அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கலப்பும் கௌரவமும் - வன்னி அரசு கட்டுரை

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   20 , 2017  18:05:37 IST


Andhimazhai Image
 
அவர் பெயர் பச்சமால் தேவர். வாசக் கதவு தட்டும் உயரம். 23ம் புலிகேசி மீசை இவரைப் பார்த்துதான் வடிவேலுக்கு வைத்தார்களோ என்கிற வகையில் மீசை இருக்கும். அதிகம் யாரிடமும் பேசமாட்டார். அதிகாலை 6மணிக்கு நடக்க ஆரம்பிப்பவர் 8 மணிவரை நடந்து கொண்டே இருப்பார். எதிரே வருபவர்கள் வணக்கம் போட்டால் சிறுபுன்னகையோடு கடந்து போவார். அவ்வளவு இருக்கமாக இருப்பார். காலை உணவு முடிந்தவுடன் தியானம் அப்புறம் மாலை 5 மணிவரை நூலகம்தான். இடையிடையே' மனு 'வந்தால் மட்டும் போய் வருவார்.
 
 
மதுரை மத்திய சிறையில் தான் பச்சமால் தேவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. 1999ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆண்டு வரை நான் ஆயுள் சிறைவாசியாக வசித்தபோது பல்வேறுபட்ட மனிதர்களை சந்தித்தேன். அதில் முக்கியமானவர் இந்த பச்சமால். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சார்ந்தவர். மனித சகவாசம் மறுதலித்து கதைப்புத்தகங்களோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார். சிறையில் அனேகபேரின் கதையை கேட்கும்போது கவலைகளும் கோபமும் தான் தழுவிக்கொள்ளும். அப்படி வழக்குகள் ஏறக்குறைய போலீசால் புனையப்பட்டவை தான். பச்சமால் தேவரின் கதை மட்டும் நமக்கு சொல்லப்படவே இல்லை. வயதோ 70ஐ தொட்டிருப்பார். வெறும் உடம்போடு உடல் முழுக்க திருநீறு பூசியபடி நடமாடுவார். எதற்கும் எவருக்கும் மசியமாட்டார். ஆனால் யாரிடமாவது புத்தகங்கள் அதிலும் வரலாற்று புதினங்கள் இருந்தால் அவரிடம் வலியபோய் நட்பு பாராட்டுவார். அப்படித்தான் என்னிடமும் நட்பு பாராட்டினார்.
 
 
இவருக்காகவே பல நாவல்களை வாங்கி வரச்செய்தேன். தினமும் மாலை 5மணிக்கு' லாக்கப் 'ஆகும் முன்பு என்னைச் சந்தித்து உரையாடிவிட்டு ஏதாவது நாவலை வாங்கிவிட்டுப்போவார். ஒரு நாள் மனுவுக்கு போய்விட்டு வந்தவர் அப்படியே பிள்ளையார் கோவில் அரச மரத்தடியில் ஏதோ யோசனையாய் உட்கார்ந்திருந்தார். "எதற்காக இப்படி இரட்டை ஆயுள் தண்டனையை கழிக்கிறீங்க? என்ன தப்பு செஞ்சிட்டு வந்தீங்க"என்று கேட்டபோது அவரது மவுனம் கலைந்தது. "ரொம்ப நாளா உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சி தம்பின்னு "பேசினார்.
 
 
உசிலம்பட்டியில் சாதிசனங்களோடு 'கவுரவமாக'வாழ்ந்துவந்த பச்சமால் தேவருக்கு மூன்றுபெண்பிள்ளைகள். மூத்த பிள்ளையை சொந்த தாய்மாமனுக்கே தடபுடலாக கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார். இரண்டாவது மகளுக்கும் சொந்த சாதிக்குள் மாப்பிள்ளை பார்ததுக்கொண்டிருக்கும் சூழலில், ஒரு நாள் திடீரென இரண்டாவது மகள் யாரையோ கூட்டிட்டு ஓடிபோய்ட்டா என்கிற இடி விழுகிற செய்தி அவரை நிலை குலையச் செய்தது. பக்கத்து ஊரு பையன் தான். ஆனால் தலித் பையன். இது தான் பச்சமால் தேவரை கொதிக்க வைத்தது. இது நாள் வரை கட்டிக்காத்த கவுரவத்தை கீழ்சாதி பையன் காவு வாங்கிட்டு போய்ட்டானே என்று புலம்ப ஆரம்பித்தார். பல ஊர்களுக்கு ஆட்களை அனுப்பி தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அப்படியே மனம் நலம் பாதிக்கப்பட்டவர் போல ஊர் மந்தையில் உள்ள சாவடியில் கிடந்தார். சாதி சனங்கள் தன்னை மதிக்கவில்லையோ என்று புலம்பினார். கல்யாண பத்திரிக்கை கொடுக்க வருபவர்கள், தங்கள் வீட்டை புறக்கணித்துவிட்டு மற்ற வீடுகளுக்கு கொடுப்பதை போல உணர ஆரம்பித்தார். சாதி சனத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக புலம்பினார். காலங்கள் ஓடின. திடீரென தன் மகள் இருக்கும் இடம் தெரிந்தது. ஓடிப்போய் பார்த்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.
 
