விராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று [ 11/12/2017] திருமணம் நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் முதன்முதலில் ஒரு ஷாம்பூ விளம்பரத்தில்தான் சந்தித்துக்கொண்டார்கள். அதன் பிறகு துளிர்த்த நட்பு பல சந்திப்புக்களுக்குப் பிறகு காதலாகியது. ஒரு வருடம் சென்றபின் மீண்டும் அவர்கள் ஜோடியாக பொது வெளியில் வந்தது ஒரு கால்பந்தாட்ட ஆட்டத்தை கண்டு ரசிப்பதற்காக. அவ்வளவுதான். அதன் பிறகு மீடியா அவர்களைக் கண் கொத்திப் பாம்பாக துரத்த ஆரம்பித்தது. உலகின் அதிக சம்பளம் வாங்கும் விராட் கோலியும், பாலிவுட்டின் பிஸியான, செல்வாக்கான ஒரு நடிகையும் காதலிப்பதில் வியப்பென்ன இருக்கிறது.
இந்தியாவில் ஒரு கிரிக்கெட் வீரரும் நடிகையும் காதலித்து திருமணம் செய்வது என்பது ஒன்றும் புதில்லைதான். டைகர் பட்டோடி - ஷர்மிளா தாகூர், விவியன் ரிச்சர்ட்ஸ்-நீனா குப்தா, முஹம்மது அசாருதீன் சங்கீதா பிஜ்லானி, மோஷின்கான் - ரீனாராய், யுவராஜ் சிங் - ஹசல் கீச், ஜாகீர்கான் - ஷகாரிகா கட்கே, ஹர்பஜன் சிங்- கீதா பஸ்ரா, என நீளும் பட்டியலில் தற்போது விராட் கோலி - அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்திருக்கிறார்கள். அவ்வளவுதான். மேலே சொன்ன பட்டியல் திருமணம் செய்து கொண்டவர்கள் மட்டும்தான். டேட்டிங் சகாக்கள், காதலித்தவர்கள், காதலித்து பின் பிரிந்தவர்கள் என்று பட்டியலிட்டால் அது பெரிதாக நீளும்.


இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தனக்கு ஓய்வு அளிக்குமாறு கிரிக்கெட் வாரியத்தை கோரியிருந்தார். கிரிக்கெட் வாரியமும் விராட் கோலிக்கு அனுமதி அளித்தது. அவர் தனது குடும்பத்தினருடன் இத்தாலி புறப்பட்டுச் சென்றார். அதே போல அனுஷ்கா சர்மாவும் அவரது குடும்பத்தினருடன் இத்தாலிக்கு புறப்பட்டுச் சென்றார். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக மீடியாவில் செய்திகள் பரவ ஆரம்பித்தன. அனுஷ்காவின் செய்தித்தொடர்பாளர் இதனை மறுத்தார். ஆனால் விராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று [ 11/12/2017] திருமணம் நடந்தது. இந்தத் திருமண நிகழ்ச்சியில், மிக நெருங்கிய குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். அனுஷ்கா விராட் திருமணம் பஞ்சாபி முறைப்படி நடந்தது.


குடும்ப உறவினர்கள் புடைசூழ நடைபெற்ற திருமணத்தை விராட்டும், அனுஷ்காவும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்கள். “இன்று நாம் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் பிணைக்கப்படுவதாக வாக்குறுதி அளித்திருந்தோம். உங்களுடன் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள நாங்கள் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் குடும்பம் மற்றும் ரசிகர்களின் நல்வாழ்த்துகளால் அழகான இந்த நாள் சிறப்பானது. எங்கள் பயணத்தில் முக்கியமான அங்கமாக அமைந்த பலருக்கும் நன்றி” என்று விராட் கோலி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
.jpg)

திருமணத்துக்குப் பிறகு அனுஷ்காவின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விராட் கோலியும் அனுஷ்காவும் இத்தாலியில் குடும்பத்தினர், நண்பர்கள் சூழ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். டெல்லியில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி உறவினர்களுக்காக ஒரு திருமண வரவேற்பும், டிசம்பர் 26ஆம் தேதி பாலிவுட் மற்றும் கிரிக்கெட் நண்பர்களுக்காக ஒரு திருமண் வரவேற்பும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். திருமண வரவேற்பு முடிந்ததும் இருவரும் தென் ஆப்பிரிக்கா செல்கிறார்கள். புது வருடத்தை கோலியுடன் செலவிடும் அனுஷ்கா ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா திரும்புகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.