”பீரீயட் ஃபிலிம் என்றால் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்; ‘தங்கலான்‘ அப்படி இல்லை. உண்மையும் புனைவும் கலந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுப் படம். அதை திரையில் பார்க்கும் போது உணர்வீர்கள்! ஒளிப்பதிவுக்காக இந்தப் படம் தனித்துப் பேசப்படும்,” என படம் குறித்த அப்டேட்டுடன் பேசத் தொடங்கினார் தங்கலான் படத்தின் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார். இப்படி படம் குறித்த நிறைய தகவல்கள் அவரிடம் இருக்க, அவரின் வாழ்க்கைப் பயணம் பற்றிக் கேட்டோம்.
‘கிராமம் அல்லாத நகரமும் அல்லாத நடுத்தர ஊர் சந்தனால்புரம். அது ஒரு கிறிஸ்துவ கிராமம். கும்பகோணத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் இருக்கலாம். அங்குள்ள பெரும்பாலான விவசாயிகள், புதுக்கோட்டை அருகிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள்,' நச்சென்று தனது கிராமத்தின் சுருக்கமான வரலாற்றை கூறியவர், பேச்சைத் தொடர்ந்தார்.
‘கும்பகோணத்தில் உள்ள நகர உயர்நிலைப் பள்ளியில் தான் மொத்தப் பள்ளிப் படிப்பும். ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ‘சேது' படத்தின் படப்பிடிப்பை நேரில் பார்த்தேன். ஒரே பிரமிப்பாக இருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் பாதிரியார் ஆகலாம் என்று நினைத்தேன். வீட்டில் தடை போட்டு விட்டார்கள். அண்ணன் கவின் கலைக் கல்லூரியில் படித்தவர் என்பதால், என்னை விஷுவல் கம்யூனிகேஷன் அல்லது ஃபைன் ஆர்ட்ஸ் (Fine arts) படிக்கச் சொன்னார். வரைவது நமக்கு ஒவ்வாமை என்பதால், தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்தேன்.
கல்லூரி சேரும் போதே, புகைப்படம் எடுப்பது குறித்து அண்ணன் சொல்லிக் கொடுத்தான். பெண்டக்ஸ் கே1000 (Pentax K1000) என்ற ஃபிலிம் கேமராவில் தான் முதன் முதலாகப் புகைப்படம் எடுத்தேன். அது எங்க ஊர்க்குளம். இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, வீட்டில் டிஜிட்டல் கேமரா ஒன்று வாங்கிக் கொடுத்தார்கள். எங்கள் வகுப்பில் நிறைய புகைப்படங்கள் எடுத்த ஒரே மாணவன் நான் தான். இறுதி ஆண்டில், விகடனில் மாணவ புகைப்படக் கலைஞராகச் சேர்ந்தேன். நான் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவன் என்பதால், பசுமை விகடனுக்கும் சக்தி விகடனுக்கும் நிறையப் புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்தேன். ஒரு முறை, பெண்கள் கையில் பணம் வைத்திருப்பது போன்று புகைப்படம் ஒன்று கேட்டிருந்தார்கள். மகளிர் குழு படம் கேட்கிறார்கள் என்று நினைத்து, ஒரு படத்தை எடுத்து அனுப்பினேன். ஆனால், அந்தப் படத்தை சீட்டு கம்பெனி தொடர்பான ஒரு கட்டுரைக்குப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த புகைப்படத்திலிருந்த ஒரு குடும்பத்தினர், என் மீதும் விகடன் மீதும் புகார் அளித்தார்கள். பிறகு அந்த வழக்கை அப்படியே விட்டுவிட்டார்கள். இதனால், இதழியல் சமாசாரங்களில் நம்பிக்கை போய்விட்டது.
கல்லூரி படிக்கும் போதே சினிமாவுக்கு போக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதை அண்ணனிடம் சொன்னேன். அவருடைய வகுப்பு நண்பர் தான் ஒளிப்பதிவாளர் முரளி. அவரை சிறுவயதிலிருந்தே தெரியும். எனக்கு புகைப்பட கலை மீது ஆர்வம் இருந்ததால், என்னை ஒளிப்பதிவாளராகச் சொன்னார். அப்போது அவர் புனே திரைப்படக் கல்லூரியில் மாணவர். ‘நான் படித்து முடித்ததும் உனக்கு உதவி செய்கிறேன்' என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் நான் சினிமாவிற்குள் வருவதற்கு அடித்தளமிட்டன. அவர் படித்து முடித்ததும் ‘அண்டால ராக்சஷி‘ (Andala Rakshasi) என்ற தெலுங்குப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார். அந்தப் படத்தில் வேலை பார்க்க என்னையும் அழைத்தார். படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றேன். முரளி அண்ணனிடம் சேர்ந்த முதல் உதவி ஒளிப்பதிவாளர் நான்தான். ஹைதராபாத்திலிருந்த போதே, சத்யஜித் ரே இன்ஸ்டிட்யூட்டில் ஒளிப்பதிவு குறித்து படிப்பதற்கு விண்ணப்பித்தேன். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியும்போதே அங்கு சீட் கிடைத்துவிட்டது.
அந்த இன்ஸ்டிட்யூட்டுக்கு இந்தியாவின் பலதரப்பட்ட பகுதியிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நிறுவனம் என்னை முழுமையாக மாற்றியது என்பேன். நான்கு வருடம் வங்கத்திலிருந்தாலும், முரளி அண்ணனுடன் தொடர்பில் தான் இருந்தேன். நிறைய விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். அவர் ஒளிப்பதிவாளராக வேலைப் பார்த்த ‘மெட்ராஸ்' படத்தில் நானும் வேலை பார்த்தேன். ஆனால், முழுப் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த சமயத்திலேயே உதவி ஒளிப்பதிவாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தார்கள்.
