அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   04 , 2020  12:50:41 IST


Andhimazhai Image
 
திருவொற்றியூரில் ஒரு மாட்டுசந்தை இருக்கும். ஆந்திராவில் இருந்து அங்கே வந்து தங்கி இருந்து மாடுகளை விற்பார்கள். மாடு வாங்க வருகிறவர்களுக்கு பால் கறந்து காண்பிப்பார்கள். சிறு குடில்களை அமைத்து அங்கேயே தங்கி இருப்பர். அதில் ஆறேழு மாடுகளுக்கு  தொடர்ந்து பேதி ஆகிக்கொண்டிருந்தது. எனக்கு அதைப் பார்க்க அழைப்பு வந்தது. போனேன். என்னமருந்து கொடுத்தும் பேதி ஆவது நிற்கவில்லை! சரி அதற்கு திரவங்கள் செலுத்துவோம் என ஊசியைப் போட்டேன். ரத்தம் சாக்கலேட் கலரில் வழிந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். சாக்கலேட் கலர் ரத்தம் நைட்ரேட் பாய்சனிங்கில்தான் வரும்.
 
மாடுகளுக்கு எங்கிருந்து தண்ணீர் கொடுக்கிறீர்கள் என்று கேட்டேன். அடிபைப்பைக் காட்டினார்கள். தண்ணீர் சிவப்பு நிறத்தில்  இ ருந்தது. சந்தையில் மாடுகள் கட்டிக் கட்டி, அவற்றில் சிறுநீர் இறங்கியதில் தண்ணீர் முழுக்க நைட்ரேட் கலந்துவிட்டிருக்கிறது. நைட்ரேட் பாய்சனிங்கில் ஐந்துவிதமான பாதிப்புகள் ஏற்படும். அதில் வயிற்றுப்போக்கு ஏற்படுவதும் ஒன்று.
ஒருவழியாக தண்ணீரை மாற்றிக் கொடுக்கச் சொல்லிவிட்டு, மருத்துவம் செய்தேன்.
 
 
இதேபோல் இன்னொரு பண்ணையிலும் எனக்கு அனுபவம் ஏற்பட்டது. மணப்பாக்கத்தில் அடையாற்றின் கரையில் ஒரு பெரிய மாட்டுப்பண்ணை இருந்தது. அதன் உரிமையாளர் பெரியபாளையம், செங்குன்றம், மணப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் மாடுகளை வைத்திருந்தார். நல்ல கவனம் செலுத்தி பண்ணையைக் கவனிப்பார்.
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு முறை சென்னையில் வெள்ளம் வந்தபோது இவரது பண்ணையும் மூழ்கிவிட்டது. நான்கைந்து எருமைகள் மட்டும் செத்துவிட்டன. மீதி மாடுகளை அவிழ்த்துவிட்டு காப்பாற்றினார்கள்.
இதற்கு அடுத்த ஆண்டுதான் சில மாடுகள் கருச்சிதைவுக்கு உள்ளாகின. என்னை அழைத்தார்கள். கருச்சிதைவு போன்ற விஷயங்களுக்கு அந்த துறை மருத்துவர்தான் போகவேண்டும் என ஒருவரை சிபாரிசு செய்து அனுப்பினேன். அவர் பார்த்துவிட்டு வந்தார். கன்றுகளை ஆய்வு செய்ததில் புருசெல்லோசிஸ் போன்ற நோய்களும் இல்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
மறுமுறை இப்படி கருச்சிதைவு வந்ததும் என்னை வந்துபார்த்துச் செல்லுமாறு வலியுறுத்தினார்கள். போய்ப்பார்த்துவிட்டு நரம்பில் திரவம் செலுத்த ஊசியைச் செலுத்தினேன்.
ரத்தம் அழகான சாக்கலேட் வண்ணத்தில் வழிந்தது.
நைட்ரேட் பாய்சனிங்! இங்கே கருச்சிதைவை ஏற்படுத்தி உள்ளது. அடையாற்றில் வெள்ளம் வந்தபோது இங்கே வந்த தண்ணீரால் நிலத்தடியில் நைட்ரேட் அதிகமாகி இருந்திருக்கவேண்டும்.
மேலும் சில பரிசோதனைகள் மூலம் இதை உறுதிப்படுத்திக்கொண்டு மெத்திலீன் ப்ளூ கொடுத்து சரி செய்தோம். நீர் ஆதாரத்தை மாற்றச் சொன்னோம். பிரச்னைகள் நின்று விட்டன.
 
