அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

"இளம் எழுத்தாளர்கள் ஓநாயைப் போல் நிதானமாக இயங்கலாம்!" - வேல்முருகன் இளங்கோ

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   23 , 2020  15:49:26 IST


Andhimazhai Image

திருவாரூர் மாவட்டம் வடுவூரைச் சேர்ந்த இளைஞர் வேல்முருகன் இளங்கோ. ஊடறுப்பு என்ற தன்னுடைய முதல் நாவலைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் எழுதி வெளியாகி  இருக்கிறது மன்னார் பொழுதுகள் என்ற நாவல். எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தொடங்கி பலரால் பாராட்டப்பட்டிருக்கிறது இந்நாவல். மூன்று வேறுபட்ட பின்னணி கொண்ட குடும்பங்களின் பின்னிப்பிணைந்த வாழ்வை விறுவிறுப்பான கதையாகச் சொல்லி இருக்கிறார். கடல், தென்னந்தோப்பு, அரிவாள், நாட்டு வெடிகுண்டு, தூத்துக்குடி, நெல்லை பேச்சு வழக்கு என ஒரு தென் தமிழக சினிமாவுக்கான களத்தைக் கொண்டிருக்கிறது மன்னார் பொழுதுகள். அவரிடம் பேசியதில் இருந்து.

 

உங்களது வாழ்க்கை பின்புலம், குடும்ப சூழல், கல்வி, இலக்கிய பரிச்சயம் குறித்து சுருக்கமாகச் சொல்லுங்கள்?

 

எனது தாத்தா அவர் காலத்தில் ஒரு சாகசக்காரரைப் போல் வாழ்ந்தவர். வயலில் இடும் உரத்தைப் போல் வெடிமருந்தைக் கையாண்டவர். ஒரு கிராமத்திற்குரிய அசல்  மனிதர் என்றாலும் எனது தந்தை பூண்டி கலைக்கல்லூரியில் அறிவியல் படித்தவர். இவர்கள் இருவரது வாழ்க்கை அனுபவங்களே எனக்குள் இந்த கதைசொல்லும் மரபை புகுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன்.  அம்மாவிற்கு தமிழில் ஈடுபாடு அதிகம்.  அவராலேயே இந்த மொழி என்னைத் தொடர்ந்து வருகிறது எனலாம். நான் ஒரு பொறியாளராகவும், மூன்று மழலைகளுக்கு தாய் மாமனாகவும் இருக்கிறேன்.

முடிவாக சுருக்கிச் சொல்லவேண்டுமெனில் ஒரு பேரிலக்கியத்தைப் போல் எனது வாழ்க்கை ஏற்ற இறக்கமும், பன்முகத்தன்மையும் நிறைந்தது. சென்னையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எல்லோரையும் போல் பொழுதைக் கழிப்பதற்காகவே வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது லேண்ட்மார்க் புத்தகக் கடை செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால்  என்னுடைய நிதிநிலை பொன்னியின் செல்வன் மாதிரியான வெகுசன கதைப் புத்தகங்களை வேடிக்கை பார்க்க மட்டுமே அனுமதித்தது. பின்னர் சுந்தர  ராமசாமி, அசோகமித்திரன், தகழி  சிவசங்கரப்பிள்ளை போன்றோர் எழுதிய நவீன இலக்கிய நூல்களை வாங்கி வாசித்தேன். அதன் தொடர்ச்சியாக எனது ஊரில் இயங்கும் பொது நூலகத்திற்குள்  நுழைந்தேன். அதை இப்படிச் சொல்லலாம், எனக்கு வாசிப்பை அருளியமைக்காக எங்கள் ஊர் நூலகம் முன்பு நான் கிடா வெட்டிக் கும்பிடலாம்.

 

மன்னார் பொழுதுகள் நாவலுக்காக, அந்த கதைக்களம் சார்ந்து எம்மாதிரியான ஆய்வுகளை மேற்கொண்டீர்கள்?

 

ஒரு நாவலுக்கான ஆய்வு என்பது உண்மையில் உதிரித்தகவல்களை மட்டும் தான் வழங்கும். வெறும் தகவல்களைக் கொண்டு நாவல்களை எழுதிவிட முடியாது. மன்னார் பொழுதுகளின் உரு  எனக்குள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாய் வளர்ந்து வந்தது. அதுவே அதன் களத்தையும், அதற்குரிய கதைமாந்தர்களையும் தேர்ந்தெடுத்துக்கொண்டது. கதைக்களம் சார்ந்த தகவல்களை எனது நண்பர்கள் உதவியோடு  பெற்றுக்கொண்டேன். இதன் பின்னணியில் ஒரு பட்டாளமே  இருக்கிறது. அந்தப் பட்டியலை புத்தகத்தில் தந்திருக்கிறேன்.

 

கடல் பற்றி நாவலில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது, இதற்கு எவ்வாறு சிரத்தை எடுத்துக்கொண்டீர்கள்?

