துணி மணி வாங்கவே பணம் இல்லாத ஒருவன், கேங்ஸ்டர் ஆவதே வெந்து தணிந்தது காடு திரைப்படம்.
திருநெல்வேலி மாவட்டம் கருவக்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த முத்துவீரன் (சிம்பு) பிஎஸ்சி படித்துவிட்டு குடும்ப சூழல் காரணமாக முள் காட்டில் வேலை செய்துகொண்டிருப்பார். முள்காடு திடீரென தீப்பற்றி எரிந்துவிட, அதன் உரிமையாளர் முத்துவீரனிடம் நஷ்ட ஈடு கேட்பார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்படும். மகனின் ஜாதகப்படி, யாரையாவது அவன் கொலை செய்வான் என்ற பயம் அம்மாவுக்கு இருப்பதால், அவனை வேலைக்கு அனுப்பவதற்கு அண்ணாச்சி ஒருவரிடம் உதவி கேட்டுச் செல்வார். அவரோ தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வார். அவர் கொடுத்த முகவரி வைத்து மும்பை செல்லும் முத்துவீரன் அங்குள்ள பரோட்டா கடையில் வேலைப் பார்க்கிறார்.
காலமும் சூழலும் அவனை துப்பாக்கியை துக்க வைத்து கேங்ஸ்டராக மாற்றுகிறது. முத்துவீரன் முத்து பாய் ஆவதே படத்தின் மீதிக் கதை.
படம் பொட்டல் காட்டில் துவங்குவதால், இது வழக்கமான சிம்பு படமாக இல்லாமல், குறிப்பிட்ட பகுதியின் வாழ்வியலைப் பேசும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், அடுத்த அரைமணி நேரத்தில் படத்தின் கதை மும்பைக்கு நகர்ந்துவிடுகிறது. படத்தின் மீது அந்த நம்பிக்கை ஏற்படுவதற்கு காரணம் படத்தின் கதை எழுத்தாளர் ஜெயமோகனுடையது என்பதால்.
படத்தின் கதைக்களத்தை மும்பைக்கு மாற்றிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஏற்கெனவே தமிழில் வந்துள்ள கேங்ஸ்டர் படங்கள் போல் அல்லாமல் புதுவிதமாக யோசித்து எடுத்திருக்கலாம்.
19 வயது கிராமத்துப் பையனாக வரும் சிம்புவின் நடிப்பு ஏனோ ஒட்டவில்லை. மும்பை சென்ற பிறகு வரும் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் சிம்பு. துணிக்கடையில் வேலைப் பார்க்கும் நாயகி சித்தி இத்னானி தனக்கு கொடுத்த பாத்திரத்தைக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். படத்தில் சரவணனாக நடித்திருக்கும் அப்புக்குட்டி யதார்த்தமான உடல்மொழியால் தனித்துத் தெரிகிறார். ராதிகா, பவா செல்லத்துரை உள்ளிட்டோரும் சிறந்த கதாபாத்திர தேர்வு.
பொட்டல் காட்டில் தொடங்கும் படத்தின் காட்சிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை ஒட்டவேயில்லை. ஆனால் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருப்பது பெரும் ஆறுதல்.
சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம் என்று சொல்லும் அளவிற்கு காட்சிகளை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார். பரோட்டா கடை காட்சிகள் கண் முன் நிற்கின்றன.
ஜெயமோகன் – கெளதம் மேனன் வசனங்களில் திருநெல்வேலி வட்டார வழக்கை அச்சு அசலாக கொண்டு வர முற்பட்டிருக்கின்றனர்.
ரவுடிகளை பார்த்து ’எங்கயாவது போய் பொழச்சுக்குங்கடா’ என சொல்லிவிட்டு சிம்பு கிளம்புவதுடன் படம் முடிந்துவிட்டது என எதிர்பார்த்தால், இரண்டாம் பாகத்திற்கான லீட் அதற்குப் பிறகு தான் கொடுக்கின்றனர்.
‘வெந்து தணிந்தது காடு... ஒரு கும்பிடைப் போட்டுட்டு ஓடு' என்பதாக இருக்கிறது.