இயக்குநர் மணிவண்ணன் ஓவியம் : ஜீவா
சினிமா செய்திகள்

கோபுரங்கள் சாய்வதில்லை!

ப.திருமாவேலன்

இராமச்சந்திரன் டீ கடையில் நானும் புகைப்படக் கலைஞர் இராஜசேகரும் நின்று கொண்டிருந்தபோது, திடீரென ஓடி வந்தார் திருவாரூர் குணா. போனைக் கையில் கொடுத்தார்.

அவர் இப்படிக் கொடுக்கிறார் என்றால் யாராவது சினிமா பிரபலமாகத்தான் இருக்கும். 'யாருங்க?' என்றேன். 'மணிவண்ணன் சார்' என்றார். 'என்னோட பழைய முதலாளியா?' என்றபடி வாங்கினேன். 'என்ன சார் மறந்துட்டீங்க?' என்றார். 'எப்படி
சார் மறக்க முடியும்?' என்றேன். 'படிக்கிறேன்
சார், விகடன்ல நீங்க எழுதுறது, பழையகாலம் ஞாபகம் வந்தது, அதுனால தான் குணாகிட்ட கேட்டேன்' என்றார். 'புதிதாக எதுவும் எழுதுவது இல்லை, பழைய காலத்தை எழுதினாலே போதும், அது புதுசு தானே' என்றேன். 'உண்மைதான்' என்றார். நான் வழக்கமாக ஒன்றைச் சொல்வேன். அதையே அன்றும் சொன்னேன். 'நான் எதுவும் புதிதாக எழுதி விடவில்லை. என்னைப் போல் ஒத்த சிந்தனையுள்ளவர் கருத்தை தொகுத்தே எழுதுகிறேன்,' என்றேன்.

ரஜினீஷ் சொல்வார்: 'நான் ஒன்றைச் சொல்லும் போது அதை வரவேற்று நீங்கள் கைதட்டுகிறீர்கள் என்றால், நான் புதிதாகச் சொல்கிறேன் என்று அர்த்தம் அல்ல, உங்களுக்குத் தெரிந்ததையே நானும் சொல்கிறேன் என்று அர்த்தம்,' என்பார். இந்தப் பொருளில் தான் அன்றைக்கும் மணிவண்ணன் சாரிடம் சொன்னேன். அநேகமாக 2010 - 11 காலக்கட்டமாக இருக்கும் இது. ( இதில் ஞாபகப் பிசகு இருக்கலாம்!) அவரது உடல்நிலை குறித்து பேச்சு திரும்பியது.'நிறைய படிக்கிறேன் சார், அது ஒன்று தான் என்னால் முடிகிறது' என்றார். 'அவ்வளவு பிஸியான நேரத்திலும் படிக்கிறத விடாத ஆள் நீங்க.. இப்ப படிக்காம உங்களால எப்படி இருக்க முடியும்?' என்றேன். 'படிக்கிறதை எழுதி வையுங்கள்.. உங்கள் நினைவுகளையாவது எழுதுங்கள்' என்றேன். 'அதில என்ன சார் இருக்கு?' என்றார். 'நீங்க அந்தக் காலத்துல சொன்னீங்க... அப்பவே எழுத முடியலையே' என்றார். 'நோட்டில் சில குறிப்புகளை எழுதி வருகிறேன்' என்றார். சந்திக்க வேண்டும் என்று இருவரும் சபதம் எடுத்துக் கொண்டோம். ஆனால் அது புலிக்கொடி போர்த்திய உடலை நான் தொட்டு வணங்குவதாக மட்டும் இருந்தது.

அவர் சொல்லி இருந்தார். 'நான் இறந்தால் புலிக் கொடி போர்த்துங்கள்' என்று. போர்த்தப்பட்டு படுத்திருக்கும்போது புலிப்போராளி போலத் தான் இருந்தார். அவருக்கு கிட்டு, பேபி சாயல் இருக்கும். விரும்பிய வாழ்க்கையும் விரும்பிய மரணமும் அவருக்கு வாய்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.இன்றும் தினமும் உஸ்மான் சாலையில் பயணிக்கும்போது வாழ்ந்து கடந்த காலங்கள் வந்துபோகிறது. சரவணா தெரு, வைத்தியராமன் தெரு, ஆற்காடு தெரு ஆகிய மூன்றும் வளர்ந்த இடங்கள். ஒன்று மணிவண்ணன் சார் அலுவலகம், மற்றொன்று நீதியின் போர்வாள் அலுவலகம், இன்னொன்று கவிதாபாரதியின் குடிசை. மூன்றிலும் மூழ்கி முத்தெடுத்த காலம் அது.

