செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
பெண்களை துரத்தி துரத்தி காதலிக்கும் ‘லட்சிய’ இளைஞனின் கதையே ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ஒன் லைன்.
பெண்களை துரத்தி துரத்தி காதலிக்கும் ‘லட்சிய’ இளைஞனின் கதையே ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ஒன் லைன். கோயம்புத்தூரில் ஸ்கூல் வாத்தியாராக இருக்கும் கோபால் (கே.எஸ்.ரவிக்குமார்) மகன் கார்த்தி (ஜீவா). யூடியூப் தொடங்குவதாக சொல்லிக் கொண்டு சுற்றித் திரியும் அவருக்கு, முழுநேர வேலையே பெண்களின் பின்னால் அலைவது தான். அவர் வீடு இருக்கும் தெருவில் கேரள பெண் ஒருவர் குடியேற, அவரை துரத்தி துரத்தி காதலிக்கத் தொடங்குகிறார். இறுதியில் அவரை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. பார்த்து சலித்துப் போன கதையையே கொஞ்சம் காமெடி மசாலா தடவி எடுத்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ராஜன். பெண்களை பின் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தும் செயல்கள் கண்டிக்கத்தக்கது என பலரும் உணர தொடங்கியுள்ள நிலையில், அதை கவனத்தில் கொள்ளாமல் இயக்கப்பட்டிருக்கிறது ‘வரலாறு முக்கியம்’திரைப்படம். படத்தின் தலைப்பிற்கும் கதைக்கும் என்ன தொடர்பு என்றே தெரியவில்லை. ‘சிவா மனசுல சக்தி’போன்று ஜாலியான திரைப்படத்தைக் கொடுக்க நினைத்திருக்கிறார் ஜீவா. தனது வழக்கமான நடிப்பை குறையில்லாமல் வழங்கியிருக்கிறார். அதேபோல், படத்தில் ஆபாச காமெடிகளுக்கும் பஞ்சமில்லை. இதற்காகவே விடிவி கணேஷ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மொட்டை ராஜேந்திரன் கதாபாத்திரம் எதற்கு என்று தான் தெரியவில்லை. கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் இருவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். நாயகிகள் காஷ்மீரா, பிரக்யா இருவரும் அழகு பொம்மைகளாக வந்து செல்கின்றனர். ஜீவா, விடிவி கணேஷ் மட்டுமே திரைப்படம் முழுவதும் வருகின்றனர். மற்ற கதாபாத்திரங்களுக்கு போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பெண்களை வற்புறுத்தி காதலிக்க வைக்க கூடாது என பஞ்ச் பேசும் நாயகன், படம் முழுவதும் அதையே செய்வதை என்னவென்று சொல்வது! ‘பசங்கள ஏமாத்தாம ஒருத்தன லவ் பண்ணு’, ‘கொழுந்தியா குரங்கு மாதிரி இருந்தாலும் நம்ம பசங்க விடமாட்டாங்க’ போன்ற வசனங்களை தவிர்த்திருக்கலாம். குடும்ப செண்டிமெண்ட், சண்டைக் காட்சிகள், பாடல்கள் போதிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஷான் ரஹ்மான் பின்னணி இசை படத்திற்கு சில காட்சிகள் ஊக்கம் கொடுத்திருக்கிறது. சக்தி சரவணன் ஒளிப்பதிவிற்கு பெரிய அளவில் வேலையில்லை. புதுமையற்ற திரைக்கதை, ஆபாசம் நிறைந்த காமெடிகளால் ‘வரலாறு முக்கியம்’ திரைப்படத்துக்கு வரலாற்றில் இடமே இருக்காது.