விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருக்கும் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 22.4.2019 அன்று சங்கத்தின் சார்பில் SIAA - GSICC கமிட்டி உருவாக்கப்பட்டது.
இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தியாகராயர் நகரில் நேற்று நடைபெற்றது.
குழுவின் தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா, சமூகச் செயற்பாட்டாளர் ராஜி கோபி, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் :
1. பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம்புரிந்தவர்களை விசாரித்து அந்தப் புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில், அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குத் திரைத்துறையில் பணியாற்றத் தடைவிதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பரிந்துரை செய்யப்படும்.
2. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் தருவதில் தொடங்கி, அவர்களுக்கு இறுதிவரை சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் குழு செய்யும்.
3. பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
4. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க வசதியாக, தனி தொலைபேசி எண், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது மின்னஞ்சல் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
5. பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் குழு மூலம் தங்கள் புகார்களை அளிக்கலாம். அதை விடுத்து நேரடியாக ஊடகங்களில் பேசவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
6. யூட்டியூபில் திரைத்துறையினர், அவர்களின் குடும்பத்தினர் பற்றி அவதூறாகப் பதிவிடப்படுவதால், பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
7. மேலும் குழுவின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்.
மேலும், குழுவில் ஒரு வழக்கறிஞரை நியமிக்கும் முடிவெடுக்கப்பட்டது.