இந்திய அளவில் சில பயோபிக்குகள் வெள்ளித்திரைக்கு அவ்வப்போது விஜயம் செய்தாலும் தமிழில் அம்முயற்சிகள் ரொம்பவும் குறைவு. இன்னும் சொல்லப்போனால் வருடத்துக்கு ஒரு படம் கூட வருவதில்லை. இந்த அமரன் ஒரு நல்வரவு.
இந்திய ராணுவத்தில் 44-வது ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வாழ்க்கை சம்பவங்களையும், ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் இணைந்து எழுதிய `India's Most Fearless: True Stories of Modern Military Heroes' என்ற புத்தகத்தையும் அடிப்படையாக வைத்து, அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸின் பார்வையில் விரிகிறது இப்படம்.
ராணுவ வீரரின் கதை என்றவுடன் தேசபக்தி பொங்கி வழியும். பக்கம் பக்கமாக வசனங்கள் பேசிக்கொல்வார்கள் என்ற முன்னத்தி முடிவை படத்தின் தொடக்கக் காட்சியிலேயே துவம்சம் செய்துவிடுகிறார் இயக்குநர் ரஜ்குமார் பெரியசாமி. முகுந்தின் மனைவி இந்துவின் பார்வையில் துள்ளலான காதல் காட்சிகளுடன் மிக சுவாரசியமாக டேக் ஆஃப் ஆகிற கதை, காஷ்மீர் தீவிரவாதிகளை முகுந்த் தனது சக வீரர்களுடன் எதிர்கொள்கிற காட்சிகள் என்று பரபரக்கிறது.
முகுந்த் பாத்திரத்தில் சிவகார்த்திகேயன். மிலிட்டரி உடை போலவே கனகச்சிதமாய் பொருந்திப்போகிறார். தொடக்கத்தில் சாதாரண வீரராக கிளைமேக்ஸில் மேஜராக அவரது தோற்றமும் நடிப்பும் அட்டகாசம். இந்த ராணுவ புரமோஷன், நடிகராக அவரை தமிழ்த் திரையுலகின் மேஜர் நடிகர்களுல் ஒருவராக ஆக்கியிருப்பது நிஜம். ஆனாலும் அவரை விட உச்சமாய் ஸ்கோர் பண்ணியிருப்பது மனைவி இந்துவாக வரும் சாய் பல்லவிதான். ‘எடே முகுந்தா ‘ என்று மலையாளம் கலந்த தமிழில் படம் முழுக்க உணர்ச்சிக் குவியலாய் வாழ்ந்து தீர்த்திருக்கிறார். தேசிய விருது இவரைத் தேடி வந்து தனது கவுரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.
’உன்னை எவ்வளவு பாடுபட்டு பெத்தேன் தெரியுமா?’ என்று பாசமும் கோபமும் கொண்ட அம்மா கீதா கைலாசம், ராணுவ அதிகாரியாக ராகுல் போஸ், சக ராணுவ வீரராக புவன் அரோரா ஆகியோர் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். சி.எச்.சாயின் ஒளிப்பதிவு படு நேர்த்தி. ஜி.வி. பிரகாஷும் இசையில் கம்பீரம் காட்டுகிறார்.
கதையில் நிறைய மெலோடிராம்மாக்களுக்கான சாத்தியங்கள் இருந்தாலும் பல விஷயங்களை ஸ்போர்டிவாகக் கையாண்டிருப்பது திரைக்கதையின் பலம் என்றால் காஷ்மீர் அரசியலை ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டிருப்பது ஒரு பெருங்குறை.
மற்றபடி சல்யூட் அடித்து மரியாதை செய்யப்படவேண்டியவர்தான் இந்த அமரன்.