 
தான் உயிருக்குயிராக வளர்த்த செல்லமகள் இன்னொரு உயிரை சுமந்து நிற்பதைக்கண்டு கட்டிப்பிடித்து அழுதார். மருமகனின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. வளைகாப்பு வைக்கவேண்டும். நடந்தது நடந்துவிட்டது. இதையாவது எனக்கு செய்ய ஆசையம்மா என்று அழுக ஆரம்பித்தார். தந்தையின் கண்ணீர் அவர் வழி நடக்கச்செய்தது. எல்லோரும் பேசி, மருமகனோடும் மகளோடும் உசிலம்பட்டிக்கு திரும்பிக்கொண்டிருந்தார் பச்சமால். அன்று ஊரே இதைப்பற்றிதான் அசைபோட்டுக்கொண்டிருந்தது. சொந்தபந்தங்கள் வந்து 'எழவு'விசாரிப்பது போல விசாரித்து திரும்பினார்கள். மருமகனும் அவரோடு வந்த சொந்தங்களும் நிறைமாத மகளை விட்டுவிட்டு, அன்றைக்கே ஊர் திரும்ப இருப்பதால் மகளுக்கு செய்ய வேண்டிய சீர் அத்தனையும் செய்தார். மஞ்சள் தடவி, வளையல்களை கை நிறைய போட்டு, புது புடவ அது இது என்று புள்ளத்தாச்சி பொண்ணை அழகு பார்த்தார் பச்சமால். மாலை 7மணிக்கெல்லாம் அவரவர் வீடு திரும்பினார்கள். மருமகனோ மாமனாரிடமும் மனைவியிடமும் சொல்லிவிட்டு ஊர் திரும்பினார்.
இரவு 11மணியாகிவிட்டது. ஊரே தூக்கத்திற்குள் முடங்கி கிடந்தது. மார்கழி குளிர்பொழுது, நாய்கள் ஆங்காங்கே ஓலமிட்டுக்கொண்டிருந்தன. பச்சமால் தேவர் மட்டும் தூங்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். ஆசை ஆசையாய் வளர்த்த மகளை மீண்டும் மீண்டும் பார்த்து அழ ஆரம்பித்தார்.
 
 
அப்பா அழுவதைப்பார்த்து திடுக்கிட்டு எழுந்த மகள், கண்ணீரை துடைத்துக் கொண்டே, "ஏம்பா "என்று கட்டிப்பிடித்தார். 
 
"போயும் போயும் ஒரு பள்ளப்பயலா  உனக்கு கிடைச்சாம்மா, நம்ம சாதி கவுரத்தையே கெடுத்திட்டியே"என்று சொல்லிக்கொண்டே மூலையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் 'டின்னை 'அப்படியே மகள் மீது கவுத்தினார். அலறியபடியே அப்பா அப்பா என்றாள். தீப்பட்டியை பற்ற வைக்க ஓலமிட்டபடி எரிந்து சாம்பலானாள்.
இந்தக் கவுரக்கொலை செய்தமைக்குத்தான் பச்சமலைதேவர் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 1991ல் தண்டனை பெற்று 8 ஆண்டுகளாக சிறையிலிருந்தவரை 1999ல் சந்தித்தது வரை, பரோல் விடுமுறையில் ஓரிரு முறை தான் ஊருக்கு போய் வந்ததாக சொன்னார். 
 
சாதி கவுரத்தையும் குடும்ப கவுரத்தையும் காப்பதற்காக இந்தியா முழுக்க பல படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெற்ற மகளை விட சாதிதான் பெரிது என்று படுகொலைகளை துணிச்சலாக அரங்கேற்றி வருகின்றனர்.
 
