தன் மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தின் படப்பிடிப்புக் காட்சி  
சினிமா செய்திகள்

மறக்க முடியாத 10 விஜயகாந்த் படங்கள்!

Staff Writer

செந்தூரப்பூவே

செந்தூரப்பூவே படத்தில் ராம்கி- நிரோஷா காதல் ஜோடியாக நடிச்சிருப்பாங்க. இவங்களோட காதலைச் சேர்த்துவைக்கும் பாத்திரம்தான் விஜயகாந்துக்கு. முக்கியமான சண்டைக் காட்சிகளில் விஜயகாந்துக்கு தலையில் வலி ஏற்பட்டு துடிக்கிறமாதிரி வெச்சிருப்பாங்க. ரயில் சண்டைக் காட்சி ஒன்று ரொம்ப பிரமாதமாக இருக்கும். இந்தப் படத்துக்குத்தான் விஜயகாந்துக்கு முதல் முதலாக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது கிடைத்தது. 200 நாட்களுக்கு மேல் ஓடிய படம் இது. பி ஆர் தேவராஜ் இயக்கத்தில் 1988-இல் அதிகபட்ச வசூலைக் குவித்த படமும்கூட.

கேப்டன் பிரபாகரன்

இது விஜயகாந்துக்கு மிகப்பெரிய பெயர் வாங்கித் தந்த படம். ஆர்.கே. செல்வமணி இயக்கிய படம். சந்தன வீரப்பன் மாதிரி ஒரு பாத்திரத்தை மன்சூர் அலிகான் பண்ணி அறிமுகம் ஆனார். சரத்குமார்கூட இதில் ஒரு சின்ன ரோல் பண்ணி இருக்காரு. இது விஜயகாந்தின் 100ஆவது படம். அதுமட்டுமல்ல அவருக்கு இந்தப் படத்துக்குப் பிறகுதான் கேப்டன் அப்டீங்கற பெயரே கிடைத்தது. இந்தப் படத்தின் ஒரு காட்சியில் விஜயகாந்த் தோள்பட்டை மூட்டு நழுவி வலியால் துடி துடிக்க, அதைப் பாத்துட்டு அட கேப்டன் என்னமா நடிக்கிறாருன்னு படக்குழு நினைக்க, அவர் பாடு திண்டாட்டமா போயிட்டுதுன்னு சொல்வாங்க. அதன் பிறகுதான் அவர் சண்டைக்காட்சிகளில் அதிகமாக கால்களை உபயோகிக்க ஆரம்பிச்சாருன்னு சொல்வாங்க

ஊமை விழிகள்

இது ஆபாவாணன் தயாரிப்பில் அரவிந்த்ராஜ் இயக்கத்தில் வெளியான ப்டம். திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து உருவான படம். பயங்கர ஹிட் படம் இது. கொஞ்ச நேரம்தான் விஜயகாந்த் வந்தாலும் பயங்கரமான நடிப்பு. ஒரு சீரியல் கொலைகாரனைப் பிடிக்கிற போலீஸ் ரோல் அவருடையது. நல்ல கம்பீரமா நடிச்சிருப்பாரு. அருண்பாண்டியன், ஜெய்சங்கர் போன்றவர்கள் நடித்தபடம். தோல்வி நிலையென நினைத்தால் அப்படீங்கிற பாட்டு மறக்க்கவே முடியாதது.

வானத்தைப் போல

விக்ரமன் இயக்கிய குடும்பக் கதையை மையமாகக் கொண்ட படம். 250 நாள்களுக்கும் மேல் ஓடி 2000ஆவது ஆண்டு, சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருது, மாநில விருது எல்லாம் பெற்ற படம். விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படம். பிரபுதேவா, மீனா, கௌசல்யா எல்லாம் நடிச்சிருப்பாங்க. எல்லா விக்ரமன் படங்களையும் போல இதுவும் ஃபீல் குட் மூவிதான். எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாட்டு மறக்கமுடியாத ஒன்று.

அம்மன் கோவில் கிழக்காலே

ஆர் சுந்தரராஜன் படம். விஜயகாந்த்கூட ராதா நடிச்சிருப்பாங்க. இளையராஜா இசையில் பாட்டெல்லாம் பிச்சிருப்பார். அருமையான காமெடி. ராதாவுக்கு ஆரம்பத்தில் திமிர் பிடித்த கேரக்டர். விஜயகாந்த் அவர் கழுத்தில் தாலி கட்டி அவர் திமிரை அடக்கிற மாதிரி கதை இருக்கும். இந்தப் படத்தில் ராதாரவிக்கும் நல்ல ரோல் உண்டு. அடிக்கடி இப்பவும் செந்தில் உட்பட்ட குழுவோட விஜயகாந்த் சுற்றுகிற காமெடி காட்சிகளை டிவியில் பார்க்கலாம். சின்னமணிக் குயிலே.. பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே.. போன்ற பாடல்கள் கங்கை அமரன் எழுதி இன்றும் ரசிக்கப்படுகிறவை.

