இயக்குநர் மோகன் ஜி 
சினிமா

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து: இயக்குநர் மோகன் ஜி அதிரடி கைது!

Staff Writer

பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மத்திரை கலப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த விவகாரத்தில் இயக்குநர் மோகன் ஜி இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் என்பதைதாண்டி பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“சினிமா இயக்குநர் நண்பர் திரௌபதி மோகன் ஜி அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மத்திரை கலப்பதாக சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு இயக்குநர் மோகன் ஜி பேட்டியளித்து இருந்தார். அதன் அடிப்படையிலேயே அவர் இன்று காலை 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram