???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை 0 ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப், மகள் மர்யம் நவாஸின் ஜாமின் மனு நிராகரிப்பு 0 எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை! 0 ஓரினச் சேர்க்கைக்கு எதிரான குற்றப்பிரிவு சட்டத்தை நீக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! 0 உலகக்கோப்பை சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பே 0 ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் 0 புலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 தென்மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 0 பினாமி வீடுகளில் வருமானவரி சோதனை: முதலமைச்சர் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 18 பேர் கைது 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது! 0 நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன: குலாம்நபி ஆசாத் 0 46% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்து பாஸ்போர்ட் பெறுகிறார்கள்: ஆய்வில் தகவல் 0 ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உழைக்கத் தயாராக இருந்தால் உலகம் உதவத் தயாராக இருக்கிறது : வி.கே.டி.பாலன்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   29 , 2017  06:04:19 IST


Andhimazhai Image

யாருடைய கணக்குப் பதிவேட்டிலும் பணம் தர வேண்டியவர்கள் பட்டியலில் உன்னுடைய பெயர் இருக்கக்கூடாது. அவர்கள் பணம் தரவேண்டியவர்கள் பட்டியலில் உன்னுடைய பெயர் இருக்க வேண்டும் என்று சிறு வயதில் அப்பா சொன்னதை இன்றும் தவறாமல் பின்பற்றுகிறேன். கடன் வாங்குவதால் ஏற்படும் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்திருக்கிறேன். இங்கு கடன் என்று சொல்வது தனியாரிடம் வாங்கும் கடன்களைப் பற்றி. தொழில் அபிவிருத்திக்காக வங்கிகளிடம் கடன் பெறுவது என்பது வேறு. நண்பர்களிடமோ , தண்டல்காரர்களிடமோ வாங்கும் கடன்கள் நம்மை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிடும்” என்கிறார் மதுரா டிராவல்ஸ் நிறுவனர் கலைமாமணி வி.கே.டி.பாலன்.

 

சினிமாக் கனவோடு பயணச்சீட்டின்றிசென்னைக்கு ரயிலேறிய பல லட்சக்கணக்கான தமிழர்களில் வி.கே.டி.பாலனும் ஒருவர். அப்படி வந்தவர்களில் சிலர் சினிமாவில் ஜெயித்திருக்கிறார்கள், சிலரின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கத் தகுதி கொண்டது. இரண்டாவது வகையைச் சேர்ந்த இவர் சினிமாவில் நுழைய முடியாமல் ஏதாவது செய்து சென்னையில் பிழைப்பை ஓட்டினால் போதும் என்று வறுமையை வெல்லப் பெரிதாக போராட வேண்டியிருந்தது. டிராவல்ஸ் தொழிலில் பாலன் நுழைந்ததே தனிக் கதைதான்.

 

எழும்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலா, பயண ஓட்டல் நிறுவனங்கள் என்று தென்பட்ட எல்லாரிடமும் வேலை கேட்டுப் பார்த்தார். கிடைக்கவில்லை. ஒரு நாள் இரவு பசி மயக்கத்தில்  தூங்கிக்கொண்டிருந்த பாலனை போலீஸ்காரர் சந்தேகக் கேஸில் கைது செய்ய அடித்து எழுப்பி ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறு கும்பலுடன் போய் நிற்கச் சொன்னார். ஒன்றும் புரியாமல் பக்கத்திலிருந்தவரிடம் பேச்சு கொடுத்தவருக்கு இவர்களோடு போனால் சிறையிலடைத்து விடுவார்கள் என்பது புரிந்தது. போலீஸ்காரர் வேறொருவரை எழுப்பிக் கொண்டிருந்த சமயத்தில் திசை தெரியாமல் ஓடத் தொடங்கினார். போலீஸ்காரர் துரத்த இன்னும் வேகமெடுத்தார்.

 

சிறிது நேரம் கழித்து திரும்பிப் பார்த்த போது போலீஸ்காரர் இல்லை. ஓடி ஓடிக் களைத்துப் போய் மனிதர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த ஒரு இடத்தைப் பார்த்து, அதுதான் பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்து அங்கேயே நின்றுவிட்டார். சோர்ந்து போய் அந்த இடத்தில் உட்கார்ந்தவர் கண்ணயர்ந்துத் தூங்கிவிட்டார்.