 
 
நான் கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்த புதிதில் நடந்தது இது. திருத்துறைப்பூண்டி அருகே முன்னியூர் என்ற ஊரில் சுமார் 3000 மாடுகள் அடுத்தடுத்து இறந்துவிட்டன. ஏன் எப்படி என்று கண்டுபிடிக்கப்படவில்லை. பெரிய அளவில் சட்டமன்றத்தில் நம் துறைமீது விமர்சனம் வைக்கப்பட்டது. இது முன்னியூர் அவுட் ப்ரேக் என்றே அழைக்கப்பட்டது. இது எதனால் ஏற்பட்டிருக்கும் என்று தெரியாமலே பத்து ஆண்டுகள் போய்விட்டன. நான் அதற்குள் கல்லூரிக்கு சென்று முதுகலை முடித்து மீண்டும் தஞ்சை மாவட்டப்பணிக்கு வந்திருந்தேன்.
அப்போது கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் என்ற இடத்தில் இதேபோல் மாடுகள் மரணம் அடையத் தொடங்கின. நான் மயிலாடுதுறையில் பணியில் இருந்தேன். என்னுடையது வேறு பிராந்தியம் என்றாலும் நான் அங்கே அழைத்துச் செல்லப்பட்டேன்.
இந்த மரணங்களுக்குக் காரணம் தேட வந்தவர்கள் இது துள்ளுமாறி நோயின் குடல் தொடர்பான வடிவம் ( ஹெச்.எஸ்) என்று கூறி இருந்தனர். அதற்காக தடுப்பூசிகளும் போடப்பட்டு, ஆனாலும் இழப்புகள் குறையவில்லை. தஞ்சை மாவட்ட கலெக்டர் இதில் நேரடியாக கவனம் செலுத்தினார்.
ஆகவே அந்த கிராமத்துக்குப் போய்ச்சேர்ந்தோம். ஒரு பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களும் இன்னொரு பக்கம் பிராமணக் குடியிருப்புகளும் இருந்தன. நடுவில் குளம் இருந்தது. மாடுகளின் இழப்பு தாழ்த்தப்பட்ட பகுதியில்தான். பிராமண சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மாடுகூட சாகவில்லை.  ஹெச்.எஸ். என்றால் இப்படியா ஒரு பகுதியை விட்டு வைக்கும்?
 ஊரின் பாதிக்கப்படாத பகுதிக்குப் போய் மாடுகளுக்குப் போடும் வைக்கோலை இழுத்தேன். ஒரே பூஞ்சைகாளன்கள் இருந்தன. இது குறுவை வைக்கோல்! ஈரப்பதமாக இருந்ததால் பூஞ்சைகள் இருந்தன.
அதே சமயம் பாதிக்கப்படாத ஊர்ப்பகுதியில் வைக்கோலை ஆராய்ந்தேன். அது சம்பா வைக்கோல்! காய்ந்து பூஞ்சைகள் இல்லாமல் இருந்தது!
கையோடு ரூமன் பம்ப் எடுத்துச் சென்றிருந்தேன். பாதிக்கப்பட்ட மாடுகளின் ரூமன் திரவத்தை எடுத்து ஆய்வு செய்தேன். பூஞ்சைகள் மிதந்தன.
இறந்த மாடுகளுக்கு அப்ளோடாக்ஸிகோஸிஸ் பாதிப்பு என்று என் கருத்தைத் தெரிவித்தேன். இந்த வைக்கோலை மாற்றவேண்டும் என்று கூறினேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது! கலெக்டர் அந்த ஊரில் இருந்த குறுவை வைக்கோலை முழுவதுமாக வாங்கிக்க் கொளுத்தச் சொன்னார்! மக்களுக்கு அரசு செலவில் புதிய காய்ந்த வைக்கோல் வழங்கப்பட்டது! மாடுகளின் இறப்பும் நின்றது.
 
 
முன்னியூரிலும் இதுதான் நடந்திருக்கவேண்டும் என எனக்கு இந்த சம்பவத்துக்குப் பிறகு தோன்றியது.
 
