ஆர்எஸ் சிவாஜி 
சினிமா

நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ். சிவாஜி காலமானார்!

Staff Writer

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ஆர்எஸ் சிவாஜி(67) இன்று உடல்நிலை குறைவால் சென்னையில் காலமானார்.

கமலுக்கு பிடித்த நடிகர்களுள் ஒருவர் ஆர்எஸ் சிவாஜி. அவரின் அபூர்வ சகோதரர்கள், சத்யா, மைக்கேல் மதன காமராசன், குணா, உன்னைப் போல் ஒருவன், விக்ரம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கோலமாவு கோகிலா, சூரரைப் போற்று, தாராள பிரபு, கார்கி போன்ற பல படங்களில் நடித்து இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக நேற்று வெளியான யோகிபாபுவின் லக்கி மேன் படத்திலும் நடித்துள்ளார்.

ஒலி வடிவமைப்பாளராகவும், உதவிய இயக்குநராகவும் லைன் புரொடியூசராக பணியாற்றி உள்ள இவர், நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் உடன்பிறந்த சகோதரர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஆர்எஸ் சிவாஜி இன்று காலமானார். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்