அப்போது சட்டக்கல்லூரி மாணவன் நான். ஆனாலும் இனி இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். அந்த இதழைப் பார்த்துவிட்டு உதவிகள் செய்தார், மணிவண்ணன். இனி வாசகர் வட்டக் கூட்டங்கள் என சில ஊர்களில் பேசினார். அதன்பிறகு  ஒரு நாள் விடுதலையும் மணிவண்ணனும் பேசி, வைகோவுக்காக ஒரு இதழை நடத்தத் திட்டமிட்டார்கள். 'மணிவண்ணன் சார், ஒரு பத்திரிகை நடத்தணும்னு சொல்றார்... டம்மி தயார் செய்யுங்கள்' என்று விடுதலை
சொன்னார். 'பத்திரிகை நடத்துவது சாதாரண விஷயம் அல்ல, மூன்று ஆண்டுகளுக்கு பணம் வராது, அதன்பிறகு கொஞ்சம் வரும், ஐந்து ஆண்டுகள் தாக்குப் பிடித்தால் தான் நிற்கும்' என்று நான் சொன்னேன். மணிவண்ணன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே அவரைப் பிடித்துப் போனது. தனது அறை முழுக்க புத்தகம் வைத்திருந்தார். பேசும் போது நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டினார். 'இதில் இருந்து எனக்கு லாபம் வரத் தேவையில்லை' என்றார். 'தமிழ், தமிழன், புலி, பிரபாகரன்னு எழுதுறதே தப்பா? இதை விடக்கூடாது' என்றார். 'எனது சம்பாத்தியத்தில் இந்த இனத்துக்கு நான் செய்யும் கடமை இது,' என்றார். அவரது நோக்கம் தெளிவாக இருந்தது. 'உங்களுக்குப் பணம் வராது சார்' என்றேன். 'நான் கேட்கலையே சார்' என்றார். 'உங்களால் முடிந்தவரை நடத்துங்கள்' என்றேன். அப்படித்தான் உரிமையாளர்: மணிவண்ணன், ஆசிரியர் : விடுதலை, துணை ஆசிரியர்: ப.திருமாவேலன் என்று 'நீதியின் போர்வாள்' வெளியானது.

அதற்கு முன்பு ஆற்றிய பத்திரிகை பணியெல்லாம் 'சமூக சேவை' அவ்வளவு தான். அப்படி என்றால் சம்பளம் கிடையாது. முதன்முதலாக நான் ஊதியம் பெற்றது அங்கு தான். அதனால் தான் பழைய முதலாளி என்றேன். அதுவும் அவர் சினிமாக்கார் என்பதால் பத்திரிகை அலுவலகத்தையும் சினிமா கம்பெனி போல ஆக்கிக் கொடுத்திருந்தார். சினிமா கம்பெனியில் பெரிய வசதியே சாப்பாடு தான். அதனால் தான் சும்மா இருந்தாலும் கம்பெனி
சாப்பாட்டுக்காக பலரும் அங்கு பதுங்கி விடுவார்கள். மாத ஊதியம், மத்தியானச் சாப்பாடு என மணிவண்ணன் எங்களுக்கு கருணைக்கடவுளாகத் தெரிந்தார். ஒருவேளை அது வாய்க்காமல் போயிருந்தால் அடுத்த ஆண்டு கோவில்பட்டிக்கு வழக்கறிஞராகப் போய் விடலாம் என்ற நினைப்பும் இருந்தது. தடுத்தது மணிவண்ணனின் அன்பும் கருணையும்.

அவரது அனுபவங்களை எழுதச் சொன்னார் விடுதலை. அதில் ஏனோ மணிவண்ணனுக்கு விருப்பம் இல்லை. 'உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள்' என்றேன் நான். 'படித்தவை, யோசித்தவை மாதிரி எழுதுறேன் சார்' என்றார். 'ஒரு சினிமாக்காரனின் சிந்தனைகள்' என்று அவரே தலைப்பை வைத்துக் கொண்டார். மணியான கையெழுத்தில் எழுதுவார். என்னையும் விடுதலையையும் அழைத்து வாசித்துக் காண்பிப்பார். 'ரொம்ப படிச்சவன் திட்டணும் சார், பாமரன் பாராட்டனும்
சார்... அந்த மாதிரி இருக்கா?' என்பார். எவ்வளவு பெரிய ஆள், குழந்தை மாதிரி இருக்காரே என்று பேசிக் கொள்வோம்.

