அழகு சாதன பொருட்களின் தயாரிப்புக்கு பின்னுள்ள கொடூரத்தைப் பேசும் திரைப்படமே ‘யசோதா’.
இந்தியாவில் மரணமடையும் ஹாலிவுட் நடிகை. விபத்தில் இறக்கும் தொழிலதிபர் மற்றும் பிரபல மாடல். தங்கையை தேடி வாடகைத் தாயாக செல்லும் யசோதா. இந்த மூன்று சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? இந்த மரணங்கள் எப்படி நிகழ்ந்தன? என்பதற்கான விடை சொல்வதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் கதை, மூன்று சம்பங்களுக்கான பின்னணியைத் தேடுவதாக இருந்தாலும், முழுக்கதையும் சமந்தாவை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளது. அதேபோல், வாடகைத் தாய் என்ற பெயரில் நடிக்கும் மோசடிகளை இந்தப் படம் சொல்லப்போகிறதா? என்ற எண்ணத்தை ஆரம்பத்தில் எழுப்புகின்றன. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், வேறு ஒரு விஷயத்தை நோக்கி நகர்கிறது. அதுதான் படத்தின் மைய கருவாக இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரிஸ் கையாண்டுள்ளார்கள்.
வாடகைத் தாய், அழகு சாதன பொருட்களைத் தயாரிப்பதற்குப் பின்னுள்ள அரசியலை வெட்ட வெளிச்சமாக பேசாமல் பூசி மொழுகியிருக்கின்றனர் இயக்குநர்கள். படத்தின் முதல் பாதி ரசிக்கும் படி இருக்கிறது. இரண்டாம் பாதியில் சமந்தாவின் சாகசத்தாலும், அழகு சாதன பொருளை எப்படி தயாரிக்கிறோம் என்பது குறித்து வரலட்சுமி கூறும் விளக்கங்களாலும் கிளைமாக்ஸ் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிடுகிறது.
சமந்தா மற்ற காட்சிகளை விட, சண்டைக் காட்சிகளில் மாஸ் நாயகியாக அசத்தியிருக்கிறார். ‘ராஜாவாகனும்னா போரில் ஜெயிக்கனும், ராணி ஆகனுன்மா ராஜாவை ஜெயித்தாலே போதும்’ என சமந்தா பேசும் வசனம் கவனிக்க வைக்கிறது.
வரலட்சுமியின் பாசாங்கான மற்றும் மிடுக்கான நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. அதேபோல், சம்பத், உன்னி முகுந்த் என அனைவரும் நன்றாகவே நடித்துள்ளனர். சமந்தா போடும் சண்டைகளை மாஸாக ஒளிப்பதிவு செய்துள்ளார் சுகுமார். அதேபோல், மணிசர்மாவின் பின்னணி இசை கதையின் போக்கிற்கு ஏற்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.
நல்ல விழிப்புணர்வு படமாக வந்திருக்க வேண்டிய யசோதா வழக்கமான மசாலா படமாக மாறிப்போவது துரதிர்ஷ்டமே.