வசந்தபாலன் 
சினிமா செய்திகள்

'ஆசிட் ஊற்றுவது போன்ற விமர்சனங்களை தடுக்க வேண்டும்' - இயக்குநர் வசந்தபாலன்

Staff Writer

திரைப்படம் வெளியானதிலிருந்து ஒரு வாரத்திற்கு விமர்சனங்கள் வராமல் தடுக்க வேண்டும் என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்கள் சினிமா வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. நடிகை ஜோதிகா இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும், எதிர்மறையான விமர்சனங்கள் படத்தின் வசூலை பாதித்தாக கூறப்படும் நிலையில், பிரபல திரைப்பட விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் நேர்காணலில், “நான் கடந்த 44 ஆண்டுகளாக திரைப்பட விநியோகஸ்தர் தொழிலில் இருக்கிறேன். எனக்குப் பிடிக்காத படத்தின் 100ஆவது நாள் வெற்றியை நானே நடத்தியிருக்கிறேன். அன்னக்கிளி, 16 வயதினிலே போன்ற படங்கள் வெளியானபோது சரியான வரவேற்பை பெறவில்லை. படம் நன்றாக இருக்கிறது என சொல்லிச் சொல்லியே பெரிய வெற்றியைப் பெற்றன.

இன்று பக்கத்து மாநிலத்திற்குச் சென்று அதிகாலைக் காட்சியில் படம் பார்த்துவிட்டு விமர்சனம் என்கிற பெயரில் வாய்க்கு வந்ததை யூடியூபர்கள் பேசுகின்றனர். இதனால், சினிமா தொழிலே நாசமாகப் போகிறது. எந்தக் காட்சி நன்றாக இல்லை என்பதைக் குறிப்பிடுவதைத் தவிர்த்து மொத்த படத்தையும் எதிர்மறையாக அணுகுகின்றனர்.

இந்தியன் - 2, வேட்டையன், கங்குவா படங்களின் வசூல் குறைந்ததற்கு இந்த விமர்சனங்களே காரணம். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் வரை விமர்சனங்கள் வரக்கூடாது என்கிற தடை உத்தரவை வாங்க தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

இவரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் வசந்த பாலன், “நான் திருப்பூர் சுப்ரமணியம் கருத்தை ஆதரிக்கிறேன். தயாரிப்பாளர்கள் சங்கம் விமர்சனங்கள் விஷயத்தில் விரைவில் முடிவெடுக்கவேண்டும். ஆசிட் ஊற்றுவது போல வருகிற விமர்சனங்கள் ஒரு வாரம் வரை இணையதளங்களில் வரவிடாமல் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram