நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது. 
சினிமா செய்திகள்

லால் சலாம் படப்பிடிப்பு: ரஜினிகாந்த் அண்ணாமலையார் தரிசனம்!

Staff Writer

'லால் சலாம்' படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

1990ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புடைய உண்மைக் கதையை மையமாகக் கொண்டு லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, ரஜினிகாந்த் நடித்த சில காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்ட நிலையில், மீண்டும் லால் சலாம் படக்குழுவினர் திருவண்ணாமலையில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், படத்தில் நடிப்பதற்காக திருவண்ணாமலை சென்ற ரஜினிகாந்த், அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். டிசர்ட் அணிந்து கொண்டு ரஜினிகாந்த் கோயிலுக்கு சென்று வழிபட்ட நிலையில், அவருக்கு கழுத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதேபோல் லால்சலாம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று செஞ்சியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோணை கிராமத்தில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்றார். இதனால், கோணை கிராமத்தின் வழியாக அப்பம்பட்டிற்கு செல்லும் வழியானது மூடப்பட்டது. இதனால் கோணை கிராமத்தின் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்லும் மக்கள், வேறு வழியில்3 கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்றுள்ளனர்.