அவரது கட்டுரைகளில் ஒன்றை மட்டும் தேடிப்பிடித்து எடுத்தேன். அதன் ஒரு பகுதி:

'குட்மார்னிங், காலையில் எழும் மனிதன்.

தன்மீதுள்ள பாம்பே டையிங் போர்வையை விலக்கிக் கொண்டு எழுகிறான்.

எழுந்ததும் போர்ஹென்ஸ் டூத் ப்ரஷ்ஷில் கோல்கேட் டூத் பேஸ்ட்டை பிதுக்கி பல்தேய்த்ததும் டாடாவின் 3 ரோஸ் டீயைக் குடிக்கிறான். பிலிப்ஸ் ரேடியோவில் ஹிந்தி அல்லது ஆங்கிலச் செய்தியைக் கேட்டுக்கொண்டே கோயாங்கோ குடும்பத்தின் இந்தியன் எக்ஸ்பிரஸையோ தினமணியையோ படிக்கிறான். பின் கிளீனிங் ஷாம்பு போட்டு தலையைக் கழுவும் தமிழன் லக்ஸோ - ரெக்ஸோனாவோ - மைசூர் சேண்டிலோ போட்டு உடம்பைக் கழுவுகிறான். (எல்லா சோப்பும் வடக்கத்தி தயாரிப்புத் தானே) குளித்துவிட்டு தமிழன் பாம்பே டையிங் துவாலையால் உடம்பைத் துடைத்துக் கொண்டு விஐபி ஜட்டியை எடுத்து போட்டுக் கொள்கிறான்....'இப்படியே தொடர்வார்.

விமல்ஸ் பேண்ட், டபிள் புல் சட்டை, கேமல் பேனா, ப்ரில் இங்க், டைட்டன் வாட்ச், பாட்டா ஷூ, விஜய் லாம்பரட்டா ஸ்கூட்டர், மாருதி கார், பிஎஸ்சி சைக்கிள், உஷா ஃபேன், கோத்ரெஜ் நாற்காலி, கோல்டு ஸ்பார்ட், செவன் அப், கோல் ப்ளாக், வில்ஸ்... என்று போகும். இறுதியாக  ஓனிடா,
சாலிடர், டைனோரா ஏதோ ஒரு டிவியில் இந்தி பாட்டு கேட்டபடியே கோத்ரெஜ் கட்டிலில் பாம்பே டையிங் போர்வைக்குள் முடங்கிப் போகிறான் தமிழன்.

தமிழன் தன் ஒரு நாள் வாழ்க்கையில் உபயோகப்படுத்தும் இத்தனை பொருட்கள் வடநாட்டு பனியா முதலாளிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை விற்கும் சந்தையாக மட்டும் என் தாய்த்தமிழ்நாடு பயன்படுகிறது' என்று முடித்திருப்பார். இது தான் உண்மையான மணிவண்ணன். அல்வா, கபிகபி அல்ல.

இயக்குநர் மணிவண்ணன்

எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார்.
'சின்ன வயது பழக்கம் விடாது' என்றார். எப்போது புத்தகங்கள் பற்றி பேச்சுவந்தாலும் வால்காவிலிருந்து கங்கை வரை பற்றிச் சொல்லாமல் இருக்க மாட்டார். திராவிட இயக்க குடும்பத்தைச்
சேர்ந்தவர். திமுகவில் அவரது அப்பா பொறுப்பில் இருந்துள்ளார். பள்ளி ஆசிரியர் மூலமாக இடதுசாரி இயக்க ஈடுபாடு வந்ததாகவும் சொல்லி இருக்கிறார். இவரது கையெழுத்து அழகாக இருக்கும். நன்றாக படம் வரைவார். இவர் வரைவதைப் பார்த்து கம்யூனிஸ்ட்டுகள் கொத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். சிறுவயதில் மார்க்க்சிய லெனினிய ஆசான்களில் ஒருவரும் தனிமனித அழித்தொழிப்பு சிந்தாந்த வாதியுமான சாரு மஜூம்தாரை தான் சந்தித்திருப்பதாகச்
சொன்னார். அப்போது மா.லெ. ஆட்களுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தான் சென்னைக்கு வந்துள்ளார். பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' படத்துக்கு இவர் மிக நீண்ட விமர்சனம் எழுதி அனுப்ப அதை அவர் பார்த்து இவரைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார். அதிலிருந்து மணிவண்ணனின் ரயில் சினிமாவில் ஓடத் தொடங்கியது. சினிமாவில் ஓடினாலும் அரசியலில் காலூன்றி நின்றது. இறுதி வரை.

