Posted : சனிக்கிழமை, டிசம்பர் 10 , 2022 21:00:33 IST
நீச்சல் வீரரான தனது மகன் மலக்குழிக்குள் இறக்கிவிடப்பட்டு கொல்லப்படுகிறார் என்பதை அறிந்த, அவரது தாய் ரோகிணி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க போராடும் கதையே விட்னஸ் திரைப்படம்.
மலக்குழி மரணம் பற்றிய ஒரு வரி தான் படத்தின் கதை என்றாலும், படம் பேசும் அரசியல் காத்திரமானது. அறிமுக இயக்குநர் தீபக் உள்ளதை உள்ளபடியே பேசியிருக்கிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோகிணி (இந்திராணி) தூய்மை பணியாளராகவே வாழ்ந்திருக்கிறார். கணவன் மற்றும் மகனை இழந்த சோகத்திலும், சம்பளம் கேட்டு போராடும் ஆவேசத்திலும் வித்தியாசமான நடிப்பை வழங்கியிருப்பார் ரோகிணி. துணிச்சலும் தைரியமும் கொண்ட பெண்ணாக வரும் ஷர்த்தா ஸ்ரீநாத் மிக யதார்த்தமாக நடித்து கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார்.
படத்தின் முக்கியமான கதாபாத்திர தேர்வாக சண்முகராஜாவையும், ஜி.செல்வாவையும் குறிப்பிடலாம். நீதிமன்றத்தில் சண்முகராஜா வாதாடும் காட்சிகள், போராட்டக் களத்தில் தோழராக நிற்கும் செல்வாவின் நடிப்பு படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. அதேபோல், அரசு அதிகாரியாக வரும் அழகம் பெருமாள் எப்போதும் போல் பட்டையக் கிளப்புகிறார். சுபத்ரா ராபர்ட், வினோத் சாகர் என அனைவரும் திரைக்கதைக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.
இயக்குநரே ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதில் உள்ள போதாமை காட்சி உருவாக்கத்தில் தெரிகிறது. செம்மஞ்சேரியிலிருந்து அடையாறுக்கு வந்து துப்புரவு பணி செய்வதில் உள்ள சிரமம், தூய்மை பணியாளர்களின் வாழ்வில் போராட்டம் போன்றவற்றை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம். திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு இருப்பது போல் தோன்றினாலும் அது பெரிய குறையாக தெரியவில்லை.
ரமேஷ் தமிழ்மணி பின்னணி ஓரளவு வலு சேர்த்தாலும், பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும் அளவுக்கு இல்லை.
“கட்டடம் அவங்களது, காசு அவங்களது, அவங்க உருவாக்கற வேஸ்ட் மட்டும் மத்தவங்களதா?” என ஷர்த்தா ஸ்ரீநாத் பேசும் வசனமும், “உன் கை நீளும்போது என் வாய் நீளக்கூடாதா?” என ரோகிணி பேசும் வசனம் போன்றவை கதாபாத்திரங்களுக்கு ஏற்றவை.
படத்தின் இறுதிக் காட்சி எதிர்பார்த்திராத ஒன்று. சாதியைக் கட்டிக் காப்பதில் அரசுக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்துகிறது.
‘விட்னஸ்’ திரைப்படம் எளிய மக்களின் நீதிக் கேட்கும் போராட்டத்தில் முக்கியமான ஓர் மைல் கல்.