 

அப்போதெல்லாம் கால்நடை மருந்தகங்களில் முரா எருமைக் காளைகள் இருக்கும். உள்ளூர் மாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் சினை மாடுகளுடன் சேர்த்து இனப்பெருக்கம் செய்வதற்காக. அதுபோல் கொரடாச்சேரியில் முரா காளை மாடு வைத்து பாதுகாத்து வந்தனர். அந்த காளை முரடு. ஒரு கால்நடை உதவியாளரை முட்டிக் கொன்றுவிட்டது. ஊர் மக்கள் அந்த கால்நடை மருந்தகத்தில் இறந்த ஊழியருக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் செய்தனர். எங்கள் மாவட்ட கால்நடை மருத்துவ அதிகாரி அந்த பக்கமே போகவில்லை! அந்த மாதமே  மாவட்ட கால்நடை மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. கொரடாச்சேரி மருத்துவர் அந்த காளையை ஒரத்தநாடு பண்ணைக்கு அனுப்பிவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் எங்கள் அதிகாரியோ சரியான முடிவை எடுக்கவில்லை. பொறுத்துப்பார்த்த நான், ‘அடுத்த வாரம் உங்கள் ஊருக்கு முதலமைச்சர் காமராஜர் வருகிறார். அன்றைக்குப் பார்த்து காளையை அவிழ்த்து சாலையில் விடுங்கள். காவல்துறையே அதைச் சுட்டு விடும்” என்றேன் ஆத்திரத்துடன். அதிகாரி என்னை முறைத்தார். அத்துடன் சரி. காமராஜர் வந்த அன்று ஊர்மக்களே அந்த காளை பற்றி புகார் கொடுத்தனர். அந்த காளை அரசுப்பண்ணைக்கு மாற்றப்பட்டது.

கொஞ்ச மாதங்கள் கழித்து அதே காளை பக்கத்தில் இன்னொரு ஊரான சாலியமங்கலத்தில் இருந்த கால்நடை மருந்தகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்த கால்நடை உதவியாளருக்கு இந்த காளையைப் பற்றித்தெரியும். அவர் எச்சரிக்கையாக இருக்க முனைந்தார். அதை ஒரு நாள் குளிப்பாட்ட ஆற்றுக்குக் கொண்டு சென்றபோது, காளை அவரைத் தாக்க முயன்றது. அவர் தப்பித்து ஆற்றுக்குள் குதித்து நீந்த ஆரம்பித்தார். காளை அவரைத் தாக்குவதற்காகக் கரையில் பின் தொடர்ந்தது. அதற்குள் மக்கள் கூடிவிட்டனர். யாருக்கும் காளையை நெருங்க அச்சம். நீந்திக்கொண்டிருந்த உதவியாளருக்கோ உயிராபத்து!

அந்த வழியாக தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஜீப்பில் வந்திருக்கிறார். அவர் கூட்டத்தைப் பார்த்ததும் இறங்கிச் சென்று நிலவரத்தைப் புரிந்துகொண்டார். ரிவால்வரை எடுத்து காளையைச் சுட்டுவிட்டார்!

அந்த ஆண்டு அந்த காவல்துறை அதிகாரிக்கு மனிதரின் உயிரைக் காப்பாற்றியதற்காக குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது.

நீ சொன்ன மாதிரியே ஆகிவிட்டதே.. என்று நெடுநாள் சக மருத்துவர்கள் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.

 

 

கால்நடை மருத்துவருக்கு நல்ல கூர்ந்து கவனிக்கும் திறன் வேண்டும். கல்லூரியில் பணிபுரிந்தபோது காலையில் எங்கள் வார்டுக்கு வந்தேன். ஒரு மாட்டை இழுத்துவந்து கட்டிக்கொண்டிருந்தனர். மாணவர்கள் அதற்கு சிகிச்சை அளிக்கத் தயரானார்கள். நான் வந்தவுடன், இது நாம் பார்க்கவேண்டிய நோய் அல்ல. ஓஜி வார்டுக்கு அனுப்புங்கள் என்று சொன்னேன். என்னுடைய சீனியர் மருத்துவர்,’ இது தெய்லேரியாஸிஸ் என்று ரிப்போர்ட் சொல்கிறது. இங்குதான் பார்க்கவேண்டும்’ என்று அடம் பிடிக்க அவருடன் மோதல் ஏற்பட்டது. விஷயம் எங்கள் துறைத்தலைவரிடம் போனது. அவர் என்னிடம் அதுதான் தெய்லேரியாசிஸ் என்கிறார்களே.. என்றார்.

