மூடிய அறைக்குள் நடக்கும் இளம் பெண்ணின் மர்ம மரணமும், காவல்துறையின் விசாரணையுமே ‘கொலை’ திரைப்படம்.
1923ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளி யார் என கண்டுபிடிக்கப்படாமலேயே ‘ஊத்தி மூடப்பட்ட’ தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபல மாடலான மீனாட்சி சவுத்ரி தனது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடக்கிறார். அந்த வழக்கை மூத்த காவல் அதிகாரியான ஜான் விஜய் ஊத்தி மூட நினைக்கிறார். அவரிடம் சட்டம் பேசி வழக்கை கையிலெடுக்கிறார் ரித்திகா சிங். அவருக்கு உதவி செய்ய வருகிறார் முன்னாள் காவல் அதிகாரியான விஜய் ஆண்டனி. அவர்களின் விசாரணை பல கோணங்களில் நடக்க, இறுதியில் அவர்கள் குற்றவாளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இயக்குநர் பாலாஜி கே குமார் தமிழில் உலக தரத்திற்கு இணையான ஒரு படத்தை உருவாக்க நினைத்துள்ளார். அதற்கு ஏற்ற மாதிரி படத்தின் கலர், கேமரா கோணம், இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், விசாரணை போன்றவற்றை நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். இருந்தாலும், கதை, கதாபாத்திர உருவாக்கம், கதை நிகழும் இடம் போன்றவற்றில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார்.
அதேபோல், படத்தின் முதல் பாதி மெதுவாக வேகம் எடுக்க, அதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. இரண்டாம் பாதியில் விஜய் ஆண்டனியின் விசாரணை முறை கவனத்தை ஈர்க்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கலாம்.
ஒருவித இறுக்கமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் ஆண்டனி நடிப்பில் எதுவும் புதுசாக செய்யவில்லை. தலைமுடி நரைத்து போயிருப்பது மட்டும்தான் கொஞ்சம் வித்தியாசம்! ரித்திகா சிங் நடிப்பதற்கு பதிலாக நடந்து கொண்டே இருக்கிறார். மாடலாக நடித்துள்ள மீனாட்சி சவுத்ரியின் நடிப்பு கனகச்சிதம். அந்த பாத்திரம் அழுத்தமாக மனதில் பதிந்துவிடுகிறது. உயர் காவல் அதிகாரியாக வரும் ஜான் விஜய் கதாபாத்திரம் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏன் மன்சூர் அலிகான் என்று பெயர் வைத்தார்கள்? மீனாட்சியின் நண்பராக வரும் சித்தார்த் சங்கர், மாடல் போட்டோகிராபர் அர்ஜூன், மாடல் ஏஜென்ட் முரளி சர்மா, மீனாட்சி மேனேஜர் என்று சொல்லிக் கொள்ளும் கிஷோர் குமார் ஆகியோர் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளனர். ராதிகா ஓரிரு காட்சிகளில் வந்து சொல்வதோடு சரி.
சிவக்குமார் விஜய் இந்தப் படத்தின் மூலம் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளராக மிளிர்கிறார். ஒவ்வொரு காட்சியையும் வித்தியாசமாகவும் அழகாகவும் செதுக்கியுள்ளார். இதற்கு இணையாக கிரிஷ் கோபால கிருஷ்ணனின் பின்னணி இசையை சொல்லலாம். ஆர்.கே. செல்வாவின் படத்தொகுப்பும் கவனிக்க வைக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் கொலை உள்ளடக்கமற்ற ஓர் பிரம்மாண்டம்!