அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வரவேற்பறைவாசிகள்! - கவிதா பாரதி கட்டுரை

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   08 , 2014  12:52:18 IST

 
 
 
 
இப்பிடி அநியாயமா ஜெயில்ல புடிச்சுப் போட்டுட்டாங்களே.. எப்ப விடப் போறாங்களோ..’- என்று வயதான பெண்மணியொருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.. அம்மாதான் வெளியே வந்துட்டாங்களே பாட்டி என்றேன்.. அவங்கள சொல்லலப்பா,  
நாதஸ்வரம் சீரியல்ல கோபியப்புடுச்சு ஜெயில்ல போட்டுட்டாங்களே, அதச்
சொன்னேன் என்றார்.. இது ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் இட்டிருந்த பதிவு..
இந்தளவுக்கு நெடுந்தொடர்கள் நம் வாழ்க்கையோடு கலந்திருக்கின்றன..  
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு பஸ் வரும் நேரத்தை வைத்துத் தான் மணி சொல்வது வழக்கம்.. இப்போது தொலைக்காட்சித் தொடர்கள்தாம் நேரம் காட்டும் கடிகாரங்கள்..
இரண்டாம் கட்ட திரைப்பட நடிகர்களைவிட, தொலைக்காட்சி நடிகர்கள் பிரபலமானவர்கள்.. அதிலும் அவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயராலேயே அறியப்படுகிறார்கள்..
எழுபது,எண்பதுகளில் பெண்களால் விரும்பி படிக்கப்பட்ட லட்சுமி, அனுராதா ரமணன், ரமணிச்சந்திரன் நாவல்களில் வரும் கதைமாந்தர்களே இன்றைய தொலைக்காட்சி கதாபாத்திரங்கள்..
1989-ல் சென்னை தொலைக்காட்சியில் வெளியான பிடிவாதம்(ஜுனூன்) என்னும் மொழி மாற்றுத்தொடருடன் தமிழ் நெடுஞ்தொடர் வரலாறு தொடங்கியது.. உதட்டசைவுக்கேற்ப வார்த்தைகளை மாற்றிப்பேசப்பட்ட வசனங்கள் அதன் வேடிக்கைக்காக எல்லாராலும் கவனிக்கப்பட்டது.. இது ஜுனூன் தமிழ் என்றும் அழைக்கப்பட்டது..
இதே வருடத்தில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரயில் சிநேகம், 
செல்வா இயக்கத்தில் அகிலனின்  சித்திரப்பாவை, ஏ.வி.எம் தயாரிப்பில் சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை ஆகிய வாராந்திரத் தொடர்களும் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றன..
இதே சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விழுதுகள் தமிழின் நேரடி நெடுந்தொடர்.. இதன் இயக்குநர் கோபி பீம்சிங்.. சன் தொலைக்காட்சியின் முதல் நெடுந்தொடர் சக்தி.. பி.வாசு 
இயக்க மேற்பார்வையில் பானுப்ரியா நடித்திருந்தார்...
சன் தொலைக்காட்சி ஒளிபரப்பிய மங்கை முதல் பகல் நெடுந்தொடர்..
விழுதுகளில் தொடங்கிய  நெடுந்தொடர்கள் இப்போது விழுதுவிட்டு வளர்ந்து நம் சராசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கின்றன.. 
இவற்றில் இப்போதும் நினைவில் நிற்கும் சில நெடுந்தொடர் கதாபாத்திரங்கள்பற்றிய சிறு குறிப்பு இதோ..
 