’’இல்லை சார், அதற்கு கருப்பைத் தொற்று உள்ளது. அதற்கு ஓஜியில்தான் சிகிச்சை அளிக்கவேண்டும்’’

“ரிப்போர்ட் பொய் சொல்லுமா?”

நான் உடனே ஓர் ஊசியை எடுத்து அவர் கண்முன்னே என் கையில் குத்தி ரத்தம் எடுத்து ஒரு ஸ்லைடு தயாரித்து மாடு, வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட் என எழுதி, பரிசோதனைக்கு அனுப்பினேன். ரிசல்ட் வந்தது. தெய்லேரியா பாஸிட்டிவ்!

துறைத்தலைவர் வெறுத்தே போய்விட்டார்! ஆய்வகத்தில் விசாரித்தால் வெப்பநிலை அதிகமாக இருந்ததை வைத்து தெய்லேரியா என்று கொடுத்துள்ளனர். அவசரத்தில் பரிசோதனை ஒழுங்காக செய்யவில்லை!

அதற்குள் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. எங்கள் வார்டில் தெய்லேரியா என்று சிகிச்சை அளிக்கப்பட்டு பலன் இல்லை. அதை ஓஜி வார்டுக்கு அனுப்பினோம். ‘ஏன் இவ்வளவு லேட்டாக வருகிறீர்கள்? கருப்பை அதிகமாக பாதிக்கப்பட்டுவிட்டதே?” என்று அவர்கள் கடிந்துகொண்டனர்.

நான் எப்படி முன்னரே சொன்னேன்?

மாடு நின்றுகொண்டிருந்தபோது அதன் பின் பகுதியில் பழ ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. அவை எப்போதுமே இன்பெக்‌ஷன் ஆகி அழுகிய திசுக்களைச் சுற்றித்தான் மொய்க்கும். இதை வைத்துத்தான் கருப்பை அழற்சி ஏற்பட்டிருக்கவேண்டும் என்று ஊகித்திருந்தேன்.

(நிறைவு)

 

(1959-ல்  கால்நடை மருத்துவத்தில் இளங்கலை முடித்தபின் பூம்புகார் அருகே திருவெண்காட்டில் கால்நடை மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். சீர்காழி, கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, பாபநாசம் போன்ற இடங்கள், தூத்துக்குடி  ஆகிய இடங்களில் பணிபுரிந்தபின்னர் முதுகலைப் பட்டம் பயின்றார்.

 

 பின்னர் விரிவுரையாளராக கல்லூரியில் சேர்ந்தார். புவனேஸ்வரத்தில்   கால்நடைகளின் வயிறு மருத்துவப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்.  பிறகு மாட்டினங்களின் செரிமானக் கோளாறுகளில் பி.எச்டி செய்தார். அதில் அவர் மாடுகளின் இரைப்பை செயல்பாட்டை அளக்கும் கருவியை (Phono Rumenography) உருவாக்கினார். கல்லுரியிலேயே பேராசிரியர், பதிவாளர் ஆகிய பதவிகளுக்கு உயர்ந்த அவர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் உயர்ந்தார்.)

 

 

(1959-ல்  கால்நடை மருத்துவத்தில் இளங்கலை முடித்தபின் பூம்புகார் அருகே திருவெண்காட்டில் கால்நடை மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். சீர்காழி, கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, பாபநாசம் போன்ற இடங்கள், தூத்துக்குடி  ஆகிய இடங்களில் பணிபுரிந்தபின்னர் முதுகலைப் பட்டம் பயின்றார்.

 

 பின்னர் விரிவுரையாளராக கல்லூரியில் சேர்ந்தார். புவனேஸ்வரத்தில்   கால்நடைகளின் வயிறு மருத்துவப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்.  பிறகு மாட்டினங்களின் செரிமானக் கோளாறுகளில் பி.எச்டி செய்தார். அதில் அவர் மாடுகளின் இரைப்பை செயல்பாட்டை அளக்கும் கருவியை (Phono Rumenography) உருவாக்கினார். கல்லுரியிலேயே பேராசிரியர், பதிவாளர் ஆகிய பதவிகளுக்கு உயர்ந்த அவர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் உயர்ந்தார்.)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...