என்னும் ஊரில். எல்லா வேலையையும் நன்றாக செய்து அவரிடம் பெயர் வாங்கினேன். அங்கிருந்து வந்தவுடன் நிழல்கள் படம் கதை சொன்னேன். அவருக்குப் பிடித்துப் போய் வேலை ஆரம்பமானது.  தமிழ் படங்களுக்கு பழக்கமில்லாத, காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் இல்லாம அந்த படம் வந்தது. அது சரியா ஓடல.  ஆனா அந்த கதை ஒரிஜினல் இன்னும் என்கிட்ட இருக்கு.  அந்த படம் என்னன்னா ஒரு மனிதன் படிக்கிறான்; அதற்கப்புறம் வேலைக்கு போகிறான். இதற்கிடையில் அவனுக்கொரு வெற்றிடமான காலகட்டம் வரும்.  அதை சந்திக்காத மனிதர் எவரும் இல்லை, சிலருக்கு அந்த காலம் நிறைய இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும்.

இந்த கனிணி யுகத்தில் அந்த வெற்றிடம் வேலைக்குப் போனபிறகு கூட வரலாம். அதனால இதை வேலையில்லா திண்டாட்டத்துக்கான படமா சொல்ல கூடாது. இது ஒரு எவர்கிரீன் சப்ஜெக்ட்டுதான். அதற்கு முன்னாடிவரை ஓர் இளைஞன், அப்பா பிள்ளையாக அம்மா பிள்ளையாக இருக்கான். படித்துமுடித்து வேலை தேடும் போது அப்பாவினுடைய கருத்து பழமையானதாக தெரியுது, அம்மாவினுடைய கருத்து பழமையானதாக தெரியுது. அவன் புதிய தலைமுறையின் பிரதிநிதியாக இருக்கான். தலைமுறை இடைவெளி ஏற்படுகிறது. அந்த தலைமுறை இடைவெளி ரொம்ப உயிர்ப்போடு இருக்கும். அது எப்படி அவர்களுடைய கனவுகளை பாதிக்குது,அது எப்படி பெண்களை பாதிக்குது,பெண்களுடைய கனவுகள் அவர்களின் அப்பா அம்மாவால் கூடஎப்படிச்  சிதைக்கப்படும். இப்படி எல்லாவற்றையும் சொல்லி, எதார்த்த வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்குமொரு கனவு இருக்கும் அதைநோக்கித்தான் அவனுடைய பயணம் இருக்கும். ஆனால் அதை அடைய  முடியாமல், வாழ்வின் பொருளாதார நிலையை சமாளிப்பதற்காக கிடைத்த வேலையைச்  செய்து கொண்டு, நிழல்களாகதான் உலவிகொண்டிருப்பார்கள்; அவர்கள் ஒரிஜினல் அல்ல, நிழல்கள்தான். அதனால் தான் அந்த படத்துக்கு நிழல்கள் என்று பெயர் வைத்தேன்.

அது நான் கதை சொன்னபோதே வைத்த பெயர்தான். அந்த படம் ஓடல என்றவுடன்  பாரதிராஜாவுக்கு இது தேவையா இவன்கிட்ட  போய் கதை கேட்டாரே என்று எல்லோரும்  அவரை விமர்சனம் செய்தார்கள். இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் அவர்கள்தான் எனக்கு ரொம்ப ஆதரவாக  இருந்தார். இந்த கதை நன்றாகத்தான் இருந்தது, ஒருபடம் ஓடலன்னு ஒருத்தனை தூக்கிப் போடனும்னா, தமிழ் நாட்டில  நிறைய பேர தூக்கிப் போட்டிருக்கனும், எல்லா படமும் வெற்றிகரமாக ஓடின டைரக்டரும், நடிகரும், கதாசிரியரும் யாருமே இல்லை. நீ அடுத்த கதையை எழுது. நாம பாவலர் கிரியேஷன்ல எடுக்கிறோம் என்று சொன்னவுடன்தான் நான் அலைகள் ஓய்வதில்லை ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தேன். ஆறு ஏழு நாளில் எழுதிவிட்டேன்.

முதல்ல யோசிச்சதே இந்த சீன்தான் அக்கா என்னடா படிக்குது...படிக்க படிக்க பாவாடை மேலே ஏறுது என்பான்.  அது தோல்வி பயத்தில் அதனால் ஏற்பட்ட வெறுப்பில் எழுதுனது. 

நிழல்கள் படத்தில் ஒரு பாட்டு வரும்.

மடை திறந்து பாயும் நதியலை நான்.

மனம் திறந்து கூவும் புதுக்குயில் நான்;

இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்

 நினைத்தது பலித்தது...

இந்த பாட்டில் ஒரு சுவாரசியம். பாடல் எழுதுவதற்காக ஓட்டல் அறையில் கவிஞர் வாலியின் வருகைக்காக இயக்குநர், இசையமைப்பாளர் இளையராஜா, ஆகியோருடன் நானும் காத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். வாலி வர தாமதம் ஆகவே, மணிவண்ணா எங்கே நீ எழுது பார்க்கலாம் என்று இயக்குநர் சொன்னார். இளையராஜாவின் இசையைக் கேட்டு நானும் நாலு வரி எழுதினேன். அதற்குள் வாலி வந்துவிடவே, இயக்குநர் நான் எழுதிய தாளைப் பிடுங்கி தலையணைக்குள் வைத்துவிட்டார்.