 

காலையில் விழித்துப் பார்த்தால் அவருக்கு முன்னால் 20 பேரும் பின்னால் 200 பேரும் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் அவரிடம் வந்து , ‘தம்பி இடம் தருவாயா, 2 ரூபாய் தருகிறேன்’ என்றார். இன்ப அதிர்ச்சிக்குள்ளான பாலன் பணத்தை வாங்கிக் கண்களில் ஓற்றிக் கொண்டார்.அது அவரது முதல் வருமானம். முதலீடும் கூட. அன்றைய தேதியில் அளவுச் சாப்பாடு இரண்டு ரூபாய். அதற்காகக் காலையில் பட்டினி கிடந்து மதியம் அளவுச் சாப்பாட்டில் அளவு இல்லாமல் கூட்டுக் காய்கறிகளை வாங்கிப் பசியாறியிருக்கிறார். அன்றைய உணவு போலச் சுவையான உணவை வாழ்வில் உண்டதே இல்லை என்னும் பாலனின் கூற்றைப் பசி அறிந்தவர்கள் உணர்வார்கள்.

 

அதன் பிறகு தான் அவருக்குத் தெரிந்தது அது அமெரிக்கத் தூதரகம் என்று. வருமானத்துக்கு இதுவே சிறந்த வேலை என நினைத்த பாலன் அங்கு வந்து செல்லும் பயண முகவர்களுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தி விமான டிக்கெட் டின் விலை, விசா, பயணத் தேவைக்கான விபரங்கள் அனைத்தையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். வரிசையில் நிற்கும் நேரத்தில் உடன் நிற்பவர்களுடன் பேச்சுக் கொடுத்து அவர்களுக்குப் பயணச் சீட்டு வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, விமான நிலையம்வரை அவர்களது பெட்டிப் படுக்கைகளைச் சுமந்து சென்று வழியனுப்புவது என்று தனது பணிகளை விரிவாக்கினார்.   இன்றைக்கு தமிழகத்தில் முதன் முறையாக சுற்றுலாத் துறையில் 365 நாட்களும், 24 மணி நேரமும் இயங்கும் சேவை -யை  நிறுவியிருக்கிறார். இந்த ஆண்டு (2017) மதுரா டிராவல்ஸ் 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. தன்னிடம் வேலை பார்த்தத் திறமையான ஊழியர்களைத் தக்க சமயத்தில் பெரிய பொறுப்புகளுக்கு இவரே அனுப்பி வைக்கிறார். ஏறக்குறைய 300 க்கும் அதிகமானோர் மதுரா டிராவல்சிலிருந்து உருவாகி, எம்பஸி, ஏர்லைன்ஸ் மேனேஜர் என்று பல நாடுகளில் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். இந்தியாவில் முதல் இணைய வானொலியான ‘தமிழ்க் குரல்’ -ஐ  உருவாக்கியதற்காகவும், வெளிநாடுகளில் அதிக அளவில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதற்காகவும் லிம்கா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றிருக்கிறார்.

 

