டோவினா தாமஸூடன் சேரன் 
சினிமா

மலையாளத்தில் நடிக்கும் பிரபல தமிழ் இயக்குநர்! இவ்வளவு நாள் எப்படி விட்டுட்டாங்க...

Staff Writer

இயக்குநரும் நடிகருமான சேரன் முதல் முறையாக மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதை அவரே நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

’இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டோவினா தாமஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நரிவேட்டா’. இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஆர்யா சலீம், ப்ரியம்வதா கிருஷ்ணன், ரினி உதயகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் இயக்குநர் சேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் சேரன் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 26 முதல் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து சேரன் தனது எக்ஸ் பதிவில், “நண்பர்களே, முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டோவினோ தாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தின் இயக்குநரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன். என்றும்போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை. நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘மற்ற மொழி படங்களில் நடிக்க எல்லோருக்கும் ஆர்வம் இருக்கும். எனக்கும் மலையாள படத்தில் நடிக்க ஆசை இருந்தது. இந்த படத்தின் கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது.

ஆட்டோகிராப் படத்தின் மூலம் மலையாள சினிமா ரசிகர்களுடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. பொதுவாக தமிழ் சினிமா பல்வேறு மொழி கலைஞர்களின் கலவையாக இருக்கும். தமிழ் மற்றும் மலையாள சினிமா நெருக்கமாக இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று சேரன் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram