???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம் 0 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை: கமல் அறிவிப்பு 0 டெல்லி தீவிபத்து: உயிரிழப்பு 43 ஆக அதிகரிப்பு 0 உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி மக்கள் மன்றம் 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

''மாணவர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றது குற்றமா?'' - எழுத்தாளர் சா.திருவாசகம்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   05 , 2019  03:04:23 IST


Andhimazhai Image
கடந்த ஆண்டு வெளியான 'சல்வா ஜூடும்' என்கிற சிறுகதை தொகுப்பின் மூலம் அறிமுகமான எழுத்தாளர் சா.திருவாசகம். தருமபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் இவரது பிறந்த இடம். அப்பா சாமிக்கண்ணு மின்சார வாரிய ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா விஜயா, இரண்டு அண்ணன்கள். ஒரு தம்பி. இவரது துணைவி சத்யவாணி. மகன் அதீதனுக்கு நான்கு வயது. உயர் கல்விக்காக சென்னை வந்தவர் இங்கேயே தங்கிவிட்டார்.
 
 
வாசிப்பு குறித்தும் எழுத்திற்கு நீங்கள் வந்தடைந்த பின்னணி குறித்தும் சொல்லுங்கள்...
 
என் தாத்தா (அப்பாவின் அப்பா) வேடியப்பன் ஒரு பறையிசைக் கலைஞர். அன்றைக்கு சாவு மேளம் அடித்தவரைத்தான் இன்றைக்கு இப்போது இப்படி குறிப்பிடுகிறேன். அவருக்கு எழுத படிக்கத் தெரியும். அவர் மகாபாரதக் கதைகளைப் பாடி கூத்தாடுவதைக் கண்டிருக்கிறேன். என் தாத்தாவின் உறவினர்கள் பலர், காலம் காலமாக கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள். அவர்கள் கட்சியின் துண்டறிக்கைகள், சில புத்தகங்களை வைத்திருந்ததைக் கண்டிருக்கிறேன். எங்கள் தாய்மாமன்களும் ஓரளவு கதைப் புத்தகங்கள் பரிச்சயம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.
 
என் தாத்தாவிடமிருந்த வாசிக்கும் பழக்கம் என் அப்பாவிற்கும் இருக்கிறது. எங்களப்பா சிறு வயதில் பூந்தளிர், அம்புலிமாமா, அமர் சித்திரக் கதை என நிறைய சிறுவர் நூல்களை வாங்கி வருவார்.  அந்த இதழ்களைப் படிக்க சகோதரர்கள் எங்களுக்குள் பெரிய சண்டையே நடக்கும். என் சகோதர்கள் தொடாத இதழ்கள் என்றால் எங்கள் வீட்டிற்கு மாதாமாதம் வரும் செம்மலர், மகளிர் சிந்தனை உழவன் உரிமை உள்ளிட்ட சில இதழ்கள்தான். ஆகவே நான் அவற்றைப் படிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன். பிற்பாடு வளர வளர வாசிப்புச் சண்டையிலிருந்து என் சகோதரர்கள் விலகிக் கொண்டார்கள். வாசிப்பதற்குப் போட்டியே இல்லை என்பதால் நான் சுதந்திரமாக வாசித்தேன் என்பதை எந்த ஊழ்வினையில் சேர்ப்பதென தெரியவில்லை.
 