மெட்ராஸ் படத்திற்கு பிறகு கபாலி படத்தில் பணியாற்றினேன். சென்னையில் ஒருநாள் படப்பிடிப்பு. அதற்காக நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். திடீரென பக்கத்தில் வந்த ரஜினி சார் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்' என்றார். அன்று என்னுடைய பிறந்தநாள். இதை யாரோ அவருக்கு சொல்லியிருப்பார்கள் போல. இப்படி நிறைய ஷாக் கொடுப்பார் ரஜினி சார்,' என்றவர், ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
‘நான் முதல் முறையாக தனியாக ஒளிப்பதிவாளராக வேலை பார்த்த படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு.' இப்படம் வெளிவந்ததும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஒவ்வொரு தியேட்டராக சென்று படம் பார்த்தேன். படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததை உணர முடிந்தது. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என அதுவொரு நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், அப்படி எதுவும் அமையவில்லை. ஒரு சில புது இயக்குநர்களின் படங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.
இதற்கிடையே கொரோனா வந்துவிட்டது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, ‘சார்பட்டா பரம்பரை‘ படத்தின் இரண்டாம் கட்டப் பிடிப்பு தொடங்கியது. அதில் கேமரா ஆபரேட்டராக பணியாற்ற முரளி அண்ணன் அழைத்தார். அந்தப் படத்தில் பணியாற்றும் போதுதான், ‘நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இ.உ.க. குண்டு படத்தில் வேலைப் பார்த்ததற்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் வேலை பார்த்ததற்கும் நிறையவே வேறுபாடு உண்டு. அதியன் சுதந்திரமாக விட்டு விடுவார். ரஞ்சித் அண்ணன் அப்படி இல்லை. ‘இந்தக் காட்சி இப்படித்தான் எடுக்க வேண்டும்‘என்பார். அவருக்கு என்ன வேண்டுமோ, அதைதான் கொடுக்க வேண்டும். அதற்காக என்னுடைய வேலை பார்க்கும் முறையையே மாற்றிக் கொண்டேன்.
நட்சத்திரம் நகர்கிறது பெரும்பாலும் ஒரே இடத்தில் நடக்கக் கூடிய கதை என்பதால், ஒரே இடத்தை வெவ்வேறு விதமாகக் காட்சிப் படுத்த வேண்டும். இது ரொம்ப சவாலாக இருந்தது.
இப்படம் வெளியானதும் பலரும் வாழ்த்தினார்கள். ‘நட்சத்திரம் நகர்கிறது' படப்பிடிப்பின் போதே அதியனும் படம் ஒன்று தொடங்குவதாக இருந்தார். அதில் பணியாற்றவும் அழைத்தார். ரஞ்சித் அண்ணாவும் அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ஒரே குழப்பம், எங்கு பணியாற்றலாம் என்று. இதற்கிடையே ரஞ்சித் அண்ணாவும் அதியனும் பேசிக் கொண்டார்கள். தொடர்ந்து நான் ரஞ்சித் அண்ணா படத்திற்குள் வந்தேன். அந்தப் படம் தான் தங்கலான்,' என்றவரிடம் தங்கலான் குறித்து மேலதிக தகவல்கள் சொல்லுங்கள் என்றோம்.
‘தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட எண்பது சதவீதம் முடிந்துவிட்டது. இதுவரை நூற்று பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் இருபது நாட்கள் படப்பிடிப்பு இருக்கும். அது மே மாதம் நடக்க உள்ளது. கோலார் தங்கவயலில் தான் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னையில் கொஞ்சம் செட் போட்டு எடுத்துள்ளோம். மதுரை, ஒகேனக்கல் போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
‘காலா‘ படத்திற்கு தாராவி செட் போட்டு எடுப்பதற்கு எவ்வளவு கடுமையான உழைப்புத் தேவைப்பட்டதோ, அதை விஞ்சும் அளவுக்கு தங்கலான் உள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு வலுவானதாக இருக்கும். நடிப்பும் வசனமும் தனித்துப் பேசப்படும்.
சில தினங்களுக்கு முன்பு, விக்ரம் பிறந்தநாளுக்கு வெளியிட்ட வீடியோவைப் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியிலும் கேமரா ஒரு கதாபாத்திரமாக இருக்கும். கேமராவை எங்கு வைத்து எடுத்தார்கள் என்று கணிக்க முடியாது. நிறைய சிங்கிள் டேக் காட்சிகள் இருக்கும். சில காட்சிகள் எடுப்பதற்கு கேமராவை தூக்கிக் கொண்டு பத்து பதினைந்து கிலோ மீட்டர் நடந்தே சென்றிருக்கிறோம்.
படத்தில் ஒரு காட்சி எடுக்கத்தான் கொஞ்சம் சிரமப்பட்டோம். ரத்தம் கலந்திருக்கும் தண்ணீரில் குதிரை வேகமாக ஓடுவது தான் காட்சி. அதை எடுக்கும் போது, தண்ணீரில் கலந்திருக்கும் ரத்தம் தெரியவேண்டும், குதிரை வேகமாக ஓடவேண்டும், குதிரை மேல் இருப்பவர் விழாமல் இருக்க வேண்டும். இதில் ஒன்று தவறினாலும். மீண்டும் அந்தக் காட்சியை எடுக்க வேண்டும். இப்படி படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அதிக கவனத்தோடும் நுட்பத்தோடும் எடுத்துள்ளோம். அதற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒளிப்பதிவின் அழகியலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்,' என்றார்.
மே, 2023