அனுபவங்களில் கனிந்து பழுத்திருக்கும் இவரின் வாழ்கையில் மறக்க முடியாத சில தருணங்களைப் பற்றிக் கேட்டோம். “1982 ல் ஆபிஸ் பாயாக வேலை பார்த்து வந்தேன். அப்போது திருமலை பிள்ளை சாலையில் வ.வ.ராஜன் போட்டோ ஸ்டியோ இருக்கும். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ஆஸ்தான போட்டோகிராபர் அவர். எப்போதும் குடியில் மூழ்கிக்  கிடப்பார். அதனால் அவரிடம் அதிகம் யாரும் நெருங்க மாட்டார்கள். எனக்கு அவரைப் பிடிக்கும். பொதுவாக குடிகாரர்கள் சூது வாது செய்யத் தெரியாதவர்கள் என்பது என்னுடைய அபிப்ராயம். எனக்கு என்ன சம்பளம், சாப்பாட்டுக்கு என்ன செய்கிறேன் என்பதைப் பற்றியெல்லாம் விசாரிப்பார் அவர். ஒரு முறை ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் படப்பிடிப்பு. நீயும் வருகிறாயா என்று என்னிடம் கேட்டார். எனக்கும் ஆசை. ஆனால் என்னை உள்ளே விடுவார்களா என்று சந்தேகம். நீ என்னுடைய அஸிஸ்டெண்ட். உன்னை அனுமதித்துதான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டு அஸிஸ்டெண்ட் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லித்தரத் தொடங்கிவிட்டார். முனியாண்டி விலாஸ் படியையே அன்று ஏறியிராத நான் ஐந்து நட்சத்திர உணவு பற்றி பகல் கனவு காணத்  துவங்கிவிட்டேன். அவர் சொல்லிக் கொடுத்ததை பிசகாமல் செய்யக் கற்றுக்கொண்டு அன்று மாலை அவருடன் கிளம்பியாயிற்று. உள்ளே நுழைகையில் என்னை மட்டும் தடுத்து நிறுத்தி விட்டார் காவலாளி. ராஜன்,  நான் யார் தெரியுமா? என்னுடைய அஸிஸ்டெண்டை எப்படி உள்ளே விடமுடியாது என்று சொல்ல முடியும்? என்று எகிற ஆரம்பித்து விட்டார். காவலாளி என் காலில் அணிந்த ரப்பர் செருப்பைச் சுட்டிக்காண்பித்து இந்தச் செருப்புடன் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார். ராஜன் சார் வழக்கமாக ஷூ அணிபவர். என்னிடம் சொல்ல மறந்து விட்டார். பசி, பசியை மீறிய அவமானத்தோடு அன்று திரும்பி வந்தேன். காலச்சக்கரம் சுழன்றது. இருபது ஆண்டுகள் கழித்து 2002 ல் அதே ஓட்டலின் வாசலில் காரில் சென்று இறங்குகிறேன். ஜெனரல் மேனேஜரிலிருந்து செஃப் வரை அனைவரும் கையில் பூங்கொத்துடன் வாசலில் நின்று வரவேற்றார்கள். அன்றும் நான் ரப்பர் செருப்புதான் அணிந்திருந்தேன். ஓட்டல்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கும் அரசாங்கக் குழுவின் ஆறு பேரில் ஒருவனாக அன்று அங்கு நான் நின்றிருந்தேன். பழைய நினைவுகள் கண் முன்னே அலையடித்தது” என்றார்.

 

பாலனின் கடின உழைப்புக்கும் எடுத்துக் கொண்ட வேலையை எப்படியும் முடித்தே தீர வேண்டும் என்ற மன உறுதியையும் காட்ட ராமேஸ்வரம் சம்பவத்தைச் சொல்லலாம். அப்போதெல்லாம் ராமேஸ்வரத்திலிருந்து கடல் மார்க்கமாகக் கொழும்பு செல்லப் பயண முகவர்கள் விசாவைச் சென்னையிலிருந்து ரயிலில் சென்று அங்கு கொடுப்பார்கள். 1982 -இல் பாலன் விசாக்களை எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து ரயிலில் கிளம்புகிறார். ரயில் பாதையில் பழுதானதால் ராமேஸ்வரத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன்னதாகவே ரயில் நின்றுவிட்டது. சரி செய்ய சில மணி நேரங்கள் ஆகும் என்கிறார்கள். காத்திருந்தால் கப்பல் கிளம்பிவிடும். விசாவைச் சரியான நேரத்தில்கொடுக்க வேண்டும். ரயில் பாதை மட்டுமே ஒரே வழி. துணிந்து ரயில் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறார் பாலன். சிறிது தூரம் நடந்த பின்னர் தான் தெரிகிறது தண்டவாளப் பகுதி எண்ணெய் பிசுக்கேறி வழவழப்பாக இருக்கிறது. கரணம் தப்பினால் கடலில் விழ வேண்டியதுதான். பையை முதுகில் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தில் ஊர்ந்து செல்ல ஆரம்பிக்கிறார். ஆடை, உடலெங்கும் கருப்பு மையுடன் விசாவை ஒப்படைக்கும் போது ஏஜெண்ட் நெகிழ்ந்து போகிறார். அன்று விசாவைக் கொண்டு வந்து சேர்த்தது பாலன் மட்டுமே. வேறு எந்தப் பயண நிறுவனமும் நேரத்திற்கு வரவில்லை.

 

ஆனால் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்ற பதத்தைப் பாலன் ஏற்பதில்லை. ‘ யாருமே தனியாக உழைத்து உயர்வதில்லை. சமூக ஊடகங்களில் படித்த பொன்மொழி ஒன்றுண்டு.’ நீ உழைக்கத் தயாராக இருந்தால்  உனக்கு உதவப் பலர் இருப்பார்கள்’ என்பது அது. அதுபோல நான் உழைக்கத் தயாராக இருந்தேன், பலர் எனக்கு இந்த இடத்தை அடைய உதவியிருக்கிறார்கள்’ என்கிறார்.

