இயக்குநர் ராம்குமார் 
திரை நேர்காணல்

17 கதாநாயகர்கள் நடிக்க மறுத்த படம்!

இரா. கௌதமன்

விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும் படமாக ராட்சசன் அமைந்த சந்தோஷத்திலிருக்கும் இயக்குநர் ராம்குமாரை சாலிகிராமத்தில் அந்திமழைக்காக சந்தித்தோம்.

‘‘எல்லோரும் முதல் பட வாய்ப்புக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க. ஆனா, முண்டாசுப்பட்டி குறும்படத்த முழு நீள சினிமாவ நான் எடுக்க நினைச்சப்ப உடனடியா வாய்ப்பு கிடைச்சு படம் பண்ணிட்டேன். வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயரையும் எடுத்துட்டேன். ஆனா, இரண்டாவது படத்துக்கு எல்லாத்தையும் சேர்த்து வச்ச மாதிரி எல்லா கஷ்டத்தையும் பட்டுட்டேன். ஏராளமான தயாரிப்பாளர்கள் ராட்சசன் கதையை நிராகரிச்சுட்டாங்க. 17 கதாநாயகர்கள் நடிக்க மறுத்த படம் இது''என்று சொல்லும் ராம்குமாரின் சினிமா பயணம் திருப்பூரிலிருந்து தொடங்கியிருக்கிறது.

‘‘சின்ன வயதிலிருந்தே படம் வரைவதில் ஆர்வம் அதிகம். அதுவும் பெரிய பங்களா முன்னாடி புல்வெளி அதுல நாலு சேர் என்று சினிமாத்தனமான படங்கள். எட்டாம் வகுப்பில் தான் நான் வரைந்த ஓவியத்திற்கு முதன் முதலாக முதல் பரிசு வாங்கினேன். இதனுடன் கட்டுரைப்போட்டி, கவிதை என்று கலை தொடர்பான எல்லா விஷயத்திலும் ஆர்வமாக இருந்தேன். அன்று பரிசாக கிடைத்த பாரதியார் கவிதைகள் படித்து அவருடைய ரசிகனாகவே மாறிவிட்டேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது கவிஞராகவோ அல்லது

சினிமா பாடலாசிரியராகவோ ஆகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பிறகு கொஞ்ச காலத்தில்

சினிமாவில் அதைத் தாண்டிய பெரிய இடம் இருக்கிறது என்பதை உணர்ந்து இயக்குநராக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். சினிமா பற்றிய கனவு உள்ளுக்குள் அணைந்து விடாமல் இருந்து கொண்டே இருந்தது. பிளஸ் டூ முடித்தவுடன் திரைப்படக்கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். கிடைக்கவில்லை. அடுத்த முயற்சியாக ஓவியக் கல்லூரிக்கு முயற்சித்தேன். அதுவும் கிடைக்கவில்லை. எதுவும் நடக்க மாட்டேங்குதேன்னு சின்ன கவலை வந்தது.

பத்திரிகைகளுக்கு கார்ட்டூன் வரைவோம், அதன் மூலம் சினிமாவிற்குப் போகலாம்னு முயற்சி செய்தேன். ஓவியத்திலிருந்து கார்ட்டூனுக்கு இரண்டு வருடங்கள் பயிற்சி செய்து என்னை தயார்படுத்திக் கொண்டேன். 2003 இல் கார்டூனிஸ்ட் மதன் அவர்களிடம் சென்று என்னுடைய படைப்புகளை காண்பித்தேன். அவருக்கு என்னுடைய கார்ட்டூன்கள் பிடித்திருந்தன. சினிமா தான் என்னுடைய விருப்பம் என்று சொன்னேன். இங்கு நிறைய சினிமா இயக்குநர்கள் இருக்கிறார்கள். கார்ட்டூனிஸ்டுகள் குறைவு.

நீங்கள் கார்ட்டூனிஸ்ட்டாகிவிடுங்கள் என்று மதன்

சொன்னார். ஆனால் என்னுடைய சினிமா கனவை விட்டு விட மனம் ஒப்பவில்லை. மதன் ஆனந்தவிகடனுக்கு என்னை அனுப்பி வைத்தார். தொடர்ந்து கார்ட்டூன் வரையுங்கள், அதனுடன் குறும்படம் எடுங்கள் என்றார். குறும்படங்களை பற்றிய அறிமுகமே அப்போதுதான் எனக்கு கிடைத்தது. 2004 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி என்னுடைய அரசியல் கார்ட்டூன்கள் விகடனில் வரத்தொடங்கின. தினமலர் பத்திரிகையில் என்னுடைய பேட்டியும் கார்ட்டூன்களும் அப்போது வந்தது. வீட்டில் முதன் முதலாக கலைத் துறையில் என்னால் எதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை முளைத்தது.

