சித்தி இத்னானி 
திரை நேர்காணல்

மல்லிப்பூ பேசுதே!

கணேஷ்

வெயிட் பண்ணுங்க. ஜஸ்ட் இன்னும் த்ரீ மந்த்ஸ்திலே தமிழ்ல சூப்பரா போல் றேண்ணா' இந்தியும் இங்கிலீஸும் கலந்து தமிழைப் பொளந்து கட்டுகிறார் மராட்டியை தாய்மொழியாகக் கொண்ட சித்தி இத்னானி.

கவுதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழில் நுழைந்து, அடுத்து, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சசியின் ‘நூறு கோடி வானவில்' , முத்தையா இயக்கத்தில் ஆர்யாவுடன் ‘காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' வரை வந்து சேர்ந்திருக்கிற சித்தி இத்னானி தமிழ், தெலுங்கில் இப்போது மோஸ்ட் வாண்டட் ஹீரோயின்.

‘அந்திமழை' பேட்டிக்காக நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவரை சந்தித்தபோது, ‘தமிழ் பேசுவீங்களா? என்று ஆரம்பித்தபாது கிடைத்த பதில்தான் முதல் வரி. இன்னொரு மூன்று மாதங்களுக்கு தமிழ் பொழைச்சுப் போகட்டும் என்ற நல்லெண்ணத்தில் பேட்டியை ஆங்கிலத்தில் தொடர்ந்தோம்.

“மும்பையில பிறந்து வளர்ந்த அக்மார்க் மராதி பொண்ணு நான். அம்மா ஃபல்குனி தேவி ஒரு நடிகை. அப்பா அசோக் இத்னானி ஒரு வாய்ஸ் மாடுலேஷன் ஆர்டிஸ்ட். ஆக்சுவலா நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். என் தாய்மொழியான மராத்தியில நிறைய நாடகங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். மாடலிங்கும் ஒரு முக்கிய ஹாபியா இருந்தது. அதை ஒட்டி 2017 ல ‘கிராண்ட் ஹாலி'ங்கிற குஜராத்தி படத்துல முதல் வாய்ப்பு கிடைச்சது. அதைப் பார்த்து ‘ஜம்பா லகிடி பம்பா'ன்னு ஒரு தெலுங்குப் படம் கிடைச்சது. செம ஜாலியான காமெடிப் படம்.

அந்தப் படத்தைப் பாத்துட்டுதான் கவுதம் மேனன் தன்னோட ‘வெந்து தணிந்தது காடு' படத்துக்கு என்னை செல்க்ட் பண்ணினார். முதல் தமிழ்ப் படமே எனக்கு கவுதம், சிம்பு காம்பினேஷன்ல ஒரு பெரிய கூட்டணியில் அமைஞ்சது. படம் சம்பந்தமா முதமுதல்ல கவுதம் மேனன் சார் பேசினப்போ அது கனவு மாதிரி இருந்தது. ஒரு தியேட்டர் ஆர்டிஸ்டா எனக்கு நல்ல நடிப்பு அனுபவம் இருந்ததுன்னாலும் அவர் படத்துல கத்துக்கிட்டது ஏராளம். நாம என்ன பண்ணனும்னு அவ்வளவு பிரமாதமா சொல்லிக் கொடுப்பார்.

அதே சந்தர்ப்பத்துலயே சசி சாரோட ‘நூறு கோடி வானவில்' புராஜக்டும் வந்தது. ‘வெ.த.காடு' கமிட் பண்றதுக்கு முந்தியே கவுதம் சாரோட எல்லா படங்களையும் பெரும்பாலும் பார்த்திருந்தேன். ஆனா சசி சார் படம் எதுவும் பார்த்ததில்லை. அவரை மீட் பண்றதுக்கு முன்னாடி அவசர அவசரமா அவரோட படங்களைப் பாத்துட்டுதான் மீட் பண்ணேன். சினிமாவுல இவ்வளவு சாதுவால்லாம் ஒருத்தர் இருக்க முடியுமான்னு பிரமிக்க வைச்சவர் சசி சார்.

அடுத்த வாரம் முத்தையா சார் இயக்கத்துல ஆர்யா கூட நடிச்சிருக்க ‘காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' ரிலீஸாகப் போகுது. கடந்த ஒரு வாரமா அந்தப் பட புரமோஷனுக்காக சென்னையிலதான் டேரா போட்டிருக்கேன்.

கவுதம், சசி சாருக்கு அப்படியே தலைகீழ் காண்ட்ராஸ்ட் முத்தையா சார். ரொம்ப துடிப்பான ஆள். அவர் டயலாக் பேசுற வேகத்தைப் பார்த்து ஷூட்டிங் ஸ்பாட்ல மிரண்டுபோய் நிப்பேன். ஒரு கிராமத்து மனுஷனா ஆர்யாவும் மிரட்டியிருக்கார்.

இதெல்லாம் மீறி இந்தப் படம் எனக்கு ஒரு பெரிய எக்ஸைட்மெண்ட். ஹீரோயினுக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கிற படங்கிறதுனால மட்டும் இல்லை. முதல் முறையா ஒரு கிராமத்துப் பொண்ணா பாவாடை, தாவணி கட்டிக்கிட்டு, தலையில மல்லீப்பூ வச்சி நடிச்சிருக்கேன். அந்த கெட் அப்ல, என்னை நானே லவ் பண்ற அளவுக்கு நான் அவ்ளோ அழகா இருந்தேன்.

இந்தப்பட ரிலீஸுக்கு அப்புறம் தமிழ்ல நிச்சயமா ஒரு பெரிய ரவுண்டு வருவேன்னு ஸ்ட்ராங்கான நம்பிக்கை இருக்கு,' என்கிற சித்தி இத்னானி நடுவில் வெளிவந்த ‘த கேரளா ஸ்டோரி' படம் குறித்து கேட்டதும் கனத்த மவுனம் காக்கிறார்.

‘அது முதல்ல ஒரு இந்திப்பட வாய்ப்பாகத்தான் என்னைத் தேடி வந்தது. அப்ப அந்தக் கதையை ஒரு அரசியல் புரிதலோட எனக்கு அணுகத்தெரியல.படம் ரிலீஸான பிறகுதான் நிறைய ஃப்ரெண்ட்ஸ் இந்தப் படத்துல நீ நடிச்சிருக்கணுமான்னு கேட்டாங்க. அந்தக் கதையும் இவ்வளவு விவாதங்களைக் கிளப்பும் அது அத்தனை நெகடிவ்வா மாறும்னு கூட எனக்கு அப்ப சுத்தமா தெரியலை. படங்களை செலக்ட் பண்றதுல எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும்னு கத்துக்கிட்டேன்,' என்று டல் மூடுக்குத் திரும்பியவரிடம் பேச்சை மாற்றுவதற்காக திருமணம் குறித்துக் கேட்டதும் ‘ஏண்ணா நான் சிரிச்சபடி சந்தோஷமா இருக்கிறது ஒனக்குப் புடிக்கலியா?' மல்லீப்பு சிரிப்பு சிரிக்கிறார்.