சாரதா, (சித்தி)  
ராதிகா நடிப்பில் சன் தொலைக்காட்சியில் வெளியானது சித்தி.. காவிரி ஆற்றில் அடித்துக் கொண்டு வரப்பட்ட சாரதா ஸ்ரீரங்கத்தில் கரையொதுங்குகிறாள்.. அங்குள்ள ஏழை பிராமணனுக்கு மனைவியாகவும், அவனுடைய தாயில்லாக்குழந்தைக்கு அம்மாவாகவும் நேர்கிறது..
அவளது கடந்த காலம் குறித்த எந்தக்கேள்விக்கும் அவள் பதில் 
சொல்ல மறுக்கிறாள்..அவள் குறித்த தவறான யூகங்களும் குற்றச்சாட்டுகளும் பரப்பப்படுகின்றன.. அவள் தன் கணவன்,குழந்தையோடு 
சென்னைக்குப்போகிறாள்.. அங்கு அவள் கஷ்டப்பட்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள்.. தொழிலதிபராகிறாள்.. இதற்கிடையில் அவளுக்கும், கணவனுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் வருகிறது.. எல்லாவற்றையும் அவள் வெற்றிகரமாக சமாளிக்கிறாள்.. அவளை எதிர்ப்பவர்கள் எல்லோரும் அவளைப்புரிந்து கொண்டாடுகிறார்கள்..
அவள் ஒரு கலெக்டராகவும். அவள் தங்கை போலீஸ் உயரதிகாரியாகவும் இருப்பதாகவும் ஃப்ளாஷ்பேக் கதை அமைந்திருக்கும்.. போலீஸ் அதிகாரியாகவும் ராதிகாவே நடித்திருப்பார்..
மிகைப்படுத்தி நடிக்க எல்லா வாய்ப்புகளுமிருந்தாலும் வசனங்கள் அதிகமில்லாமல் அழுத்தமான முகபாவங்களில் ராதிகாவின் நடிப்புத்திறமை முழு அளவில் வெளிப்பட்ட பாத்திரம் சாரதா..
ராதிகாவின் இயல்பான கம்பீரம் அவர் சாரதாவாக வாழ்ந்துகாட்ட உதவியது.  திரைப்படத்திலிருந்து தொலைக்காட்சிக்கு வரும் கதாநாயகிகளுக்கு இன்றுவரை சித்தி சாரதாதான் உச்சபட்ச இலக்காகும்..
 
அபி (கோலங்கள்)
ஏறத்தாழ ஐந்தாண்டுகாலம் தமிழ் தொலைக்காட்சி நேயர்கள் அபியோடு வாழ்ந்தனர்.. தமிழ் 
சாயலுக்கு அந்நியப்பட்ட முகம் என்றபோதும்  தேவயானிக்கு ஏற்கனவே இருந்த கண்ணியமான திரைப்பிம்பமும், அய்யோ பாவம் தோற்றமும், அளவான நடிப்பும் காணும் ஒவ்வொருவரையும் அபியை தங்கள் வீட்டுப்பெண்ணாக உணர வைத்தன..
 
அங்கயற்கண்ணி (அண்ணி)
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் கொண்ட அசல் கே.பாலச்சந்தர் நாயகி அங்கயற்கண்ணி.. கணவனின் தம்பிகள் அழைப்பது போலவே வீட்டிலுள்ளோர் அனைவரும் அவளை அண்ணி என்றழைக்குமளவுக்கு தன் அன்பாலும், ஆளுமையாலும் குடும்பத்தை திறம்பட வழிநடத்துபவள் அந்த அண்ணி.. 
நெடுந்தொடர் நாயகிகளை வடிவமைக்கும்போது கே.பாலச்சந்தரின் நாயகிகள் 
சாயல் இல்லாமல் செய்வது கடினம். பாலச்சந்தரே எழுதிய கதை என்பதால் கதாநாயகிக்குரிய அத்தனை அம்சங்களும் அண்ணியிடம் முழுமையாக இருந்தன.. மாளவிகா அண்ணியாகவே வாழ்ந்து காட்டியிருந்தார்.
அழுது புலம்பாமல் தியாகம் செய்வது அண்ணியின் இயல்பு.. தன் கணவனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பது அவரது தியாகத்தின் உச்சம்..
 
