சிவகார்த்திகேயன் - மிஷ்கின் 
சினிமா செய்திகள்

‘மிஷ்கின் சார் அளவுக்கு என்னை யாரும் கொஞ்சியது இல்லை!' – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Staff Writer

‘சினிமாவில் மிஷ்கின் சார் அளவுக்கு என்னை யாரும் கொஞ்சியது இல்லை’ என நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், மாவீரன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “மடோன் அஸ்வினுடைய மண்டேலா படம் எனக்கு ரொம்ப பிடித்தது. அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் ரொம்ப கடினமானது. அதேபோல், அதில் சமூக அக்கறை இருக்கிறது. இதை எல்லோரும் ரசிக்கும்படி கொடுக்கிறார் அஸ்வின். மண்டேலா படத்தை என்னுடைய மகளும் அம்மாவும் பார்த்து ரசித்தார்கள். அதே மாதிரியான விஷயங்களைத்தான் மாவீரன் படத்திலும் கையாண்டுள்ளார் அஸ்வின்.

லோகேஷ் கனகராஜை பார்க்கும் போது சொன்னார், ’ப்ரதர் நான் கடைசி பெஞ்ச் மாணவன். ஆனால் அஸ்வின் முதல் பெஞ்ச் மாணவன். முதல் பெஞ்ச் மாணவன் எப்படி இருப்பானோ அப்படித்தான் அஸ்வின் படம் எடுப்பான்’ என்றார். படப்பிடிப்பு சென்ற பிறகு தான் தெரிந்தது, அவர் முதல் பெஞ்ச் மாணவன் இல்லை, தலைமை ஆசிரியர் என்று. படப்பிடிப்பு தளத்தில் யாரையும் அவர் திட்டியது கிடையாது. ஆனால் வேலை வாங்கிவிடுவார். ஒருநாள் சாதாரண ஒரு காட்சியில் நடிப்பதற்கு நிறைய ‘ஒன்மோர்’ வாங்கினேன். பிறகு தான் அஸ்வின் என்ன சொல்லுகிறாரோ அப்படி நடித்தேன். என்னுடைய இந்த கதாபாத்திரம் வழக்கமாக நான் நடிக்கும் கதாபாத்திரமாக இருக்காது. டாக்டர் படத்தில் என்னை வித்தியாசமாக பார்த்திருப்பீர்கள். அதேபோல் மாவீரன் திரைப்படத்திலும் பார்ப்பீர்கள்.

சினிமாவில் மிஷ்கின் சார் அளவுக்கு என்னை யாரும் கொஞ்சியது இல்லை. மிஷ்கின் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய படங்களை முதல் நாளில் பார்த்துவிடுவேன். தடல் புடால்னு பேசுவது, கண்ணாடி பேட்டுக்குக் கொண்டு அவர் பார்க்கும் பார்வை வைத்து அவரிடம் சரியாக இருந்து கொள்ளவேண்டும் என நினைத்தேன். ஆனால், அவர் ரொம்ப இனிமையானவர்.

அம்மா – மகன் உறவை பேசும் படம் இது. அப்பா – மகன் உறவை வைத்து நான் இரண்டு மூன்று படங்களில் நடித்துவிட்டேன். சரிதா மேடம் இனி தொடர்ந்து நடிக்க வேண்டும். அவர் எப்படி படங்களைத் தேர்வு செய்து நடித்தார் என கேட்டேன். நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்றார்.

எல்லோரும் பாட்டு கற்றுக்கொண்டு பாடுவார்கள். நான் ஹீரோ ஆன ஒரே காரணத்துக்காக நான் பாடிக்கொண்டு இருக்கிறேன். அதிதி ஷங்கர் முறையாகப் பாட்டு கற்றுக் கொண்டு பாடியிருக்கிறார். அதுவே அவரை உயரத்துக்குக் கொண்டு வரும்” என்றார்.