புலன் விசாரணை

இது ஆர்கே செல்வமணிக்கு முதல் படம். இந்த படத்தில்தான் சரத்குமாரை வித்தியாசமான வில்லனாக அறிமுகப்படுத்தி இருப்பாங்க. ஆட்டோ சங்கரை நினைவூட்டும் கதாபாத்திரத்தில் ஆனந்த்ராஜ் நடிச்சிருப்பார். தொடர் கொலைகளைப் புலனாய்வு செய்யும் அதிகாரி ஹானஸ்ட் ராஜ் என்கிற பாத்திரத்தில் விஜயகாந்த் வருவார். ஆர்.கே. செல்வமணிங்கிற முதல் பட இயக்குநர் தன்னை நிரூபிக்க உதவியாக இருந்த படம். 1990 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகி பயங்கர ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் படம் இயக்கவும் செல்வமணிக்கு வாய்ப்பு தந்தாங்க.

சத்ரியன்

அருமையான போலீஸ் கதை. நீ வரணும் பழைய பன்னீர் செல்வமா வரணும் என்று திலகன் விஜயகாந்தைப் பார்த்துப் பேசும் வசனம் பயங்கர ஃபேமஸ். இது மணிரத்னம் தயாரிப்பில் அவரது உதவியாளராக இருந்த கே. சுபாஷ் இயக்கிய படம். இதுக்கு இளையராஜா இசை. மாலையில் யாரோ மலரோடு பேச என்கிற அழகான பாட்டு சுவர்ண லதா பாடியிருப்பாங்க. பயங்கரமா வசூல் செய்த படம் மட்டுமல்ல… ஒரு கல்ட் ஸ்டேட்டஸே இந்த படத்துக்கு போலீஸ் படங்களில் உண்டு.

சின்ன கவுண்டர்

தலை முடியை வழிய சீவி, தோலில் துண்டைப் போட்டுக்கொண்டு வேட்டி சட்டையில் சின்னக் கவுண்டராக விஜயகாந்த் நடித்த இப்படம் பட்டி தொட்டியெல்லாம் பயங்கரமாக ஓடி, தமிழ்நாடு எங்கும் விஜயகாந்துக்கு பெரிய மாஸ் அப்பீலைப் பெற்றுத் தந்தது. ஆர்.வி. உதயகுமார் இயக்கிய இப்படம், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி எல்லோரும் கலக்கி இருப்பாங்க. அந்த வானத்தைப் போல் மனம் படைச்ச மன்னவரே இளையராஜா இசையமைத்துப் பாடியிருப்பாரு… 1992 பொங்கலுக்கு வெளியாகி பயங்கர ஹிட் ஆகி அந்த ஆண்டு மாநில அரசின் சிறந்த பட விருது பெற்றது.

ரமணா

எல்லா துறையிலும் ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு பேராசிரியர்.. ஏசி எப் என்ற இளைஞர் படையை வெச்சு செயல்படுவார். கடைசியில் போலிசிடம் சிக்கி தன் உயிரையே தியாகம் செய்வார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரமணா என்கிற அந்தப் பேராசிரியராக விஜயகாந்த் ஆழ்ந்த தன் நடிப்பால் எல்லோரையும் ஈர்த்தார். அவர் அரசியலுக்கு வருவதற்கு விதைபோட்ட படமும்னும் சொல்லலாம். 2002-இல் வந்த படம் இது. ஊழல் எதிர்ப்புப் படங்களில் இந்த படத்துக்கு முக்கிய இடம் உண்டு

சட்டம் ஒரு இருட்டறை

இது விஜயகாந்தை ஒரு ஹீரோவா தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திய படம். எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் ஒரு முக்கியமான வெற்றிப் படம். இதைத் தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் விஜயகாந்த் 19 படங்கள் நடித்தார். அதற்கான தொடக்கம் இந்த படம்தான். தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் வழக்கமான -பழிக்குப்பழி- படம்தான். 1981-இல் வெளியான இப்படம். கோபக்கார இளைஞனாக விஜயகாந்தை தமிழ் சினிமாவுக்கு கொண்டுவந்தது மட்டுமல்ல, இதேபோன்ற பல படங்களுக்கும் இதுதான் விதை போட்டது.