 

எனது நண்பர்களில் சிலர் கடலோடிகளாகவும், அந்தப் பின்புலத்திலிருந்து வந்தவர்களாகவும் இருப்பது எனக்கொரு நல்லூழ். நாவலை எழுதிக்கொண்டிருந்த காலம் முழுமைக்கும் அனுதினமும் அவர்களோடு  உரையாடினேன். பயணங்கள் மேற்கோண்டேன்.  எழுத்தாளர் ஜோ டி குருஸை இங்கு குறிப்பிட வேண்டும். நெய்தல் மீது ஆர்வம் எழ அவரும் ஒரு காரணம். மேலும் கடல் என்றைக்கும் எனக்கு பிரமிப்பூட்டுவதாகவே  இருக்கிறது. ஒரு சிறுவனைப் போல் கடலை அணுகியதால் தான் அது தாய்மனதோடு நாவலுக்குள் ஓடி நிறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

 

உங்களது முதல் நாவல் ஊடறுப்பு . அந்த நாவல் சார்ந்த அனுபவங்கள் எப்படி இருந்தன?

 

என்னுடைய முதல் நாவல் என்பது என்னளவில் ஒரு  முயற்சி தான். மாய யதார்த்த வகைமையில் வெவ்வேறு காலகட்டத்திற்குரிய மூன்று கதை உலகங்களை இணைத்து நகரும் நாவலது. எனது இரண்டு நூல்களையும் வெளியிட்டது ஜீவா படைப்பகம் தான். சாத்தனூர் என்ற ஊரின் கதை; ஒரு வனப்பரப்பை காப்பதற்கான ஆயுதவழிப் போராட்டம்; ஓர் இளைஞனின் தன்வரலாற்றுக் கதை ஆகியவை அதன் மையச் சரடுகள்.

மன்னார் பொழுதுகளை வெளியிட்டிருக்கும் எழுத்தாளர்.கார்த்திக் புகழேந்தி (ஜீவா படைப்பகம்) தான் அதையும் வெளியிட்டார். இந்த எளியவனை ஆனந்த விகடன் தொடங்கி தற்போது அந்திமழை வரையிலும் அழைத்து வந்திருப்பவர் அவரே. பிறகு இங்கு முக்கியமாக எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார், எழுத்தாளர் சரவணன் சந்திரன் ஆகிய இருவரையும் குறிப்பிட வேண்டும். எனது நாவல்கள் அதற்குரிய வாசகர் பரப்பை எட்டுவதற்கு அவர்கள்  பேருதவியாற்றியிருக்கிறார்கள். மேலும் இவ்விடத்தில் என்னை ஒரு நாவலாசிரியராக அங்கீகரித்த , நான் பெரிதும் மதிக்கின்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடனையும் வணங்கிக்கொள்கிறேன்.

 

தமிழில் உங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் அல்லது நெருக்கமான நாவல்கள் எவை?

 

மனதிற்கு நெருக்கமான நாவல்கள் நிறையவே உண்டு. புயலிலே ஒரு தோணி,கடலுக்கு அப்பால், கோபல்ல கிராமம், விஷ்ணுபுரம், ஏழாம் உலகம் , யாமம் என பட்டியல் நீளும். மொழிபெயர்ப்புகளில் ஜியாங் ரோங் எழுதிய ஓநாய் குலச்சின்னம், மிகெய்ல் சோலோகோவ் எழுதிய டான் நதி, ஓ.வி.விஜயன் எழுதிய கசாக்கின் இதிகாசம், தாராசங்கர் பந்த்யோபாத்யாய் எழுதிய ஆரோக்ய நிகேதனம், சினுவா அச்சிபே எழுதிய சிதைவுகள்.

 

தமிழ் இலக்கியச் சூழலில் உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களின் வருகையும், இருப்பும் எப்படி இருப்பதாக கருதுகிறீர்கள்? அவர்களுக்கான களம் எளிதானதா அல்லது கடினமாக இருக்கிறதா?

 

களம் எளிமையாகியிருக்கிறது. பதிப்புத்துறையில் நிலவிய இறுக்கங்கள் தளர்ந்திருக்கின்றன. கடந்தகாலத்தை ஒப்பிட்டுக் கூறினால் இன்றைய தமிழ் எழுத்துலகம் என்பது திறந்துகிடக்கும் பரந்தவெளி. தற்போது எவரும் எழுத வரலாம். இது ஆரோக்கியமான சூழல் தானே ?  இளைஞர்களோ அல்லது வயதானவர்களோ , உயிர்ப்புள்ள எழுத்து நிச்சயம் சென்றடையும். அதுவே எழுதுபவரின் இருப்பையும்  தீர்மானிக்கும். இது என்றைக்கும் மாறாத விதி. எழுத்தே அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் எனும்போது ஏன் அலைபாய வேண்டும்? இளம் எழுத்தாளர்கள் ஓநாயைப் போல் நிதானமாக இயங்கலாம்.

 

அடுத்து எழுத்து சார்ந்து என்னென்ன முயற்சி, திட்டங்களில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?

 

எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்து தனக்கு தவம் என்பார். சிலருக்கு அது சுய வதை. ஆனால் சர்வநிச்சயமாய் எழுத்தென்பது எனக்கு ஒரு வளரி. அடுத்ததாக அதை வரலாற்றின் அகண்ட இருட்டை நோக்கி எறியப்போகிறேன். ஆக்கத்தின்படி அதொரு பெரும் முயற்சியாக அமையும். எனவே அதற்குரிய நீண்ட காலத்தையும் அது எடுத்துக்கொள்ளும்.

 

- வசந்தன் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...