விருது பெறும் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் 
சினிமா செய்திகள்

ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும்! – ஏ.ஆர். ரஹ்மான்

Staff Writer

ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.யின் அனுபவமிக்க தொழில்துட்ப கண்டுபிடிப்பு மையம் சார்பில் மெய்நிகர் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் புகழ்பெற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த ஆண்டுக்கான அந்த விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை ஐ.ஐ.டி. வழங்கியது. 2022ஆம் ஆண்டு வெளிவந்த ’லீ மஸ்க்’ என்ற படத்தில் மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது: 'லீ மஸ்க்' என்ற 37 நிமிட மெய்நிகர் படத்தை ஆறு ஆண்டுகளாக பல நாடுகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து உருவாக்கினோம். இதற்கான கதைக்களம், இசை, இயக்கம் உள்ளிட்ட பணிகளை நான் செய்தேன்.

இதை, உலக திரைப்படமாக உருவாக்கி உள்ளோம். இதை பார்த்த எல்லாரும், 10 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது போல இருப்பதாகக் கூறினர்.

இதுபோன்ற புதிய தொழில் நுட்ப படைப்புகள், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து வெளிவர வேண்டும். அதில், நம் கலை, கலாசாரம் உள்ளிட்டவை பதிவாக வேண்டும். நான் வெளிநாடுகளில் உள்ள, ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்லும் போது, அங்கு இந்திய இளைஞர்களை சந்திக்க முடிகிறது.

ஆனாலும், இதற்காக இந்தியர்களாக நாம் பெருமைப்பட முடியவில்லை. அதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் நுட்ப அறிவு சார்ந்த நம் இளைஞர்களால் இங்கேயே உருவாக்கப்பட வேண்டும். அதிலிருந்து இந்திய படைப்புகளாக, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என, நான் விரும்புவது உண்டு.

படைப்பாற்றலுக்கு எத்தகைய கோட்பாடுகளும் கிடையாது. அவரவர் சிந்தனை சார்ந்தே படைப்புகள் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு, படைப்பாளிகளின் வாய்ப்புகளை ஒழித்து விடும் என, அஞ்சப்படுகிறது. ஆனால், உண்மையான படைப்பாளி பலரை நேரில் வசப்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவால் அது முடியாது. அதனால், அச்சப்படத் தேவையில்லை.

அதேநேரம், நம் பணிகளை எளிதாக்கவும், அடுத்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தவும், உலகளாவிய போட்டிகளை சமாளிக்கவும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில் நுட்பங்களை கற்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.