திரை நேர்காணல்

அம்மாவிடம் பொய் சொல்லி சென்னைக்கு வந்தேன்!

சபீதா ஜோசப்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஊரைவிட்டு ஓடிவந்து சென்னையில் உழைத்து தங்கள் கனவை நிஜமாக்கிய இளைஞர்களில் விஜய் ஆன்டனியும் ஒருவர். நடிகனாகும் கனவில் வந்தவர் சவுண்ட் என்ஜினியரானார்.  இசையமைப்பாளரானார். இதோ இப்போது நடிகராகவும் பரபரப்பாய் இருக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து...

' நான் பிறந்தது நாகர்கோவிலில். அப்பா பெயர் பாபு. அவர் டவுன் பிளானிங் டிபார்ட்மென்டின் ஜூனியர் அசிஸ்டென்ட் ஆக பணியாற்றிக் கொண்டிருந்தார். அம்மா மேரி. அதோடு ஒரு தங்கையும்.  இது தான் எங்களின் அளவான, அழகான குடும்பம்.

அப்பா திருச்சியில் வேலை பார்த்ததால்  என் தொடக்கப்பள்ளி வாழ்க்கையும் அங்குதான் ஆரம்பம். மலைகோட்டை,கல்லணை என்
சின்னவயதிலேயே கண்களில் நுழைந்து இதயத்தில் நிறைந்த இடங்கள்.  வாழ்க்கை எத்தனை மகிழ்ச்சியானதோ அத்தனை
சோகமும் நிரம்பியது என்பதை சின்னவயதிலே இயற்கை உணர்த்தி விட்டது. எனக்கு ஏழுவயதாக இருந்தபோது இளம்கன்று பயமின்றித் துள்ளித் திரியும் அந்தப் பருவத்தில் அப்பா திடீரென எங்களை ஏங்கவிட்டு இயற்கை எய்தி விட்டார்.  நானும் தங்கையும் அழுதோம் அம்மா எங்களுக்குத் தெரியாமல்  அழுதார். இயற்கையின் திடீர்த் தாக்குதல் நிலைகுலைய வைத்தது. அதன்பின் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்குக்கூட  சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை, சாத்தூர், திருச்சி, நாகர்கோவில் என்று ஒவ்வொரு ஊரில் இருந்த உறவினர்களின் ஆதரவில் என்னுடைய பன்னிரண்டாம் வயது வரை 
சொந்தக்காரர்களின் அன்பான உதவியோடு வாழ்க்கை நகர்ந்தது.

ஒருவழியாக அப்பாவின் வேலை அம்மாவுக்கு கிடைத்தது. எல்லார் முகத்திலும் சந்தோஷம். இனி ஆண்டவர் இந்தப் படகை கரைசேர்த்துவிடுவார் என்றார்கள்.

 அம்மாவுக்கு திருநெல்வேலியில் போஸ்டிங் போட்டார்கள். அன்புகாட்டிய உறவினர்களுக்கும் கருணைகாட்டிய இறைவனுக்கும் நன்றி
சொல்லி அங்கு  பயணமானோம். அதன் பின் அங்குள்ள சேவியர் பள்ளியிலும். கல்லூரியிலும் என் படிப்பும் நட்பும் நிறைந்தது.

ஆரம்பத்தில் படிப்பில் முதல்பெஞ்சு மாணவனாக இருந்தேன். நண்பர்களுடன் பேச பழக கடைசிபெஞ்சுக்கு இடம் பெயர்தேன். படிப்பில் நான் ஓஹோ னு சொல்லமுடியாது, சராசரி மாணவன் .

திருநெல்வேலியில்  டோனி என்றொரு ஆத்மார்த்த நண்பன். என்னுள் இருந்த இசையை, நாடக நடிப்பு திறனை என்னைவிட அதிகமாய் அறிந்தவன் அவனே. என்னிடமிருந்து தொலைந்து போயிருந்த கலகலப்பையும் பாட்டுப் பாடித் திரியும் உற்சாகத்தை திருப்பிக் கொணர்ந்தவன்.

