![]() |
தமிழ் சினிமாவில் பெண்கள்! – சுஜாதா நாராயணன்Posted : புதன்கிழமை, நவம்பர் 03 , 2021 15:25:34 IST
![]()
சினிமாவில் பெண்களுடைய நிலை என்ன? இப்படி ஒரு தலைப்பை பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் வரும் பட்டிமன்றங்களில் கேட்கலாம். ஆனால்,அன்றாடம் நான் இயங்கிக் கொண்டிருக்கும் மீடியா மற்றும் சினிமா உலகில் இந்த கேள்விக்கு பதில் கிடைப்பது சிரமமாகவே இருக்கிறது. ஏன் இப்படி ஒரு நிலைமை என்று நான் பலமுறை யோசித்துப் பார்த்ததன் விளைவே இந்த சிறிய கட்டுரை பதிவு.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத்தான் நம் சமூகமும், அதைப் பிரதிபலிக்கின்ற ஓர் ஊடகமாக இருக்கும் சினிமாவும் பெண்களின் சம உரிமை விஷயத்தில் விரிவடைய ஆரம்பித்திருக்கிறது. சினிமாவைப்பொறுத்தவரை பிளாக் அண்ட் வொயிட் காலகட்டங்களை எடுத்துக்கொண்டால், பெண்கள் சினிமாவில் நடிக்க போனால், அதை வேறு மாதிரியாகத் தான் பார்த்தார்கள்- அதாவது குடும்ப பாரத்தை சுமக்கும் ஒரு கருவியாக மட்டுமே பெண்ணுடைய கலை ஆர்வமோ அல்லது வேலை செய்யும் திறனோ நிர்ணயிக்கப்பட்டது. வேறு துறைகளில்கூட, ஒரு ’’குடும்பப்பெண்’’ படித்துவிட்டு வேலைக்கு போவதையும் அப்படித்தான் இந்த சமூகம் பார்த்தது.
ஆடவரும், பாடவரும், நடிக்கவரும் என்றால் இன்றைக்கு ஒரு பெண் சினிமாவில் சேர்ந்து நடிகையாகலாம் என்பது அவ்வளவு விதிவிலக்காக தெரிவதில்லை. ஆனால் எழுபதுகளில் கூட சினிமாவில் வேலை செய்த பெண்கள் மீது ஒருதவறான பார்வைதான் இருந்து வந்தது.
எண்பதுகளில் தான் பெண்கள் ஓரளவுக்கு சுதந்திரமாக தன்வாழ்க்கை சார்ந்தமுடிவுகளை, தான் படித்துவிட்டு வேலைக்குப் போவதை, இயல்பான ஒரு கட்டமாக, ஒருவித பொருளாதார சுதந்திரத்துடன் செயல்படுத்தமுடிந்தது. இந்த மனப்பான்மை- மாற்றம் சமூகத்திலும் வரத்தொடங்கியது. சினிமாவிலும் அந்த சிந்தனை ஓரளவுக்கு வெளிப்பட்டது. அப்போதும் கூட ஒரு பெண் வேலைக்கும் போகவேண்டும், வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைதான் இருந்து வந்திருக்கிறது. ஓர் ஆணுக்கு சமூகம் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. இப்படித்தான் உடை அணிய வேண்டும், இந்த வேலைக்குத்தான் போக வேண்டும், இப்படித்தான் சாப்பிட வேண்டும், இவ்வளவுதான் சிரிக்க வேண்டும், இப்படி எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பெண் என்று வரும்போது சமூகம் அத்தனை கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. அதையே நம் மசாலா சினிமாவும் பிரதிபலித்துக் கொண்டு வந்திருக்கிறது.
