ரஷ்யாவில் ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் உலகக்கோப்பை கால்பந்துக் கொண்டாட்டத்துக்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். விளையாட்டு என்றாலே ஸ்டார்கள் இல்லாமலா? பீலே,மரடோனா, ரொனால்டோ, மெஸ்ஸி என்றெல்லாம் டீ ஷர்ட்டுகளில் போட்டுக்கொண்டு திரிவதை சும்மாவே பார்க்கிறோம். இந்த கோப்பையைக் கலக்கப்போகும் பத்து ஸ்டார்களைப் பார்ப்போமா?
மெஸ்ஸி.. லயோனல் மெஸ்ஸி, அர்ஜெண்டினா:
மெஸ்ஸி இப்போதைக்கு கால்பந்து ஆடுபவரில் உலகில் மிகப்புகழ்பெற்ற பெயர் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கடந்த 13 ஆண்டுகளாக மெஸ்ஸி வாங்காதா கப் இல்லை.. புகழ் இல்லை! ஆனால் அண்ணனின் கையில் இன்னும் இடம்பெறாமல் இருப்பது அர்ஜெண்டினாவுக்காக உலகக்கோப்பை! இவர் கலந்துகொண்ட போட்டிகளில் இரண்டுமுறை உலகக்கோப்பையில் கால் இறுதியிடன் அர்ஜெண்டினா வெளியேறியது. ஒருமுறை (2014) இறுதிப்போட்டியில் மண்ணைக் கவ்வியது! 31 வயதாகிவிட்ட மெஸ்ஸீக்கு இதுதான் கடைசி உலக்கோப்பையாக இருக்கும். எப்படியாவது வென்றுவிடத் துடியாய்த் துடிக்கிறார்! இம்முறை வெல்வாரா?
கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல்:
மெஸ்ஸி அளவுக்கே புகழ்பெற்றவர் ரொனால்டோ. மெஸ்ஸி கால்பந்தை உருட்டிச் செல்வதில் திறமையானவர் என்றால் கிறிஸ்டியானோ ரொனால்டோ பலசாலி. பிரமாதமாக காற்றில் எகிறிச் செல்லக்கூடியவர். 2016-ல் ஐரோப்பிய கோப்பையை வென்று தந்தார். ஆனால் உலகக்கோப்பையில் இதுவரை சோபிக்கவில்லை! 2009-ல் இருந்து ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடிவரும் இவர் இதுவரை ஆடிய ஆட்டங்களில் ஒரு ஆட்டத்துக்கு ஒரு கோலாவது சராசரியாகப் போட்டுவிடுவார்!
நெய்மார், பிரேசில்:
பிரேசில் அணியில் ஒவ்வொருவரும் ஒரு ஸ்டார்தான். எல்லார் பெயரையும் ரசிகர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். அங்கிருந்து ஒருவர் ரசிகர்களைக் கவர அவர் மிகத்திறமைசாலியாக இருக்கவேண்டும். நெய்மார் நிச்சயமாக திறமைசாலி. 2014 உலகக்கோப்பையில் காலிறுதியில் முதுகெலும்பு உடைந்து ஆடமுடியாமல் போனதால்தான் பிரேசில் கோப்பையை வெல்லமுடியாமல்போனதாக அந்த அணியின் ரசிகர்கள் கருதுகிறார்கள். கடந்த பிப்ரவரியில் மீண்டும் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் இப்போது மீண்டு வந்துள்ளார். அவருக்கு கொஞ்சம் மேட்ச் பிராக்டீஸ் தேவை. இருந்தாலும் சமாளிப்பார். நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்கிற சுமை ஒன்றுதான் கஷ்டம்!
முகமது சாலா, எகிப்து:
சிறந்த கால்பந்து வீரர்கள் ஐரோப்பா, தென்னமெரிக்கா போன்ற கண்டங்களில் இருந்துதான் வந்திருக்கிறார்கள். இதுவரை வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து எவரும் வந்ததில்லை. சாலா விதிவிலக்கு! லிவர்பூல் அணிக்கு ஆடியமுதல் சீசனிலேயே 32 கோல்கள் அடித்து சாதனை செய்தார். லிவர் பூல் அணி சாம்பியன்ஸ் லீக்கில் முன்னேற இவர்தான் காரணம். ஆனால் கடந்த மே 26 ரியல் மேட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் தோளில் அடிபட்டு விழுந்துவிட்டார்! எகிப்தே கண்ணீர் விட்டது! உலக ரசிகர்களும் கலங்கிப்போனார்கள். முதல்போட்டியில் உருகுவேயை எதிர்கொள்கிறது எகிப்து அன்றைய தினத்துக்குள் சாலா குணமாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாள் சாலாவின் பிறந்தநாளும் கூட.
