Posted : சனிக்கிழமை, டிசம்பர் 26 , 2020 20:28:19 IST
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் பேசும் ஜாக்கிசானின் ஆக்ஷன் காட்சிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்காக வெளிவந்திருக்கும் படம் ’வான்கார்டு’.
‘வான்கார்டு’ எனப்படும் தனியார் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக வருகிறார் ஜாக்கிசான். அவரது அமைப்பின் கீழ் பாதுகாப்பு பெற்றுவரும் ஒரு நபருக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படுகிறது. ஜாக்கிசானின் பாதுகாப்பு அமைப்பு எதிரிகளை வீழ்த்தி ஜெயித்ததா? என்பது தான் படத்தின் கதை.
வழக்காமன ஜாக்கிசான் படங்களை போலவே கதை வேகமாக நகர்கிறது. படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வான்கார்டு ஏஜெண்டுகள் எதிரிகளை துரத்தி கொண்டு செல்கின்றனர் க்ளைமாக்ஸ் வந்துவிடுகிறது. அவ்வளவு வேகமாக நகர்கிறது கதை. ஜாக்கிசான் படம் என்றாலே காமெடியும் ஆக்ஷனும் தான். இந்த படத்திலும் அனைத்து சண்டை காட்சிகளிலும் காமெடிகளை கொண்டு வர முயற்சித்துள்ளார்கள். அது சில இடங்களில் கை கொடுத்திருக்கிறது.
ஜாக்கிசானுக்கு வயதாகிவிட்டதால் கடினமாக ஸ்டண்டுகளை முயற்சி செய்யவில்லை. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சண்டைக் காட்சிகளில் பழைய வேகத்துடன் கலக்கியுள்ளார். படத்தில் ஜாக்கிசானுக்கு சண்டை காட்சிகள் குறைவு தான் என்றாலும் ஆக்ஷனுக்கு குறைவில்லை. படத்தில் அவரது குழுவில் வரும் ஏஜெண்ட்களாக நடித்த யாங்க் யாங்க், மியா முகி அதிரடி காட்டுகின்றனர். ஆனால், இந்த படத்தில் கார் ஸ்டண்ட்களில் வரும் விஎஃப்எக்ஸ் பணிகள் சரிவர கை கொடுக்கவில்லை. ஜாக்கிசான் நடிக்கும் படத்தில் இது கண்டிப்பாக பெரிய மைனஸ் தான்.
ஆக்ஷன் படமாக ’வான்கார்டு’ தூள் கிளப்பினாலும், ஜாக்கிசானின் சண்டைக் காட்சிகள் குறைவாக இருப்பதால் அவரது ரசிகர்களிடம் இது ஜாக்கிசான் படமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.