திருச்சி கலைக்காவேரியில் இசையைப் பயின்றேன் எங்கு சென்றாலும், என்னசெய்தாலும் அழகாக, திருத்தமாக செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன் ,எல்லோரும் என்னை கவனிக்க வேண்டும் என்று கல்லூரி நாட்களில் நடிப்பு, கவிதை பாட்டு என்று கலந்துகட்டி தூள்கிளப்பினேன். கூச்ச சுபாவம் கொண்ட மாணவனாக ஒதுங்கி இருந்தவனின் இந்த உற்சாகம் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

'ராகம் பசிதாளம் ' என்ற நாடகம் எழுதி நடித்தேன். அதற்குப் பாராட்டும் பரிசும் கிடைத்தது. அதேபோல 'மண்டையிலேதான்டா முடி முளைக்கும் ' என்ற காமெடி டிராமா எழுதி நடித்தேன். இதனால் மாணவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

இன்னொரு தருணத்தில் கல்லூரி அளவில் நடந்த பாட்டுப்போட்டியில் எனக்குத் தான் முதல்பரிசு
கிடைத்தது. 'பிறர் பாடி பிரபலமான சினிமா பாடலைப் பாடாமல் சொந்தமாக டியூன் போட்டு பாடல் எழுதி அதற்கு இசையமைத்துப் பாடிய இவனது முயற்சியும் பயிற்சியும் பாராட்டுக்குரியது என்று, அந்த நிகழ்ச்சியின் நீதிபதிகள் பாராட்டியது என்றும் மறக்க முடியாதது.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் என்ற புத்தகம் படித்தேன். என்னை ரொம்ப பாதித்தது.
யோசிக்கிறதுனு ஓண்ணு வாழ்க்கையில் இருக்கு. எண்ணம் போல் வாழ்க்கை அமையும் என்பதை உணர்த்தியது.

நான் நன்றாகப் படித்து ஏதாவது அரசு வேலைக்கு போக வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. ஆனால் எனக்குள் சினிமா ஆசைவந்து பேயாட்டம் போட்டது. சினிமா என்றால்  சென்னைக்கு அனுப்பமாட்டார் என்பதால், லயோலாவில் படிக்கப் போகிறேன் என்று அம்மாவிடம் பொய்சொல்லியதும் அனுப்பிவைத்தார். லயோலாவில் ஒரு சீட்டும் கொடுத்து அங்கேயே தங்கி கொள்ளவும் சாப்பிடவும் ஒரு ஃபாதர் என் மீது அன்புகாட்டினார். நான் படிக்காமல் தினம் வெளியேறிவிடுவது ஃபாதரின் கவனத்துக்குப் போனது. நான் என் விருப்பத்தைச் சொன்னதும் என் முயற்சிக்குக் குறுக்கே கோடு போடவில்லை .

அப்போதெல்லாம் லயோலாவிலிருந்து கோடம் பாக்கம், வடபழனி, ஏவிஎம் வரை நடந்து வந்து ஒவ்வொரு சினிமா கம்பெனியில் வாய்ப்பு கேட்டு வருவேன். நான் இப்படிப் பசியுடன் 
சென்னை வெயிலில் அலைவது அம்மாவுக்குத்  தெரியாது. அதே போல இரவு தாமதமாக ஹாஸ்டலுக்குத் திரும்புவதால் சிலநேரம் இரவு சாப்பாடு இருக்காது. தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கிவிடுவேன். நான் பட்டினியாகத் தூங்கும் விஷயம் ஃபாதர் காதுக்குப் போனதும் அவன் எப்போது வந்தாலும் கதவு திறந்து விடுங்கள்; சாப்பாடு எடுத்து வைத்துவிடுங்கள் என்று ஒரு தந்தைக்குரிய பாசத்தை என் மேல் காட்டிய அந்த ஃபாதரை என் வாழ்நாளில் மறக்கமுடியாது.

ஒரு நண்பரின் பரிந்துரையுடன் ஒர் இசைக்கூடத்தில் சவுண்ட் என்ஜினியராக வேலையில்
சேர்ந்தேன். அங்கு நிறைய சினிமா டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் வருவார்கள். டியூன்போடுவது, பாட்டு பிறப்பது. தீம்மியூசிக் போடுவது, பின்னணி இசைசேர்ப்பு என்று பணிகள் நடக்கும். அவற்றை கவனமாக பார்த்து, கேட்டு உள்வாங்கிக் கொள்வேன்.  இசை நுணுக்கங்களை அங்கு கற்றுக் கொண்டேன் .