 
திவ்யா – இளவரசன், உடுமலைப்பேட்டை சங்கர் – கவுசல்யா, சேலம் கோகுல்ராஜ், அரியலூர் நந்தினி என்று தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கின்றன. காதலையும் வீரத்தையும் தமிழர்களின் உயரிய பண்பாடாக போற்றும் தமிழகத்தில், காதல் கொலை செய்வதுதான் வீரமாக மாறிபோனது. தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு 88 ஆணவப்படுகொலைகளும், இந்தியா முழுக்க 579 ஆணவபடுகொலைகளும் நடந்திருப்பதாக தேசிய ஆவணக்காப்பகம் தமது அறிக்கையில் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.
 
 
பொதுவாக இம்மாதிரி படுகொலைகளை உள்ளூர் காவல்துறை பெரும்பாலும் சந்தேக மரணங்கள் என்றும் தற்கொலை என்றே பதிவு செய்து வழக்கை மூடிவிடுவார்கள். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தான் தற்போது ஆணவக்கொலைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. வடமாவட்டங்களில் இந்தப்படுகொலைகள் சாதாரண நிகழ்வாக நடந்து கொண்டிருந்தன.
பெரியார் மண்ணான தமிழகத்தில் இப்படுகொலைகள் மிகமிக குறைவாக இருந்தன. தற்போது தருமபுரி கலவரத்திற்கு பிறகு காதல் பிரச்சனையை அரசியலாக மாற்றி, அனைத்து சமுதாய பேரவை என்று தலித்துகளுக்கு எதிராக பரப்புரை செய்ததுதான் இன்றைக்கு இருக்கிற சாபக்கேடு. உலகமயமாதலில் 'கலப்பு 'என்பது தவிர்க்க முடியாத ஒன்று. 'தூய்மைவாதம்' என்பது ஒரு வித பாசிசம்தான்.
 
 
உலகத்தில் பாகிஸ்தான் குறித்து தவறான கருத்துகளை தான் இந்தியா பரப்பி வருகிறது. தீவிரவாதத்தை தூண்டுவதாகவும் வளர்ப்பதாகவும், பெண்களை அடிமைப்படுத்துகிற நாடாக காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிபடுத்துகிற வழியில் அக்டோபர் 6, 2016 அன்று ஆவணப்படுகொலைகளுக்கு எதிராக சட்டம் ஒன்றை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குறைந்த பட்சம் 25ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அதிகபட்சமாக மரண தண்டனையுமாக சட்டம் இயற்றி உள்ளனர். அதில் மரண தண்டனையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இரக்கத்தோடு இறங்கி வந்தால்தான் ரத்து செய்ய அதிகாரம் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.
 
 
பெரிய சனநாயகம் பேசுகிற இந்தியாவில் இது குறித்து பேசுவதே அரிதாக இருக்கிறது. சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்தாத வரையில் எந்த நாடும், சமூகமும் முன்னேறியதாகவோ கருத முடியாது. அதற்கு பிறகுதான் நாடு ‘வல்லரசு’, ‘விஞ்ஞானம்’ என்று பெருமை அடித்துக்கொள்ளலாம்.
 
மதுரை சிறையிலிருந்து நான் விடுதலையாகி வெளியே வரும்போது அய்யா பச்சமால் தேவரிடம் கேட்டேன். “இப்படி மகளை தீக்கிரையாக்கிவிட்டு சிறைத்தண்டனை அனுபவிப்பது உங்களுக்கு பாவமாக தெரியவில்லையா என்றேன். அப்போது அவர் ‘தம்பி என்னுடைய சாதி கவுரவத்தை காப்பாத்த தான் அன்னைக்கு அந்த கொடுமைய செஞ்சேன். இப்ப அந்த சாதிசனம் கூட என்ன பார்க்க வரல. பரோல்ல ஊருக்கு போனா கூட கொலைகாரன்னுதான் சொந்த சாதிகாரங்களே காது பட பேசுறாங்க. என் ஆசை பொண்ணை கொன்னுட்டு இப்ப அனாதையா இருக்கேன்’ என்று அழுதார். ஆறுதல் சொல்லிவிட்டு வெளியேறினேன். எத்தனையோ அப்பாக்கள் இப்படித்தான் சாதிகவுரத்திற்காக தங்களுக்கு தாங்களே சவப்பெட்டி அடித்துக்கொள்கிறார்கள்.
படுகொலைகள் நடக்கிற இடத்துக்கு போகும் போதெல்லாம் எனக்குள்ளே பச்சமால் தேவர் வந்து வந்து போவார்.
 
(அந்திமழை மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...