எண்பதுகளில் நல்லவேளையாக பல புதிய இயக்குநர்கள் தங்கள் கதைகளில் வரும் பெண்களை வெறும் காட்சி பொம்மையாக காட்டாமல் அவர்களுக்கென்று ஒரு தனித்துவம் மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக்கினார்கள். எண்பதுகளுக்கு முன்பாக இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் படங்களில் படித்த கதாநாயகிகள் வலம் வந்தார்கள். அவரைத் தொடர்ந்து கே பாலசந்தர் அவர்களின் படங்களில் புரட்சிப் பெண்கள், போராளிப் பெண்கள் வலம் வந்தார்கள். பாரதிராஜாவின் கிராமங்களில் நகரத்தையும் தாண்டிய வேகம் மற்றும் விவேகத்துடன் பெண்கள் வலம் வந்தார்கள். ஆனால் எங்கேயோ( என் தலைமுறையினருக்கு என்றே பார்ப்போம்!) இந்த பெண்கள் எல்லோரும் ஒருவித மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களாகவே திகழ்ந்தார்கள். ஏழை, பணக்காரர்கள் என்ற நிலைப்பாட்டையும்தாண்டி ஒருபெண் அவளுக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கிக்கொள்ள இந்தச் சமூகம் ஒருபெரும் தடையாக இருந்து கொண்டிருக்கிறது. சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு பண்பட்ட சமூகம் என்பது ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்த வேண்டும். இந்த சமத்துவத்தை எண்பதுகளில் சொல்லப்பட்ட சினிமாவில் நான்எப்போது பார்த்தேன் என்று கேட்டால்... 1984 இல் வெளிவந்த மௌன ராகம் திரைப்படத்தைத் தான் நான் என் முதல் உதாரணமாக எடுத்துக் கொள்வேன். எந்த ஒரு அதிதீவிர நிலைப்பாட்டிற்கும் போகாமல் எதார்த்தமாக நல்லது கெட்டது என இரண்டும் கலந்த ஒரு உண்மை கலவையாகஅந்ததிரைப்படத்தில்வரும் திவ்யா( நடிகைரேவதி) தோன்றினாள்.
மணிரத்னம்தான் எனக்கும் என் தலைமுறைக்கு திரையில் பெண்ணியம் பேசிய முதல் இயக்குநர் (மௌன ராகம் வெளியானபோது எனக்கு பதினோரு வயது). பொதுவாகவே எண்பதுகளை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம். ஆனால் அங்கேயே நாம் இருந்துவிட்டால் காலம் கடந்து போக முடியாது. ’’நீங்கள் எங்களை தேவதைகளாக பூஜிக்கவும் வேண்டாம், உங்கள் அடிமைகளாக ஏறி மிதிக்கவும் வேண்டாம்- சரி சமமாக நடத்துங்கள் போதும்’’ என்கின்ற நிலைப்பாட்டின் ஆரம்பப் புள்ளியாக மௌன ராகத்தில் ரேவதியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.
நிற்க! அதற்கும் முன் வந்த சி.ருத்ரையாவின் ’’அவள்அப்படித்தான்(1978)’’ திரைப்படம் ஒரு விதிவிலக்கான கதை. அதில் வரும் ஸ்ரீபிரியாவின் கதாபாத்திரம் மிகவும் கடினமான ஒன்றும் கூட. ஆனால் அது சோகத்திலும் சுமையிலும் (உண்மையில் அதுதான் பெண்களுக்கு நடக்கின்றது என்றாலும்)முடியும். அதுஒரு ‘’மெயின்ஸ்ட்ரீம்’’ படமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் கமர்சியல் திரை பாணியிலும் ஒரு நேர்த்தியான,வெறும் பெயருக்கு புதுமையாக இல்லாமல், நிஜமாகவே நிறைகுறைகள் நிரம்பிய