அஞ்சலி (காவ்யாஞ்சலி)
இந்தி,தமிழ்,மலையாளம்,தெலுங்கு என எல்லா மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்ற தொடர் காவ்யாஞ்சலி..
அக்காவும், தங்கையும் ஒரே வீட்டில் வாழ்க்கைப்படுகின்றனர்.. தங்கையே வில்லியாகிறாள்.. கணவன்கூட ஆறுதலாக இல்லாத சூழலில் அஞ்சலி போராடி, தியாகங்கள் பல புரிந்து அனைவரையும் அன்பால் வெற்றி கொள்கிறாள் என்பது கதைச்சுருக்கத்தின் சுருக்கம்..
அதுவரை பெரிய பிம்பங்கள் எதுவும் இல்லாத கன்யா, அஞ்சலி கதாபாத்திரத்துக்கு முழுமையாக பொருந்திப்போனார்..
பார்வையாளர்களின் கண்ணீர் நாயகியாக இருந்த அஞ்சலி கன்யா இன்று குறிப்பிடத்தக்க வில்லிகளில் ஒருவர் என்பது காலத்தின் நகை முரண்..
 
அர்ச்சனா (திருமதி செல்வம்)
தமிழ்த்திரை வரலாற்றில் மிக முக்கியமான படம் சேது.. அதன் நாயகி அபிதா.. ஆனால் சேது வைத் தொடர்ந்து அவருக்கு நல்ல படங்களோ, அங்கீகாரமோ கிடைக் கவில்லை..
திரையுலகம் தராத அங்கீகாரத்தை அவருக்கு சின்னத்திரை பெற்றுத்தந்தது.. வெகு இயல்பாக அவர் அர்ச்சனாவாக தன்னை மாற்றிக்கொண்டார் என்பதும் முக்கியக் காரணம்..
சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதாரண மெக்கானிக்குக்கு வாழ்க்கைப்பட்ட சாதாரணப்பெண்  அர்ச்சனா.. மாமியார் கணவனின் மாற்றாந்தாய்.. மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமைகளை 
சகித்துக்கொண்டு கணவனுக்கு துணையிருந்து அவனை முன்னேற்றுகிறாள்..
ஆனால் அதில் அவள் மகிழ்ச்சி கொள்ள முடியாதவாறு அவள் கணவன் சகல கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகிறான்.. மட்டுமின்றி அர்ச்சனாவை விட்டு வேறொரு பெண்ணோடு போய் குடும்பம் நடத்துகிறான்.. அவனை மீட்கும் போரில் வெற்றியடைகிறாள்.. எனினும் தன் தவறை உணர்ந்து திரும்பி வரும் கணவனை நிராகரித்து தனியாகவே வாழத்தொடங்குகிறாள்..
இதன் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் சில காலம் இதைப்பற்றியே 
பேசிக் கொண்டிருந்தனர் என்பது அர்ச்சனாவின் வெற்றி..
 
கோபி (மெட்டி ஒலி)
கதாநாயகிகளுக்கே உரித்தான நெடுந்தொடர்களில் கதாநாயகிகளைப் போலவே அல்லது அவர்களைவிட வரவேற்பைப்பெற்ற கதாபாத்திரம் கோபி..
ஒழுக்கமும்,பொறுமையும் ஒருங்கே அமையப்பெற்று தன் மனைவியின் குடும்பப்பாரத்தை தன் தோளில் தூக்கிச்சுமந்த கோபி ஒரு கணவன் எப்படி அமைய வேண்டும் என்பதன் ஆதர்சம்.. 
மெட்டி ஒலி தொடரின் கதாசிரியரும், இயக்குநருமான திருமுருகன் தனது இயல்பான நடிப்பால் கோபியை உயிருள்ள கதாபாத்திரமாக மாற்றியிருந்தார்.. கதாநாயகனுக்குரிய விசேஷ அலங்காரங்கள் இல்லாதது கோபியின் தனிச்சிறப்பாகும்.. நெடுந்தொடர்களில் இந்த இடத்தை இன்னொரு ஆண் கதாபாத்திரம் வெற்றி கொள்வது கடினமானது..
 
சரவணன், மீனாட்சி (சரவணன் மீனாட்சி)
உறவுச்சிக்கல், துன்பம், தியாகம் இவை எதுவுமில்லாத வெகு இயல்பான கதை சரவணன் மீனாட்சி..
மீனாட்சியை பெண் பார்க்கப்போகிறான் 
சரவணன்.. அவர்களின் திருமணம், திருமணத்திற்கு முன்னும்,பின்னுமான அவர்களின் காதல், ஊடல் இதுதான் கதை..
ஏறத்தாழ மலையாளத் திரைப்படங்களில் காணும் காட்சியமைப்புகள் 
சின்னத்திரைக்குப் புதிது.. தொடரில் சரவணன், மீனாட்சியாக நடித்த செந்திலும், ஸ்ரீஜாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டதே அவர்கள் அந்தந்த கதாபாத்திரமாக வாழ்ந்ததற்கான சாட்சி..
 