டேவிட் டி ஜியா, ஸ்பெயின்:
அவ்வப்போது கோல்கீப்பர்கள் உலகக்கோப்பையில் கலக்குவார்கள். 2002-ல் ஜெர்மனியின் ஆலிவர் கான் தங்கப்பந்து வென்றதுபோல். ஸ்பெயினின் 27 வயதாகும் ஜியாவும் எதிர்பார்க்கப்படும் வீரர். ப்ரிமியர் லீக்கில் தங்க கையுறை விருதுபெற்றவர். இந்த நிமிடம் உலகின் சிறந்த கோல்கீப்பர் இவரே.
ஈடன் ஹசார்ட், பெல்ஜியம்:
இவரது ஆட்டத்திறமையை மெஸ்ஸீயுடன் ஒப்பிடத்தகுந்ததாகச் சொல்கிறார்கள். எதிரணியின் தடுப்பைக் கிழித்து முன்னேறிச் செல்வதில் மிகச்சிறந்தவர். பெல்ஜியத்தின் தேசிய அணியில் 17 வயதில் இடம்பிடித்தவர். 2018 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டிகளில் எட்டு ஆட்டங்களில் இறங்கி ஆறு கோல் போட்டிருக்கிறார்.
அண்டாயின் கீரிஸ்மேன், பிரான்ஸ்:
2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பையில் தங்க காலணி வென்ற தங்கமகன் கிரீஸ்மேன். ஆறு கோல் அடித்திருந்தார். அந்த கோப்பையின் சிறந்த வீரராகவும் அவர் தேர்வானார். அட்லெடிகோ மாட்ரிட் என்ற அணிக்காக ஆடும் கிரீஸ்மேன் இடதுகாலால் உதைப்பதில் வித்தைக்காரர். 2014-ல் ப்ரெஞ்சு அணியில் இடம்பெற்ற ஆடிய கிரீஸ்மேனுக்கு இது இரண்டாவது உலகக் கோப்பை!
ஜேம்ஸ் ரோட்ரிகஸ், கொலம்பியா:
கொலம்பியா என்றதும் செல்ப் கோல் போட்ட எஸ்கோபர்ஸ்தான் ஞாபகத்துக்கு வருவார், பாவம்! ஜேம்ஸ் ரோட்ரிகஸ், 2014 உலகக்கோப்பையில் கலக்கியவர். ஆறு கோல் அடித்து தங்கக் காலணி வென்றவர். 2014 உலக்கோப்பை காலிறுதியில் ப்ரேசில் அணிக்கு எதிராக கொலம்பியா ஒரு கோல்தான் அடிக்க முடிந்தது. அடித்தவர் இவர்தான்! பிரேசிலிடம் தோற்றாலும் இவரை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். ரோட்ரிகஸ் எப்போதும் உற்சாகமாக ஆடக்கூடியவர். ரியல்மாட்ரிட் கிளப் அணிக்கு ஆடிக்கொண்டிருப்பவர்.
தாமஸ் முல்லர், ஜெர்மனி:
கொஞ்சகாலமாக அதிகமான கோல்கள் அவர் அடிப்பதில்லை என்றாலும் முல்லர் பெயரைச் சொன்னால் அதிரும். 2014 உலகக்கோப்பையில் போர்ச்சுகலுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்தவர். அந்த உலகக்கோப்பையில் மொத்தம் 5 கோல்களைத் திணித்தவர். 2010 உலககோப்பையிலும் ஐந்து கோல்களை அடித்துள்ளார். இது வரை பத்துகோல்களை அடித்துள்ள முல்லர், இந்த கோப்பையிலும் ஐந்து அடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுபவர். உலகக்கோப்பை தகுதி ஆட்டங்களில் ஒன்பது கோல் அடித்துள்ளார்.
கேப்ரியல் ஜீசஸ், பிரேசில்:
மான்செஸ்டர் அணிக்கு ஆடும் 21 வயசுப் பையன் கேப்ரியல் ஜீசஸ் இந்த கோப்பையில் கலக்கப்போகும் இளம் வீரராக கண்ணுக்குப் படுகிறார். பிரேசிலில் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர்களில் இவரும் ஒருவர். இங்கிலாந்தில் மான்செஸ்டர் அணிக்கு ஆடியபோது 29 ஆட்டங்களில் 13 கோல்களை அடித்தார். ஊரில் அவருக்கு 112 அடி உயரத்தில் படம் வரைந்து வைத்திருக்கிறார்கள்! இவருக்கு இது முதல் கோப்பை!