கதாநாயகி, கணவரிடம் விவாகரத்தை பரிசாக கேட்கும் கதாநாயகி ‘’உன் இதயத்தில்தான் இடம் வேண்டும்’’ எனக் கேட்கும் கணவனிடம் ‘’ ஏன்னா என் இதயம் எங்கிட்ட இல்ல’’ என்று கணவரிடமே தன் இறந்துபோன காதலனைப்பற்றி கூறும் கதாநாயகி, பின் படிப்படியாக கணவரின் நற் குணங்களுக்கு மனதை பறிகொடுக்கும் கதாநாயகி, அவளை முழுமையாக காதலித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு கணவன் என மணிரத்தினம் மௌன ராகத்தில் சாதித்துக் காட்டிய மாற்றங்கள் ஏராளம். திரைக்குப் பின்னாலும் பெண்களை உதவி இயக்குனர்களாக டைரக்ஷன் டீமில் ஏற்றுக்கொண்ட முதல் இயக்குனர் என்கின்ற பெருமையும் மணிரத்தினத்தையே சேரும். 1980 களில் இருந்து ஒரு ஜம்ப் கட் செய்து நம் 2021 க்கு வந்து விடுவோம். இன்று திரைத்துறையில் பல பெண்கள் பல துறைகளில் வேலை பார்க்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் இன்றைக்கு தெரிகிற இந்த மாற்றம் ஒரு ஓட்டப் பந்தயம் போல அல்லவா அமைந்திருக்க வேண்டும்? முதலில் ஒரு டெக்னிசியனை ஜெண்டர் சொல்லி அறிமுகப்படுத்துவதே தவறு. பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர் என்று ஏன் நாம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் அறிமுகம் செய்கிறோம்? பெண் பொறியாளர் பெண் மருத்துவர் என்று மற்றத் துறைகளில் வேலை செய்யும் பெண்களை நாம் இப்படி அடையாளப்படுத்துகிறோமா? சினிமாவில் மட்டும் நாம் ஏன் பெண் இயக்குனர் என்று தனியாக சுட்டிக்காட்டுகிறோம்? மார்ட்டின் ஸ்கார்ஸி படங்களுக்கு தெல்மா ஷூமேக்கர் தான் பல வருடங்கள் எடிட்டராக இருக்கிறார். அவரை யாரும் பெண் எடிட்டர்என்று கூறுவதில்லை. ஆனால் இங்கே, பெண்கள் சினிமாவில் முதலில் சேர்ந்ததும் பொதுவாக அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலை உடை அலங்காரம்! இல்லையென்றால் கதாநாயகிகளுக்கு டயலாக் சொல்லிக் கொடுப்பது....
எழுத்து இயக்கம் தவிர எடிட்டிங் சவுண்ட் மியூசிக் குறிப்பாக ஒளிப்பதிவில் மிகவும் குறைவான பெண்களே பணியாற்றுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் முதலில் பெண்களுக்கு அவர்களுக்கு பிடித்த துறையில் படிப்பும் பயிற்சியும் கொடுக்க வேண்டும்.
திறமைக்கும் தகுதிக்கும் வாய்ப்புகள் அமைந்தால், அதுவே சினிமாவில் வேலை பார்க்கும் பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும். சமூகத்தில் பெண்களுக்கான சம உரிமையும், விழிப்புணர்ச்சியும் மெதுவாகத்தான் வாய்ப்புகளாக மலர்ந்து வருகின்றது. அது கலைத்துறையான சினிமாவிலும்விரைவில் மலர வேண்டும் . அதுவும் தயாரிப்புத் துறையில் பெண்களை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்ய யாரும் அவ்வளவு சுலபத்தில் முன்வருவதில்லை. 