'சினிமாவால் வாழ்க்கை முன்னேறியது, ஆனா போராட்டக்குணம் போச்சு' என்றார் ஒரு பேட்டியில். அவருக்கு போராட்டக் குணமும் அப்படியே தான் இருந்தது. ஆனால் உடம்பு ஒத்துழைக்கவில்லை. அவ்வளவு தான். 'விஸ்வரூபம்' படத்துக்காக அனைவரும் கமலின் கருத்துச்சுதந்திரம் பற்றி கவலைப்பட்ட போது, இது இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் படம் என்று விமர்சித்தவர் மணிவண்ணன் மட்டும்  தான்.'கலையும் அரசியலும் ஒன்றாக இருக்க வேண்டும்' என்பார். அது விலை பேசாத கலை. விலைபோகாத அரசியல். கூலிக்கு கூவ மாட்டார்.

நான் முதலில் சொன்னது மாதிரியே, ஓராண்டுக்குள் போர்வாள் இதழின் வரலாறு முடிந்தது. 'இதுக்கு மேல என்னால செலவு பண்ண முடியலை சார்' என்றார். சிலர் இதற்கான உதவி செய்ய தயாராக இருப்பதாக விடுதலை சொன்னார். 'அது வேண்டாம் சார்' என்றார். 'அப்படிப் பணம் வாங்கினா அது என்னோட பத்திரிகைன்னு எப்படி சொல்ல முடியும்? அவங்க பத்திரிகை ஆயிடும்' என்றார்.
'சினிமா வேற, பத்திரிகை வேற. அது தொழில். இது தொழில் அல்ல. லாபம் பார்க்கிறவனா இருந்தா இதை ஆரம்பிச்சிருக்கவே மாட்டேனே' என்றார். எந்த மனவருத்தமும் இல்லாமல் பிரிந்தோம். அதன்பிறகு படங்களில் நடிப்பதில் மும்முரம் ஆகிவிட்டார். ஒன்றிரண்டு படங்களைப் பார்த்துவிட்டுப் பேசியதாக நினைக்கிறேன். ஆனால் அதுவும் வழக்கமானது தான். என்ன புத்தகம் படிக்கிறீங்க சார் என்பார். படிக்கிறதை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்பார்.

பெரியாரை விமர்சித்த ஒரு புத்தகத்தை அவர் வெளியிட்ட நேரத்தில் அவரிடம் பேச நினைத்தேன். ஏனோ விட்டுவிட்டேன். என்னுடைய நண்பர் தங்கவேலை விசாரித்தேன். இறுதிக் காலக்கட்டத்தில் மணிவண்ணனுக்கு தோழர் பாண்டியனாக இருந்தவர் தங்கவேல். 'மலேசியாவில் இருந்து அன்று தான் வந்தார். திடீரென கொடுத்துவிட்டார்கள். சார் படிக்கலை,' என்றார். அவரது உடல்நலம் குன்றிப் போயிருந்த காலக்கட்டம் அது. ஏற்றுக் கொள்ளக்கூடிய சமாதானம் தான் அது.

மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் ஆகிய மூன்று  தத்துவங்களும் அவருக்கு  முக்கியமானது. இந்த தத்துவங்கள் எந்தக் காலக்கட்டத்திலும் பெரும்பான்மைவாதமாக, நிறுவனமயமானதாக மாறிவிடக்கூடாது என்று சொன்னார். 'எந்த நல்ல தத்துவமும் பெரும்பான்மைவாதமாக ஆகும்போது வன்மமாக மாறும்' என்றார். அவர் அனைவரையும் படிக்கச் சொன்ன புத்தகம்: குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிவற்றின் தோற்றம் என்பதாகும்.  தத்துவத்தை விட மனிதம் முக்கியமானது. மனிதம் உருவாக்கவே தத்துவங்கள் என்றார்.

போர்வாள் நிறுத்தப்பட்டபோது இறுதியாகச் செலவான தொகையின் கணக்கை ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒப்படைத்தோம். அதை அவர் திருப்பிப் பார்க்கவில்லை. திருப்பிக் கொடுத்தார். 'மனசு நம்புது
 சார்!' என்றார். மனசு மறக்கவில்லை சார். கோபுரங்கள் சாய்வதில்லை!

ஜூலை, 2019.