 
உங்களின் கல்விப் புலம் குறித்து…
 
 நான் சிறுவயதில் நன்றாகப் படிக்கும் முதல் வரிசை மாணவனாகத்தான் இருந்தேன். கதைப் புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தேன் இல்லையா. ஒரு கட்டத்தில் அவை என்னைப் பள்ளிப் பாடங்களில் இருந்து விலக்கி விட்டது.  சேலம், அரசுக் கலைக் கல்லூரியில் பிஏ தமிழ் இலக்கியம் பயின்றது ஒரு விபத்து. அதன் பிறகு எம்ஏ தமிழ் படிக்க சென்னை வந்தேன். சென்னைப் பல்கலைக் கழக மெரீனா வளாகத்தில் தமிழ் இலக்கியத் துறையில் சேர்ந்தேன்.  அது நாள் வரையில் அதிகமும் பொழுதுபோக்கு எழுத்துக்களையும் சில இடதுசாரி இதழ்களையும் மட்டுமே ஓரளவு தெரிந்து வைத்திருந்த எனக்கு முற்றிலும் புதிதான தலித் எழுத்துக்கள் அறிமுகம் ஆனது அந்த காலகட்டத்தில்தான். பேராசிரியர் மணிகண்டன் அவர்கள் என்னுடைய எழுத்தார்வத்தை ஊக்கப்படுத்தினார். அவ்வப்போது ஏதேனும் எழுதுவது நிறுத்துவது என்கிற கடும் குழப்ப மன நிலையிலேயே இருந்து வந்திருக்கிறேன். 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கங்களில் உருவான தலித்   எழுத்துக்களை விருப்பமுடன் வாசித்து வந்திருக்கிறேன். அதனால் உருவான தலித் சிந்தனாமுறையே என்னை நான் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட காரணமாக இருந்தது.
 
எனக்கு எம்ஃபில், பிஎச்டி படிப்பிற்கான வாய்ப்பைத் தர கடுமையாக மறுத்தார் அங்கிருந்த பேராசிரியர் ஒருவர். நானோ மாநிலக் கல்லூரியில் சேர்ந்து தீவிரமாகப் படித்து அந்த பட்டங்களைப் பெற்றேன். பிஎச்டி பட்டம் பெற காரணமான மாநிலக் கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன் அவர்களை என்றும் நினைவில் வைத்திருக்கிறேன். அதன் பிறகு சில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன்.
 
'பணியாற்றினேன்' என்றால் தற்போது இல்லையா?
 
அதுவொரு துயரக்கதை. அரசு கலைக்கல்லூரி ஒன்றில் மூன்றாண்டுகள் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றினேன். என்னுடைய நவீன இலக்கிய மற்றும் அரசியலுடன் கூடிய கற்பிக்கும் முறை அக்கல்லூரி மாணவர்களைப் பெரிதும் வசீகரித்தது என உறுதியாக நம்புகிறேன். அந்த மாணவர்களில் பலர் இன்றைக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். தெளிவான வாசிப்பும் அரசியல் பார்வையும் கொண்டவர்களாகவும் மாற்றம் கண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்போதும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போலவே இருக்கிறார்கள்.
 
பிறகு, அந்த அரசுக் கல்லூரியிலிருந்து பணிப்பறிப்பு நடந்த சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு  தனியார் பல்கலைக் கழகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.  சரியாக ஒரு வருடம் முடிந்த பிறகு அங்கிருந்தும் விரட்டப்பட்டேன். அதன் பிறகு வேறொரு தனியார் கல்லூரியில் சேர்ந்தேன். ஓரிரு ஆண்டுகளில் அங்கிருந்தும் துரத்தப்பட்டேன். அதன் பிறகு வேறெங்கும் வேலைக்குப் போக விருப்பமின்றி வெட்டியாகத்தான் இருக்கிறேன். அதாவது பணம் சம்பாதிக்கும் வேலைகள் ஏதுமின்றி. சமீப காலங்களில் ’சல்வா ஜூடும்’, ’கனவுகளுடன் மல்லுக்கட்டும் கலைஞன்’ என இரண்டு நூல்கள் வெளியிட்டதை நான் செய்த நல்ல வேலை என சொல்லிக் கொள்ள முடியுமாவெனத் தெரியவில்லை. 
 
 
கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குக் காரணம்? சாதிப் பாகுபாடா?
 