10 கோடி ரூபாய் முதலீட்டில் என்னென்ன செய்யப் போகிறோம் என்று ஒரு திட்டத்தை பெண் தயாரிப்பாளராக நான் சொல்வதற்கும், கோட் சூட் அணிந்த ஒரு ஆண் சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்ற நான் கடந்து வந்த பாதை எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு பொதுவாகவே நிறைய திறமை உண்டு. உங்கள் வீட்டில் இருக்கும் பாட்டி அம்மா மற்றும் சகோதரியை பாருங்கள். பெரிய பல்கலைக்கழகங்கள் சொல்லித்தரும் நிர்வாகத்திறமையை உங்கள் வீட்டு பெண்ணிடம் நீங்கள் பார்க்கலாம். திறமைசாலிகளாகஇருந்தாலும் ஆண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பல இடங்களில் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. தயாரிப்பாளர்களாக பெண்களே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அப்படி இருப்பவர்களின் அப்பாவோ கணவரோ இல்லை அண்ணனோ சினிமாத்துறையில் ஏற்கனவே காலூன்றி நிலைத்து இருப்பார்கள். பின்புலம் இல்லாத பெண்களுக்கு வாய்ப்புகள் அவ்வளவு சுலபமாக அமைவதில்லை. கிரியேட்டிவிட்டி மட்டுமே சினிமா இல்லை.கிரியேடிவ் ஆன கதைக்கு நல்ல முதலீடும், அதை சரியாக செலவு செய்ய தயாரிப்பு நிர்வாகமும் தேவைப்படுகிறது. ஆண்கள் ஐந்து ஆண்டுகளில் பெறக்கூடிய வெற்றியை பெண்கள் பத்தாண்டுகள் கடினமாக உழைத்து பெற வேண்டியிருக்கிறது. படைப்புத்திறனுக்கு ஆண் பெண் என்கின்ற பேதம் கிடையாது. சமீபத்தில் சூரரைப்போற்று படத்தின் மூலம் இயக்குனர் சுதா கொங்கரா இதை நிரூபித்து இருக்கிறார். அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான சூர்யா எந்த ஒரு இடத்திலும் சுதாகொங்கராவை குறிப்பிடும்போது ‘’ இவர்தான் என் படத்தின் பெண் இயக்குனர்’’ என்று குறிப்பிடவில்லை. இது மாற்றத்திற்கான ஒரு நல்ல அறிகுறி. ஆணா பெண்ணா என்று பார்க்காமல் தகுதி மற்றும் திறமையை பார்த்து எல்லா இடங்களிலும் வாய்ப்பு அமைந்தால் சினிமாவிலும் பெண்களின்நிலைமை நாளாவட்டத்தில் மெருகேறும்.
1971 இல் வெளியான சவாலே சமாளி படத்தில் பணக்கார ஜெயலலிதாவை மணக்கும் ஏழை சிவாஜி ’’நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது தான் உண்மையான சோசலிசம். அதைத்தான் தலைவர்களும் சொல்லி இருக்கிறார்கள்’’ என்பார். அப்படி சமத்துவம் பேசிய படத்திலும்(படித்த பெண்ணாக இருந்தும்) அந்தப் பெண்ணை ’’திருத்தி நல்வழிப் படுத்தும்’’ ஆண் என்று தான் அந்தக்கதை(யும்) போகும்.’’ இது மஞ்சள் சாயம் பூசுன கயிறு….வெறும் கயிறு..’’,’’ எனக்கு இது பிடிக்கல… இந்தபொண்ணுப் பாக்கறது சந்தையில மாட்டைப்பார்க்கறமாதிரி இருக்கு ….’’ என்றுமௌன ராகத்தில் ரேவதி பேசுமிடத்தில்தான் இந்த மனப்பான்மை உடைகிறது. அப்படத்தில் அதே தாலியைக் காட்டி கணவரைக் காப்பாற்றும் இடத்தில் தெரிவது திவ்யாவின் acceptance – அவள் அந்த ஆணையும் அவன் கட்டிய தாலியையும் ஏற்றுக் கொண்டுவிட்டதின் அடையாளமே அந்தக் காட்சி. அது எண்பதுகளில் வெளியான படம். இரண்டாயிரத்தில் வெளிவந்த அலைபாயுதேவில் இதற்கு ஒரு கவுன்டர் – காட்சி வைத்திருப்பார் மணிரத்னம் (கூகுள் பண்ணிப் பாருங்க!). தமிழ் சினிமாவில் பாலசந்தர், பாரதிராஜா காட்டிய பெண்கள் உறுதியானவர்கள், அறிவானவர்கள், ஆனால் கஷ்டங்களை அதிகமாக சுமப்பவர்கள். இயல்பான, புத்திசாலித்தனத்துடன் சுதந்திரமாக செயல்படக்கூடிய பெண்களை மணிரத்னம் தொடர்ச்சியாக திரையில் கொண்டுவந்ததன் மூலம் பல இயக்குனர்கள் அந்த பாதையில் அவர்களின் பெண் கதாபாத்திரங்களை சித்தரிக்க ஆரம்பித்தார்கள். அதில் கௌதம் மேனன் படங்களில் வரும் பெண்கள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தன்னுடைய செயல்களுக்கு விளக்கமளிக்க தேவையில்லாதவர்கள். மின்னலே ரீனா, காக்க காக்க மாயா, வேட்டையாடு விளையாடு ஆராதனா, விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி எல்லாருமே தங்கள் தனித்தன்மையை இழக்காதவர்கள். பொதுவாகவே பெண்ணியம் பேசும் பெண்கள், ஆண்களை வெறுக்கும் அல்லிராணிகளாகத்தான் சமூகத்தில் சித்தரிக்கப்படுகிறார்கள், முக்கியமாக இணையதளங்களில்! ஆனால் சுய கௌரவம், சுய சிந்தனை மற்றும் சுயமரியாதை என்பது ஆண்கள், பெண்கள், மற்றும் LGBT வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என எல்லோருக்கும் பொதுவான ஒன்று. பெண்களுக்கு முக்கியத்துவமிக்க பாத்திரங்களையும் கதையம்சத்தையும் இறைவி (2016)திரைப்படத்தில் பார்த்தேன். “ஆண் நெடில், பெரிய வார்த்தை. பெண் குறில், சின்ன வார்த்தை. வார்தையில கூட பெண்கள் சிறுமைப் படுத்தப்படுகிறார்கள்’’ என்று சொல்லியடித்தார் கார்த்திக் சுப்புராஜ். சினிமாவில் திரைக்குப் பின்னால் இருக்கும் தொழில் நுட்ப விஷயங்களுக்கு படித்த பெண்கள் வர வேண்டும். அப்படிவரும் பெண்களுக்கு பெண் என்பதற்காக சலுகைகள் எதுவும் தேவையில்லை, நிராகரிப்பும் தேவையில்லை. ஆணுக்கு சமமாக பெண்களுக்கு வாய்ப்புகளும் அங்கீகாரமும் தான் தரவேண்டும்.
முன்தினம் ஃபேஸ்புக் கிளிப்பாக நான் பார்த்த ஒரு காட்சியை இங்கே விட்டுவிட்டு செல்கிறேன் - படம்: குலேபகாவலி(1955). அந்த படத்தில் வரும் காட்சி.பெண்கள் அனைவரும் அந்த அரசவையில் அந்த நாட்டு ராணி (ஹீரோயின்) முன் கேட்கும் கேள்விகளுக்கு ஹீரோ எம்ஜிஆர் பதிலளிப்பார். அதில் ஒரு கேள்வி: “ஆட்சி செய்யும் திறமை, ஆண்களுக்கு அதிகமா அல்லது பெண்களுக்கு அதிகமா? என்றுஅந்தப்பெண்கேட்பார். அதற்கு நாயகனின் பதில்,“ஆண் பெண் என்பது இங்கே முக்கியமில்லை, யாருக்கு ஆட்சி செய்யும் தகுதி இருக்கிறது, அதுதான் முக்கியம்’’ என்பார்.
அதேபோல் ஆண்,பெண் என்று பாகுபாடில்லாமல் தகுதியானவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பளிக்க அனைவரும் சேர்ந்து உறுதியேற்றால் சினிமாவில் திரைக்குப் பின்னும், திரைக்கு முன்னும் பல பெண்களின் சாதனைகளை நாம் தொடர்ந்து காணலாம்.
-சுஜாதா நாராயணன், தயாரிப்பாளர்.
(அந்திமழை நவம்பர் 21 இதழில் வெளியான கட்டுரை)
|
|