படம் உதவி : ஞானம்
திரை நேர்காணல்

அந்தப் பொன்னான சில மணி நேரங்கள்!

Staff Writer

1989. தராசு ஷ்யாம் நடத்திய திரைச்சுவை வார இதழில் சுயாதீன நிருபராக சேர்ந்த நேரம். எனது அபிமான இயக்குநர் மகேந்திரனை பார்க்க வேண்டுமென தீராத தாகம். பேட்டிக்காக சந்தித்தபோது, "சார் உதிரிப்பூக்கள் படத்துல புது வேட்டி,
சட்டை அணிந்த சுந்தர் கேரக்டர் வீட்டிலிருந்து வெளியே வரும்போது, ட்ராக்டர் மண் சாலையை கடக்க தூசு பறக்கும். அழுக்காகிவிடுமோ என சுந்தர் பதறி வீட்டுக்குள் ஓடி ஒளிகிறார். மீண்டும் வெளியே வரும்போது கார் வரும். மீண்டும் ஓடி ஒளிவார். இப்படியொரு காட்சி தி. ஜானகிராமனின் மோகமுள் நாவலிலும் வருகிறதே! '' என்றேன்.  பதறுகிறார்!

"கரெக்ட் கரெக்ட். படம் ரிலீஸாகி பல நாட்கள் கழிச்சுத்தான் எனக்கே தோணுச்சு... இது தி. ஜானகிராமன் சீனாச்சேனு! அந்த நாவல் காட்சி மனதில் பதிந்ததால் யோசிக்கும்போது, திரும்ப எனக்கு தோன்றியிருக்கிறது,'' என்று வெகுளியாகச் சிரிக்கிறார்.

முதிர்ந்த அந்த முகத்தில், சிரிப்பில் தெரிந்த குழந்தைத்தனம் உண்மை என்று சாட்சி சொன்னது.

பேச்சுவாக்கில் மகேந்திரன் அவர் அப்பாவைப் பற்றி சொன்ன விஷயம் மறக்க முடியாதது. ஒருநாள் இரவு. மகேந்திரனை கூப்பிடுகிறார். படிக்கட்டுகளின் இருபுறமும் இருக்கும் பூந்தொட்டிகளை எடுத்து ஓரமாக வைப்பா. வரவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும் என்கிறார்.  இப்ப எதுக்குப்பா வேண்டாத வேலை. காலையில் பார்க்கலாம் என்கிறார், மகேந்திரன். இல்லப்பா எடுத்து வை, சொல்றேன்.

சோபாக்களை நகர்த்தி வைத்து, நாற்காலிகளை வாசலில் போடச் சொல்கிறார். மகேந்திரனும் செய்கிறார், ஏன் என்று கேட்காமல். விடிந்தது. அப்பா இரவில் சொன்னது அவரது இறுதிப் பயணத்திற்கான முன்னேற்பாடு என புரிந்தது. இறப்பு அவருக்கு எப்படி தெரிந்தது?

 நல்ல படங்கள் கொடுத்ததால் சினிமா மகேந்திரனைப் புறக்கணித்து, ஊர் பஞ்சாயத்து, சாசனம் என ஒப்புக்கு எப்போதாவது தானே வாய்ப்புக் கொடுத்தது!

மே, 2019.