96 பட இயக்குநர் பிரேம் குமார் தனக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்து யூடியூப் நேர்காணல் ஒன்றில் மனம் விட்டுப் பேசியுள்ளார்.
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27ஆவது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர்.
இதன், முதல் பார்வை போஸ்டர். டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தில், நடிகர் அரவிந்த் சுவாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. அதில், ’நான் போகிறேன்’ மற்றும் ’யாரோ இவன் யாரோ’ எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்த இயக்குநர் பிரேம்குமார் தான் சந்தித்த பொருளாதார நெருக்கடி குறித்து பேசியுள்ளார். பேட்டியில் அவர் கூறியதாவது:
“96 படத்துக்குப் பிறகு எந்தப் படமும் பணியாற்றவில்லை. அதில் சம்பாதித்த அனைத்தையும் செலவு செய்துவிட்டேன். அந்த சமயத்தில்தான் லயோலா கல்லூரியில் பயிலரங்கம் ஒன்றுக்காக அழைத்திருந்தார்கள். அன்று வங்கியிலிருந்து என்னுடைய தனிமேலாளரும் அழைத்து அக்கவுண்டில் பணம் இல்லை என எச்சரித்திருந்தார். படிக்க ஆசைப்பட்ட கல்லூரி என்பதால் போய்விட வேண்டும் என போய்விட்டேன்.
கல்லூரி நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது காரின் எரிபொருள் ரிசர்வ் நிலைமைக்கு வந்துவிட்டது. எனக்கு என்னவென்றால் கல்லூரிக்கு உள்ளேயே கார் நின்றுவிடக்கூடாது என்பதுதான். நின்றுவிட்டால் அசிங்கமாகிவிடும் அல்லவா!
அந்த கல்லூரியில் நிறை நுழைவு வாயில்கள் உண்டு. வாட்ச்மேன் கேட்டை வந்து திறக்க நேரமாகும் என்பதால், டீசலை மிச்சப்படுத்தலாம் என நினைத்து காரை ஆப் செய்துவிட்டேன். கையில் சுத்தமாக பணம் இல்லை. அப்போது ஒருவர் ஓடிவந்து நினைவு பரிசு ஒன்றைக் கொடுத்தார். அதில் ஒரு கடிதம் இருந்தது. அதை பிரித்துப் பார்த்தேன். அதில் கொஞ்சம் பணம் வைத்திருந்தார்கள். அதை வைத்துதான் அன்று எரிபொருளை நிரப்பினேன். அதற்கு அடுத்தநாள் நடிகர் கார்த்தியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அடுத்துதான் மெய்யழகன் படம் உருவானது.