வீரப்பன் (சந்தன வீரப்பன்)
நெடுந்தொடர் நாயகிகளோடு ஒப்பிட முடியாததெனினும் வீரப்பனின் பாத்திரத்திற்கு ஒரு தனியிடமுண்டு.. ஒரு தரப்பில் கலகக்கார கதாநாயகனாகவும், மறுதரப்பில் வில்லனாகவும் சர்ச்சைகளுக்கிடமான ஒரு விளிம்புநிலை மனிதனின் கதையின் திரைச்சித்திரம் என்றவகையில் வீரப்பன் கதாபாத்திரம் அபூர்வமானது.. கராத்தே ராஜாவின் நடிப்பு வீரப்பனின் வாழ்க்கையோடும், காட்சி ஊடகங்களில் கண்ட அவரது உடல்மொழியோடும் வெகுவாக ஒத்துப்போனது..
மேற்காணும் கதாபாத்திரங்களல்லாது சென்னைத் தொலைக்காட்சியில் வெளியான பதிமூன்று வாரத்தொடர்கள், மின்பிம்பங்கள் தயாரித்த மைக்ரோ மேக்ரோ குறுந்தொடர்கள், பாலு மகேந்திராவின் கதை நேரம் முதலியவற்றில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் எளிதில் மறக்கவியலாதவை.. கதை நேரத்தில் வாராவாரம் வேறு வேறு கதாபாத்திரங்களில் நடித்த மௌனிகாவின் ஒப்பனையற்ற முகமும், எதார்த்த நடிப்பும், உடல்மொழியும் அபாரமானவை..
சக நடிகர்களின் நடிப்பும் ஒரு கதாபாத்திரத்தின் வெற்றிக்குக் காரணம் என்பதையும் மறந்துவிடலாகாது..
 
மற்றபடி கதாபாத்திரத்தை கற்பனை செய்யும் எழுத்தாளர்கள், வடிவமைக்கும் இயக்குநர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் ஆகியோரின் உழைப்பும் உட்கொண்டே ஒரு கதாபாத்திரம் காலத்தைத் தாண்டி நிற்கிறது.. அனைவருக்கும் என் வாழ்த்துகள்..
 
எனினும் ஒரு  வருத்தம்.. எங்கு,எப்போது,யாரால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது வெளிப்படையாக இல்லாத டி.ஆர்.பி என்னும் ரேட்டிங் ஒன்றையே குறியாகக்கொண்டு நிர்பந்தத்தில் சின்னத்திரை 
சிக்கியுள்ளது.
 
கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா போன்றவர்கள் காட்டிய வழியில் மெலோ டிராமா தவிர்த்த நுண்ணுணர்வுகளைச் சொல்லும் இலக்கியத்தரமான படைப்புகளையும், நல்ல எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள் இல்லத்திரையில் வருவதற்கான தளத்தை ஏற்படுத்தித்தர சேனல்கள் முன்வர வேண்டும்.
 
மற்றபடி நெடுந்தொடர்களின் சமூகப்பங்களிப்பு குறித்த மாற்றுக்கருத்துகள் தனிக்கட்டுரையாக விவாதிக்கப்பட வேண்டியவை.. எனினும் நம் முகம், வாழ்க்கைமுறை,  சிறிதுமில்லாத, நம்மைக்காட்டிலும் தொழில்நுட்ப, பொருளாதார பலங்கொண்ட இந்தி மொழிமாற்றுத் தொடர்களின் ஆக்கிரமிப்பால் நம் சின்னத்திரை விக்கித்து நிற்கிறது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 
 
(கவிதாபாரதி, தலைவர், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு)
 
-அந்திமழை நவம்பர் 2014 இதழில் வெளியான கட்டுரை


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...