வாலி அமர்ந்து டியூனைக் கேட்டுவிட்டு வரிகளைச் சொல்ல ஆரம்பிக்கிறார். முதல்வரி.... மடைதிறந்து பாயும் நதியலை நான்... எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அடுத்தவரி, மனம் திறந்து கூவும் புதுக்குயில் நான்...பாரதிராஜா மிகவும் ஆச்சரியப்பட்டு.. வாலி இதைப் பாருங்க என்று தலையணைக்குள் இருந்து நான் எழுதிய தாளை எடுத்து நீட்டினார். அப்படியே அச்சு அசலாக வாலி சொன்ன வரிகளையே நானும் எழுதி இருந்தேன். மிகப் பெரிய ஆச்சரியம். வாலி இப்போது என்னிடம் சொல்வார்: நான் பாட்டு எழுதுவதற்கு முன்பே என் வரிகளைச் சுட்ட ஆளுய்யா நீ... என்று.

அந்தப் பாடல் இசை மிகவும் துள்ளலானது. அதை முதலில் இளையராஜா பாடினார். பின்னர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடினார். எஸ்.பி.பி நன்றாகப் பாடினாலும் இளையராஜாவின் குரலில்தான் அப்பாடலுக்கான உயிர் இருப்பதாகக் கருதினேன். அதனால் இரண்டு குரல்களும் கலந்தே கேசட் வெளியானது.

கலைஞர் கருணாநிதி வசனத்தில் பாலைவனரோஜாக்கள் படம் வெளிவந்து நன்றாக ஓடிக் கொண்டிருந்த நேரம். கோவையில் நடிகர் சத்யராஜ் உறவினர் திருமணம். அதற்கு முதலமைச்சர் எம்.ஜி,ஆர் வந்திருந்தார். நிகழ்ச்சியில் என்னைப் பார்த்தவர் தன்னை ஓட்டலில் வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டுப் போய்விட்டார். எனக்கோ நடுக்கம். போச்சுடா இன்று நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறோம் என்று நினைத்தவாறே போனேன். அவர் மாடியில் இருந்தார். கீழே அதிமுகவின் முக்கிய தலைகள் எல்லாம் அவர் அழைப்புக்காகக் காத்திருந்தார்கள். நானும் போய் ஒரு ஓரமாக நின்றேன். என்னை யாரென்று கேட்டார்கள்.

சென்னையைச் சேர்ந்த ஒரு இயக்குநர். முதல்வர் வரச்சொன்னார் என்றேன். யாரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பின்னர் அவரது உதவியாளர் யார் யார் வந்துள்ளார்கள் என்று குறித்துக் கொண்டு மேலே போனார். கொஞ்ச நேரத்தில் கீழே வந்து, ‘இங்கே யாருங்க மணிவண்ணன்? நீங்க மட்டும் மேலே போங்க’ என்றார்.

சிரிப்போடு வரவேற்ற எம்.ஜி.ஆர், “நீங்க இயக்கிய பாலைவன ரோஜாக்கள் படம் பார்த்தேன். நல்லா இருந்துச்சு” என்றார்.

ஆச்சரியத்துடன் “நன்றிங்க” என்றேன்.

“அது சரி... அதில் வசனம் எல்லாம் யாரு எழுதுனது?” என்றார்.

“எல்லாம் தலைவர் கலைஞர் எழுதுனதுதாங்க” என்றேன்.

“அவரு உங்களுக்குத் தலைவரா?” என்று நக்கலாகக் கேட்டவர், “அவர் எழுதினா எப்படி எழுதுவாருன்னு எனக்குத் தெரியும்.. அவர் ஸ்டைல் வேற...” என்றார்.

“அவரு எழுதிக் கொடுத்து அனுப்புவாருங்க. நான் கொஞ்சம் கொஞ்சம் மாத்திக்குவங்க.” என்றேன்.

‘’அதானே பாத்தேன். படம் ரொம்ப நல்லா இருந்தது. பாராட்டத்தான் கூப்பிட்டேன்” என்றார்.

வெளியே வந்தேன். ஜிவ்வென்று காற்றில் பறப்பது போல் இருந்தது. எவ்வளவு பெரிய கலைஞன்... இன்னொரு கலைஞனை மதிக்கத் தெரிஞ்ச கலைஞன்...

அந்த கணத்தில் இனி எந்த காலத்திலும் இவரை விமர்சித்து நாம் இனி படம் எடுக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.

உடல்நலமில்லாத போது எனக்கு பெரிய அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்திருந்தார்கள். பல மணி நேரங்கள் பிடிக்கக் கூடிய அறுவை சிகிச்சை அது. எல்லா பரிசோதனைகளும் முடிந்துவிட்டன. என்னைத் தயாராகப் படுக்க வைத்து ஆபரேஷன் தியேட்டருக்குத் தள்ளிச் செல்ல வேண்டும். ஆனால் அங்கே அழைத்துச் செல்லாமல் வேறொரு இடத்தில் காத்திருக்க வைத்துவிட்டார்கள். யாரும் காரணம் சொல்லவில்லை. எனக்கு எதுவும் புரியவில்லை.

‘’ஏங்க.. ஏன் காத்திருக்கீங்க?” என்று கேட்டேன்.

தயக்கத்துடன் எனக்கு சொல்லப் பட்ட பதில்: “நல்ல நேரம் இன்னும் வரலை. அதுக்காக வெயிட் பண்றோம்”. என்பது. நான் உடனே மருத்துவரை அழைத்து “நல்ல நேரம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்பவே இந்த நேரத்திலேயே எனக்கு அறுவை சிகிச்சையைத் தொடங்குங்கள். அதனால் எந்த விளைவு ஏற்பட்டாலும் பரவாயில்லை“என்றேன். அப்படியே செய்யப் பட்டு அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது. எது எதற்கெல்லாம் மூட நம்பிக்கை பாருங்கள்!   

ஜூலை, 2013.