![]() |
யூகி: திரைவிமர்சனம்!Posted : சனிக்கிழமை, நவம்பர் 19 , 2022 18:00:10 IST
![]() ‘வாடகைத் தாய்’ விவகாரம் சினிமாவின் கச்சாப் பொருளாக மாறியிருக்கிறது. கடந்த வாரம் சமந்தா நடிப்பில் வெளியான ‘யசோதா’ வாடகைத் தாய் பற்றிய கதைக் களத்தைக் கொண்டிருந்த நிலையில், இந்த வாரமும் அதேபோன்றதொரு கதைக்களத்துடன் வெளியாகி இருக்கும் திரைப்படம் யூகி.
சாலையில் நடந்து வந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஆனந்தி திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஆன பிரதாப்போத்தன். தனியார் துப்பறியும் நிபுணரான நரேனிடம் உதவி கேட்கிறார். நரேனுக்கு உதவி செய்ய சஸ்பென்ட்டில் இருக்கும் சப் இன்ஸ்பெக்டரான கதிரை அனுப்பி வைக்கிறார் பிரதாப் போத்தன். நரேன் தன் உதவியாளர்களுடனும் கதிருடனும் சேர்ந்து ஆனந்தியைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள். அந்தத் தேடுதல் பல திருப்பங்களுடன் நகர்கிறது. கடைசியில் ஆனந்தியைக் கண்டுபிடித்தார்களா இல்லையா? என்பதற்கான பதிலை சொல்வதுதான் படத்தின் கதை.
நரேன், கதிர், நட்டி என மூவரை சுற்றியே கதை நகர்ந்தாலும், அதற்கு ‘வாடகைத் தாய்’ விவகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் ஜாக் ஹாரிஸ். முதல் பாதி அடுத்த என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தவறியுள்ளது. இரண்டாம் பாதியில், கதிர் யார் என்ற சஸ்பென்ஸ் தெரியவரும் போது கதை கொஞ்சம் சூடு பிடிக்கிறது.
எளிமையான கதை, துண்டுதுண்டான திரைக்கதையால் படத்தின் மீதான ஈர்ப்பை குறைத்துவிடுகிறது. நட்டி கதாபாத்திரம் படத்துடன் ஒட்டாமல் போவது, கதிர் காவலராக மாறுவது போன்றவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்
நரேனின் அமைதியான முகபாவனை, கதிரின் பரிதவிப்பு, நட்டியின் வில்லத்தனமான நடிப்பு என் ஒவ்வொருவரும் அசத்தியிருக்கின்றனர். கர்ப்பிணியாக நடித்திருக்கும் ஆனந்தி சிறப்பாகவே நடித்துள்ளார். பெரிய சினிமா நட்சத்திரமாக வரும் ஜான் விஜய், டாக்டரான வினோதினி வைத்தியநாதன் தான் படத்தின் நெகட்டிவ் கதாபாத்திரங்கள். இருவருமே கொஞ்சம் மிகையான நடிப்பை வழங்கியுள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் சுட்டிக்காட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், ஓகே. படத்தில் பாடல்கள் இல்லை. ரஞ்சின் ராஜ் பின்னணி இசை பரவாயில்லை.
எளிமையான கதையை வித்தியாசமாக சொல்கிறேன் என முற்பட்டு சொதப்பியிருக்கிறார்கள். இது பார்வையாளர்களை சோதிக்கவே செய்யும்.
|
|