 சவுண்ட் என்ஜினியராக இருந்து, மியூசிக் டைரக்டராக, கேள்வி ஞானம் எனக்குக் கை
கொடுத்தது. அங்கே கற்றவற்றை எனக்குள் சேமித்து வைத்து கொண்டு, அங்கே இங்கே கடன் வாங்கி
சென்னை டிரஸ்ட்புரத்தில் 'ஆடியோஃபைல்ஸ்' என்ற ஒரு ஸ்டுடியோ தொடங்கினேன். சில டியூன் போட்டு அதற்கு நானே வார்த்தைகளைப் போட்டு பாடல்கள் உருவாக்கி பாடி சிடிகள் ரெடிசெய்து அதை எடுத்துக் கொண்டு மியூசிக் டைரக்டர் சான்ஸ் தேடிச்
செல்வேன். அதாவது, இரவில் கம்போசிங் செய்வது, பகலில் வாய்ப்புத் தேடி அலைவது என்று நாட்கள் நகர்ந்தன. சின்னச்சின்ன விளம்பரப் படங் களில் இசை சேர்க்கக் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.  வாய்ப்பு தேடிய காலத்தில், கலைஞர்கள் தனக்கென்று அழகான புனைப் பயர் வைத்துக் கொள்வதுபோல நான் 'அக்னி' என்ற புனைப்பெயர் சூட்டிக் கொண்டேன்.

என் ஆரம்ப காலத்தில் விளம்பரங்களையும் சீரியல்களையும் அக்னி என்ற பெயரிலேயே செய்தேன். அரசு கெசட்டிலே கூட அக்னி என்றே பதிவு செய்திருந்தேன். அதேபெயரில் சினிமா
சான்ஸ் தேடிச்சென்றபோது பலரது கிண்டலுக்கும், கேள்விக்கும் ஆளாக நேர்ந்தது.  சினிமா
சென்டிமென்ட் தெரிந்தது.

அதென்ன அக்னீ..நீயென்ன நெருப்பா? பேரே சரியில்லையே ..! இப்படிபல கேள்விகள் எழுந்தது. ஆன்டனி என்ற சொந்தப் பெயரில் முயற்சிகள் தொடங்கினேன். தொடர் முயற்சியின் பயனாக ஆஸ்கர் ரவிசந்திரன் தயாரிப்பில் சசி இயக்கிய டிஷ்யூம் படம் என்னை திரும்பி பார்க்க வைத்தது. அந்நேரத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரின் சுக்ரன் பட வாய்ப்பும் அமைந்தது. அவர்தான் என் பெயருக்கு முன்னால் விஜய் சேர்த்து, விஜய் என்றால் வெற்றி. இன்று முதல் நீ விஜய் ஆன்டனி என்று வாழ்த்தினார்.

24 படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய ஆளுமையாக வளர்ந்த சூழலில் ஒரு நல்ல கதை கேட்டேன். அதில் நானே நடிக்க விரும்பினேன். நான் நடித்தால் யார் தயாரிக்க முன் வருவார்கள்? கடன்வாங்கி சொந்தத் தயாரிப்பில் ஈடுபட்டேன்.  இதோ எட்டுப் படங்களில் நடித்துவிட்டேன். தற்போது தமிழரசன், கொலைகாரன், காக்கி இப்படி ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் .

இசையமைப்பில் எனது குரு,ரோல் மாடல் என்று யாருமில்லை. எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஒவ்வொரு இசையாளுமைகளிடமும் கற்றுக்கொள்ள ஏதேனும் ஒரு அம்சம் இருக்கும்.

