தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ரஜினி படம் வெளியீட்டைத்தான் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது.
துபாயின் அதி உயர புர்ஜ் அல் அராப் ஹோட்டலில் சமீபத்தில் நடந்த 2.ஓ பாடல் வெளியீட்டு விழா எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.
இந்த விழாவை 12 ஆயிரம் பேர் நேரிடையாக கண்டு களித்தார்கள். இரவு பத்து மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி நள்ளிரவு வரை நீண்டது.
முதன் முறையாக இந்த ஹோட்டலில் நிகழ்ச்சியை நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. துபாயில் முதல் முறையாக பேனர்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் செய்யப்படும் முதல் இந்தியப் படம் 2.ஓ என்பது குறிப்பிடத்தக்கது.
2.ஓ இசை வெளியீட்டு விழாவை பாகுபலி புகழ் நடிகர் ராணா, ஆர்.ஜே. பாலாஜி , பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோர் முறையே ஆங்கிலம், தமிழ், இந்தியில் தொகுத்து வழங்கினர்.
விழாவில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜென்டில்மேன் தொடங்கி 2.ஓ வரை ஷங்கர் ஏ.ஆர்.ரஹ்மானின் கூட்டணி சோடை போனதில்லை. இடையில் அந்நியன் மற்றும் நண்பன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். இந்தப்படத்திலும் ஷங்கர் ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிக்கூட்டணி வாகை சூடும் என எதிர் பார்க்கலாம்.
படத்தின் பட்ஜெட் 400 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது என்கிறது அதிகாரப்பூர்வமற்ற தகவல். இன்னமும் கிராபிக்ஸ் காட்சிகள் வேலை நடந்துகொண்டிருப்பதால் பட்ஜெட் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது.
பொங்கலன்று படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் படம் தமிழ்ப்புத்தாண்டை ஒட்டியே வெளியிடப்படும் என்கிறார்கள். இந்தியில் அக்ஷய் குமார் நடிக்கும் ஒரு படம் ஜனவரியில் வெளியாவதால் இந்த ஏற்பாடு. படம் வெளியீடு இன்னும் தள்ளிப்போனாலும் ஆச்சரியப்படவேண்டாம், காரணம் கிராபிக்ஸ்.. கிராபிக்ஸ்..!
இந்தியா - நியூசிலாந்து பங்கேற்ற 2வது ஒருநாள் போட்டியில் பெரிய திரையில் மின்னியது ரஜினி போஸ்டர். இந்திய அளவில் 2.ஓ எதிர்பார்ப்புக்குரிய படமாகிவிட்டது.
விழாவில் ரஜினிகாந்த்,“வருடங்கள் வேக வேகமாக நகர்ந்துவிட்டன. என்னுடைய இந்தத் திரைப்பயணம் என்பது கடவுளின் ஆசியாலும் ரசிகர்களின் ஆதரவாலும்தான் சாத்தியமானது. வாய்ப்பு கிடைப்பது கடினம். ஆனால் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துபவன்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்,‘ என்றார் தன் பாணியில்.
நவம்பர், 2017.