இயக்குநர் பா.ரஞ்சித் 
சினிமா செய்திகள்

‘திமுகவில் இன்றுவரை இருக்கும் சாதி பாகுபாடு’ – இயக்குநர் பா. ரஞ்சித்

Staff Writer

‘திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி ஸ்டாலினும் அறிந்தே இருப்பார்’ என இயக்குநர் பா. ரஞ்சித் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். முதல் நாளிலிருந்தே வசூலை அள்ளிக்குவித்த மாமன்னன் திரைப்படம் இதுவரை 23 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாமன்னன் படத்தை இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டி தனது முகநூல் பதிவிட்டுள்ளார். அதில், "மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

"உண்மையாகவே தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன? அவர்களுக்கான அங்கீகாரமும் அதிகாரமும் பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுக்குரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின்.

"திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார். அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார்.

மாமன்னன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்தார் உதயநிதி, அவருக்கு நன்றியும் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.