அப்படிச் சொல்ல முடியுமாவெனத் தெரியவில்லை. என்னுடன் பணியாற்றிய நிறைய தலித்கள் இப்போதும் அங்கு பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  நான் நிறையவே சுயமரியாதை உணர்வுள்ளவன். அண்ணல் அம்பேத்கரை, பெரியாரை  உள்வாங்கியவர்கள் வேறெப்படி இருக்க முடியும்? தலித்துகள் எல்லா இடங்களிலும் எல்லா வேலைகளிலும் பணியாற்றும் வாய்ப்புகள், சூழல்கள் உருவாகி வருகிறது.  ஆனால், அவர்கள் தலித் அடையாளத்துடன் தலித் சிந்தனையுடன் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. மற்றவர்களைக் காட்டிலும் ஒரு தலித்தின் சுயமரியாதையுணர்வு என்பது பலருக்கும் மிகுந்த மனத் தொந்தரவை அளிக்கிறது.
 
 
மாணவர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றேன் என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கல்வித் துறையில் சமகால அறிவு என்பதே கற்பிக்கப்படுவதில்லை. ஆனால், நானோ மாணவர்களுக்குப் புதிய சிந்தனா முறையிலான கல்வியை கற்பித்தேன் என்பதையெல்லாம் காரணம் காட்டி என்னை பணியிலிருந்து வெளியேற்றினார்கள். அதற்குக் அவர்கள் கண்டறிந்த காரணம் மிக அற்பமானது. வெளியில் சொல்ல அவர்களே வெட்கப்படக் கூடியது. ஆனால், மிக மோசமாக என்னை வெளியேற்றினார்கள்.  அப்போதைய என் மனம் மற்றும் குடும்ப நிலை எதையும் எதிர்த்துப் போராட இடம் தரவில்லை. தவிர, எனக்கும் கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்பட்டது.
 
அப்படியான என்னுடைய கல்லூரி பணிக்கால அனுபவங்கள்தான் ’சல்வா ஜூடும்’ தொகுப்பில் சில சிறுகதைகளாக இடம் பெற்றிருக்கின்றன.
 
தற்போது என்னதான் வேலை செய்கிறீர்கள்?
 
அதாவது சோத்துக்கு என்ன செய்கிறீர்கள் என்பதை வேறொரு கோணத்தில் கேட்கிறீர்கள். ரைமிங்காக சொல்ல வேண்டுமெனில் என் பொருளாதாரத்தின் ஆதாரம் என் தாரம். என் துணைவியாரின் சம்பாத்தியத்தில்தான் உட்கார்ந்து சாப்பிட்டு வருகிறேன். அந்த வகையில் அவரைக் கொடுமைப் படுத்துகிறேன்தான். கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, திரைப்படத் துறையில் பணியாற்றும் ஆர்வத்தில் சில நண்பர்களுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கும் வேலைகள் செய்தேன். சட்டென ஒரு கணத்தில்  அவர்கள் ’முன்னாள்’ நண்பர்களாகி விட்டனர். தலித்துகள் சுயமரியாதையுடனும் தனித்துவமான அறிவுடனும் இயங்குவதைப் பிடிக்காதவர்கள் சாதி இந்துக்கள் மட்டுமே அல்ல எனவும்கூட சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், அவற்றையெல்லாம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. நான் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது.
 
திரைப்படங்களை அதிகமாகப் பார்த்து, அவை குறித்து படித்து, சில திரைக்கதை வகுப்புகளும் எடுத்து வருகிறேன். ’கனவுடன் மல்லுக்கட்டும் கலைஞன்’ என்றொரு சினிமா விமர்சனக் கட்டுரை நூலும் எழுதி விட்டேன். அடுத்து, ஒரு திரைப்படம் எடுப்பதற்கான முயற்சிகளில் இருக்கிறேன். அதற்கான சூழல் வசமாகி வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு ஒரு திரைப்படம் இயக்கி விடுவேன்.

English Summary
Writer Thiruvasagam interview

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...