 

இன்று தமிழகத்தில் திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என்று அத்தனை பிரபலங்களும் இவரின் வாடிக்கையாளர்கள். பாஸ்போர்ட்டை மறந்து விட்டு சென்றவர்கள், வெளிநாடுகளில் பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டவர்கள் என்று பல பிரபலங்களுடன் பல விதமான அனுபவங்கள் இவருக்குண்டு. அதில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவுடனான அனுபவம் மறக்க இயலாதது.

 

இவர் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் ‘மதுரா வெல்கம்’ என்ற ஆங்கிலச் சுற்றுலா காலாண்டிதழையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சுற்றுலாத் துறைக்கான விருது ஒன்றைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வருகிறார். சுற்றுலாத் தலங்களில், ஹோட்டல்களில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை விருதுகளை   நீங்கள் பார்க்கலாம். பாலனின்  சாமானிய மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியான ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ என்ற தூர்தர்ஷனின் மனித நேயத் தொடர் மிகப் பிரபலம்.

 

எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த பாலன் சுற்றுலாத் துறைக்கான படிப்பை உருவாக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்டவர். சுற்றுலாத்துறைக்கு இவரின் பங்கு அளப்பரியது.

 

வாழ்க்கையே போராட்டம் என்பவர்களுக்கு வாழ்ந்துதான் பார்ப்போம் வா என்று வழி காட்டுகிறார் பாலன்.

 

***

 

வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்சிகளுக்கு திரைப்பிரபலங்களை அனுப்புவது இவரின் வழக்கம். சில்க் ஸ்மிதா பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம். வெளி நாடுகளில் சில்க்கின் நிகழ்சிகளை விரும்பிக் கேட்கிறார்கள்.

 

சில்க்கின் துணைவர் டாக்டர் ராமகிருஷ்ணனிடம் நேரம் வாங்கிச் சில்க்கைச் சென்று சந்திக்கிறார். நிகழ்ச்சிக்காக எட்டாயிரம் ரூபாயை பேப்பரில் சுற்றி சில்க்கிடம் கொடுத்து எண்ணிப் பார்த்துக்கம்மா என்கிறார். ‘என்ன நைனா, நீ என்ன பொய்யா சொல்லப்போற’ என்று பணத்தை அப்படியே உள்ளே சென்று வைக்கிறார். தன்னைத் தகப்பன் ஸ்தானத்தில் வைத்ததில் இவருக்கு மன நிறைவு. சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நிகழ்ச்சி முடிந்து  சில்க் சென்னை திரும்பியவுடன் பாலனை அழைக்கிறார். சென்று சந்திக்கிறார் பாலன். சாப்பாட்டு மேசை மீது அமர்ந்து கொண்டே பாலனுக்கும், துணைவருக்கும் உணவு பரிமாறுகிறார் சில்க். அப்போது திருமண உதவிக்காக சில்க்கின் வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து நிற்கிறார். உள்ளே சென்ற  சில்க்  அவர் கையில்  தங்க நகைகளை அள்ளி வந்து அந்தப் பெண்ணிடம் தருகிறார். எத்தனை பவுன், என்னென்ன என்று சில்க்கிற்கும் தெரியாது. கையில் எடுக்க முடிந்த அளவிற்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். இந்தத் திகைப்பிலிருந்தே மீளாத பாலனுக்கு அடுத்த அதிர்ச்சி. சாப்பிட்டு முடித்தவுடன் முன்பு அவர் கொடுத்த பணக்கட்டை பேப்பர் கூட பிரிக்காமல் அப்படியே திருப்பிக் கொடுக்க எடுத்து வருகிறார். ‘இது கலை நிகழ்சிக்   காகக் கொடுத்த பணம்மா. உன்னுடையது’ என்று சொன்னாலும் கேட்கவில்லை, ‘இந்த மாதிரி வெளி நாட்டையெல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் நாம் போய் பார்க்க முடியாது. இந்த நிகழ்ச்சி மூலமா நான் பார்த்துட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அதே போதும் நைனா இந்தப் பணத்தை நீயே வச்சுக்க’ என்றிருக்கிறார். திரையில் கவர்ச்சிப் பதுமையாக வலம் வரும் இந்த பெண்ணுக்குள் இப்படி ஒரு குழந்தை மனதா என்று நெகிழ்ந்து கட்டாயப்படுத்தி பணத்தை வைத்துக் கொள்ளச்சொல்லித் திரும்பி வந்திருக்கிறார்.

 

- இரா.கௌதமன் -click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...