குறும்படம் எடுப்பதற்கான முயற்சியில் இறங்கினேன். கற்றுக் கொள்ளும் முயற்சியாக சில குறும்படங்களை எடுத்தேன். நிறைய

சினிமா பார்ப்பதும் தமிழ் இலக்கிய வாசிப்பும் அப்போதுதான் தொடங்கியது. சிம்புதேவனின் இருபத்து மூன்றாம் புலிகேசி அப்போது வெளியாகியிருந்தது. அவரிடம் உதவி இயக்கு நராக சேர வாய்ப்பு கேட்டேன். நான் வாய்ப்பு கேட்டபோது விகடனில் என்னுடைய கார்ட்டூன் வந்திருந்ததால் அவர் சந்திக்க வாய்ப்பு கொடுத்தார். அடுத்த படத்தில் உதவி இயக்குநராக என்னை தேர்வும் செய்துவிட்டார். ஆனால் அவர் படம் தொடங்கியபோது என்னுடைய குடும்ப சூழல் காரணமாக நான் வரமுடியாமல் போனது. சிம்புதேவனுக்கு என்மீது கோபம்.

திரும்பவும் குறும்படங்களை எடுப்பது என்று வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தபோது கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநருக்கு முயற்சி செய்தேன். அந்த நிகழ்ச்சியில் கடைசியாக உள் நுழைந்தவர்கள் நானும், எங்கள் ஊர்க்காரார் இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமாரும். ஆனால் நாங்கள் இருவரும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றோம். அப்போது இயக்கியதுதான் முண்டாசுப்பட்டி குறும்படம்.

அந்த சமயத்தில் பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் வந்தது. குறும்படத்தை அழகாக திரைப்படமாக்கியிருந்தார்கள். முண்டாசுப்பட்டி குறும்படத்தை திரைப்படமாக ஆக்கினால் என்ன என்ற கேள்வி வந்தது. உடனடியாக முழு ஸ்கிரிப்டையும் ரவிக்குமார் மற்றும் மரகத நாணயம் இயக்குநர் சரவணன் உடன் இணைந்து உருவாக்கினேன். மூவருமே திருப்பூர்காரர்கள். 15 ஆண்டுகால பழக்கம். நான்கு தயாரிப்பாளர்களை சந்தித்தேன். நால்வருமே படம் செய்யலாம் என்றுதான் சொன்னார்கள். சி.வி.குமார் தயாரிப்பில் முண்டாசுப்பட்டி வெளியாகி வெற்றிபெற்றது. முண்டாசுப்பட்டி இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று தயாரிப்பாளர் சொன்னார். எனக்கு விருப்பமில்லை. வேறு ஜானரில் அடுத்த படம் இருக்க வேண்டுமென்று விரும்பினேன்.

ரஷ்யாவில் சிகாடியோ என்ற சைக்கோவைப் பற்றிய கட்டுரை ஒன்றை படித்தேன். படிக்கப்படிக்க மனதை பாதிக்கக்கூடிய நிறைய விஷயங்களும் சில சுவாரஸ்யமான விஷயங்களும் இருந்தது. அவர் ஓர் ஆசிரியர். ராட்சசன் படத்தின் தொடக்கப்புள்ளி இதுதான். இதை அடிப்படையாக வைத்து ஏழெட்டு மாதங்கள் படித்து, விவாதித்து ராட்சசன் கதையை உருவாக்கினேன். முழு ஸ்கிரிப்டையும் முடித்துவிட்டு தயாரிப்பாளர்களை சந்திக்க ஆரம்பிக்கும்போது தான் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முண்டாசுப்பட்டி இயக்குநரிடமிருந்து சைக்கோ சஸ்பென்ஸ் திரில்லர் கதையை யாரும் எதிர்பார்க்கவில்லை. நகைச்சுவைக் கதையை எதிர்பார்த்துக் கதை கேட்ட அத்தனை பேரும் இந்தக் கதையை நிராகரித்தார்கள். அவர்கள் மீது எனக்கிருக்கும் வருத்தமெல்லாம் இந்த படத்திலுள்ள கமர்சியல் விஷயத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதே. குறைந்தபட்சம் பத்து இடத்திலாவது பார்வையாளர்கள் கைதட்டி

ரசிக்கும் அம்சம் இருந்தது. ஆனால் இவ்வளவு

சீரியசான படம் வெற்றிபெறுமா என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. முண்டாசுப்பட்டி வெளியான சமயத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இது மாதிரி காமெடி படத்தில் வேலை செய்ய விருப்பமாக இருக்கிறது. அடுத்த படம் இயக்கும்போது சொல்லுங்கள் என்றிருந்தார். ராட்சசன் கதையை முடித்து அவரிடம் கொடுத்தேன். இரண்டே மணி நேரத்தில் திரும்ப அழைத்து பாராட்டியவர், படத்திற்கு சிறப்பான இசையை கொடுத்தார்..'' என்று மகிழ்ச்சியாகப்

பேசிக் கொண்டே போகிறார் ராம்குமார். பின்னே இருக்காதா? அடுத்த படம் நடிகர் தனுஷை வைத்து என்று முடிவாகி இருக்கிறதே... வாழ்த்துகள் ராம்குமார்!

நவம்பர், 2018.