நான் இசையமைப்பாளன் ஆனதன் பயனாக 43 புதுப்பாடகர்களை அறிமுகம் செய்தேன். அதில் சந்தோஷ் ஹரிஹரன், ஆதி, மார்க், தீபக், இலங்கை கவிஞர் அஸ்மின், ஏழெட்டு இயக்குநர்கள், புதுமுக  நடிகைகள் பத்துப்பேர் என்று, என் அறிமுகங்களின் பட்டியல் உண்டு .

நான் சின்னவயதிலிருந்தே கடுமையாகப் போராடித்தான் இந்த உயரத்தை அடைந்தேன். ரிஸ்க் என்பது என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டது. இதுதான் என் வாழ்க்கை என்று வரையறை எதுவும்  வைத்துக் கொள்ளவில்லை. வருவது வரட்டும் என்று வாழ்ந்து பார்க்கத்
துணிந்தவன். எத்தனையோ சிரமங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் தொடர்ந்தபோதும்,  ஏதோ ஒரு சக்தி என்னைப் பாதுகாத்து, சரியான பாதையில் கைபிடித்துச் செல்வதாக உணர்ந்தேன். அது அன்னையின் ஆசியாகவும் இருக்கலாம், விடா முயற்சிக்கான ஊக்கமாகவும் இருக்கலாம்.

வெற்றிமகுடம் சூட நான் போராடிக்  கொண்டிருந்த காலகட்டத்தில், பாலை நிலத்தில் ஒரு நீரூற்றுபோல என் வாழ்வில் வசந்தமாய் வந்தார், ஃபாத்திமாஹனி. என் இசையைப் பாராட்ட வந்த அவரை, அன்றுதான் முதல் முறை பார்த்தேன். பார்த்ததும் இனம்புரியாத ஒரு ஈர்ப்பு!'தேவன் எனக்காகப் படைத்த தேவதை இவள்தான்!' என மனம் சொன்னது. நீண்டநாள் பழகிய நண்பர்கள்போல் பேசினோம். என் இசையை,மெட்டுகளை, பின்னணி இசையை மனம் திறந்து பாராட்டினார்.

சந்தித்த மறுநாளே நான் அவரிடம்
சொன்னது, 'உங்கள் வீட்டில் உங்களுக்கு வரன் பார்ப்பார்கள் அல்லவா ? அப்படி வந்த வரன்களில் என்னுடைய பெயரையும்  சேர்த்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்!'என்றுதான். நான் என்ன சொல்கிறேன் என்பதை அவர் புரிந்துகொண்டார். இரு வீட்டார் சம்மத்துடன், எங்கள் காதல் திருமணமாக மலர்ந்தது. நான் இசை, நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்த, அவர் குடும்பத்தையும் தயாரிப்பு நிர்வாகத்தையும் பார்த்துக் கொள்கிறார்,

உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு அழகாக உடை அணியக்கூடத் தெரியாது. என் உடையில், நடையில், பேச்சில், ரசனையில் மாற்றம் ஏற்படுத்தியவர், என் காதல் மனைவிதான். சுருக்கமாகச் சொன்னால், என் முதுகெலும்பே அவர்தான்.

நான் ஒரு நடிகனாக கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த போது, ஒரு செய்தி ஊடகம் கமல் சாரிடம் என்னை வாழ்த்தி நாலு வார்த்தை கேட்டபோது அவர்  என் நடிப்பை முன்மொழிந்து இப்படிச் சொன்னார்:

''தமிழின் முதல் நாவல், 'பிரதாப முதலியார் சரித்திரம்' 1879-ல், எழுதி வெளியிட்டார், வேதநாயகம்பிள்ளை. இவர் (1848 ல்)
திருச்சிராப்பள்ளி நீதிமன்ற ஆவணக் காப்பாளராகவும், 1850ல் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தவர். 1857ல் தமிழகத்தின் முதல் இந்திய நீதிபதியாக வெள்ளைக்காரன் ஆட்சியிலேயே பெரிய பெரிய பொறுப்புகளை வகித்தவர். அந்தப் பெரிய மனிதரின் பேரன், விஜய் ஆன்டனி!''

இப்போது என் பயமெல்லாம், தாத்தாவின் பேரை காப்பாற்றவேண்டும் என்பதுதான்!'' சொல்லி முடித்தார் விஜய் ஆன்டனி!

மே, 2019.